கொள்ளை நோய் பாவங்களின் தண்டனை!

கொள்ளை நோய் என்பது சங்கரிப்போனாகிய (யாத்.12:23) தூதரின் செயல்!

கி.பி. 589-ல் இத்தாலியில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் அந்தத் தீபகற்பத்தை மூழ்கடித்து விடுவதாகத் தோன்றியது. வீடுகள் தரைமட்டமாயின. நிலங்கள் பாழாயின. ஏராளமான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் இழந்தனர். திபேர் ஆறு கரையை உடைத்துக் கொண்டு தானியங்கள் நிரம்பிய களஞ்சியங்களை மூழ்கடித்தது.

அடுத்து, ஒரு கொள்ளை நோய் உரோமை நகரைத் தாக்கியது. தெருக்களில் கிடந்த பிணங்கள் நகர மதிலுக்கு வெளியே தோண்டப்பட்ட குழியில் பொது அடக்கம் செய்யப்பட்டன. பாப்பரசர் பெலேஜியுஸும் இந்நோய்க்குப் பலியாகிவிட, திருச்சபையின் புதிய பாப்பரசராக அர்ச். பெரிய கிரகோரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சூழ்நிலையில் ஜெபமும் ஒறுத்தலுமே கொள்ளை நோயை முடிவுக்குக் கொண்டு வரும் என அவர் உறுதியாக நம்பினார். 

கொள்ளை நோயின் வேகம் அதிகரித்த நிலையில் அர்ச். கிரகோரியார் தமது பேராலயப் பிரசங்க மேடையில் ஏறி, மக்களுக்கு மிகுந்த ஆறுதலும் நம்பிக்கையும் தரும் வகையில் பிரசங்கம் செய்தார். கடவுளும், அவரது திருத்தாயாரும் தலையிடும் வரை ஜெப தவத்தால் பரலோகத்தை முற்றுகையிட மக்களைத் தூண்டினார். ஒரு பெரிய பவனிக்கு அவர் ஏற்பாடு செய்தார். 

உரோமையின் ஏழு குன்றுகளில் இருந்து, ஏழு பவனிகள் புறப்பட்டு, பரிசுத்த கன்னிகையின் பேராலயத்தில் ஒன்றுகூட வேண்டும் என அவர் தீர்மானித்தார். தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படியும், இந்தப் பேராபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றும்படியும் மன்றாட மக்களைத் தூண்டினார். 

அந்த மாபெரும் பவனி தொடங்கியது. உரோமை மேற்றிராணிமாரும், குருக்களும், துறவி களும், கன்னியரும், விசுவாசிகளும் அதில் கலந்துகொண்டனர். விசுவாசிகளின் ஒவ்வொரு குழு வுக்கும் ஒரு குரு தலைமை ஏற்று வழிநடத்தினார். வழியிலேயே எண்பது பேர் நோய்க்குப் பலி யாகி செத்து விழுந்தனர். ஆயினும் இந்தப் பரிதாபக் காட்சி மோட்சத்தை உலுக்கியது என்றே சொல்ல வேண்டும். 

கண்களில் கண்ணீரோடும், வாய்களில் தேவ ஸ்துதியோடும், பாவ மன்னிப் பிற்கான மன்றாட்டுக்களோடும், கரங்களில் எரியும் மெழுகுவர்த்திகளோடும் தங்களை முற்றுகை யிட்ட அந்த மக்களின்மீது இரக்கம் காட்ட சேசுவும் அவரது திவ்ய அன்னையும் சித்தம் கொண் டார்கள். அர்ச். கிரகோரியார் அர்ச். இராயப்பர் தேவாலயத்திற்கு அருகிலிருந்த பாலத்தைக் கடந்து கொண்டிருந்தார். 

அப்போது, பேரரசர் ஹேட்ரியனின் கல்லறைக்கு மேலாக அதிதூத ரான அர்ச். மிக்கேல் பரலோகப் பேரொளியின் நடுவே தோன்றினார். 

அவர் இரத்தம் சொட்டும் தமது அக்கினி மயமான வாளைச் சில நொடிகள் உயர்த்திப் பிடித்தபின், அதைத் தம் உறையில் போடுவதைப் பாப்பரசர் பார்த்தார்.  கொள்ளை நோய் நின்று விட்டது என்பதை இந்தக் காட்சி குறித்துக் காட்டியது. கொள்ளை நோய் என்பது சங்கரிக்கிற தூதரைக் கொண்டு கடவுள் பாவத்திற்குப் பழிவாங்கும் செயலாயிருக்கிறது என்பதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிறது.