ஜுலை 27

அர்ச். பந்தலேயோன் - வேதசாட்சி (கி.பி. 303) 

இவர் அஞ்ஞானியும் உயர்ந்த கோத்திரத்தாருமான தாய் தந்தையிட மிருந்து பிறந்து சிறந்த சாஸ்திரங்களைக் கற்றறிந்து, வைத்திய சாஸ்திரத்தில் தேர்ந்து, உரோமாபுரி இராயனுக்கு வைத்தியனானார். 

பந்தலேயோன் கிறிஸ்தவ வேதத்தையறிந்து அதில் சேர்ந்து உத்தம் கிறீஸ்தவனாய் வாழ்ந்து ஏழை எளியவர்களுக்கு இலவசமாக மருந்து கொடுப்பார். மருந்து கொடுப்பதற்கு முன் சேசுநாதருடைய திருநாமத்தை உச்சரித்து விசுவாசத்துடன் அதை அருந்தும்படி கூறுவார். 

அஞ்ஞானிகளுக்கு மருந்து கொடுக்கும்போது சத்திய வேதத்தின் மேன்மையை சொல்லிக் காட்டியதினால் அநேகர் கிறீஸ்தவர்களானார்கள். இவருடைய விசுவாசத்தினிமித்தம் இவர் மூலம் சர்வேசுரன் அநேகப் புதுமைகளைச் செய்தார். 

விஷப்பாம்பு தீண்டி இறந்துபோன ஒரு குழந்தைக்கு இவர் உயிர் கொடுத்ததை அறிந்த அநேகர் ஞானஸ்நானம் பெற்றார்கள். இவருடைய திறமையை அறிந்த மற்ற வைத்தியர்கள் காய்மகாரம் கொண்டு இவர் கிறீஸ்தவனென்று இராயனுக்கு அறிவித்தார்கள். 

பந்தலேயோன் வேதத்திற்காக பிடிபட்டு பலவாறு வேதனைப்படுத்தப்பட்டும் சத்திய வேதத்தை மறுதலிக்கவில்லை. அப்போது இராயனுடைய கட்டளைப் படி சேவகர் வேதசாட்சியை இரும்புத் துரட்டினால் வாரிக் கிழித்தார்கள். எரிகிற பந்தங்களால் அவரைச் சுட்டார்கள். 

கொதிக்கிற ஈயக் கொப்பரையில் அவரைப் போட்டார்கள். துஷ்ட மிருகங்களுக்கு அவரை இரையாக எறிந்தார்கள். கூர்மையான ஆணிகள் வைக்கப்பட்ட சக்கரத்தில் அவரைக் கட்டி சுழற்றினார்கள். இந்த வேதனைகளால் அவர் சாகாமல் காப்பாற்றப்பட்ட படியால் அவர் தலையை வெட்டினார்கள்.

யோசனை

வைத்தியரும் வியாதிக்காரர்களை விசாரிக்கிறவர்களும் வியாதிக்கார ருடைய சரீர வியாதியை குணப்படுத்துவதுடன் அவர்களது ஆத்தும் வியாதி யையும் நீக்க முயற்சி செய்ய வேண்டும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். மாக்ஸிமியனும் துணை., வே.
அர்ச். கொங்கால், ம. 
அர்ச். லுாயிகான், து.