மே 20

அர்ச். பெர்னார்டின். துதியர் (கி.பி. 1444)

இவர் சியென்னாவில் உத்தம் கோத்திரத்தில் பிறந்து சிறு வயதிலே தமது பெற்றோரை இழந்தார். இவர் அடக்கவொடுக்கத்தை அனுசரித்து, அடிக்கடி ஜெபத்திலும் அநேக பூசைகளைக் காண்பதிலும் விருப்பங்கொள்வார்.

இவர் பார்வைக்கு அழகுள்ளவரானதால் தன் கற்புக்கு பழுதுண்டாகாதபடி தேவமாதாவைப் பார்த்து வேண்டிக்கொள்வார். ஒரு துஷ்டன் இவருடைய கற்பைக் கலைக்கப்பார்த்த போது, இவர் அவனை இகழ்ந்ததுடன் இவருடைய முயற்சியால் அநேக சிறுவர்களும் அவனைத் துரத்தி கல்லையும் மண்ணையும் அவன்மேல் எறிந்தார்கள்.

அக்காலத்தில் உண்டான கொள்ளை நோயால் அநேக மக்கள் துன்பப்பட்டபோது, பெர்னார்டின் அவர்களைச் சந்தித்து தம்மால் இயன்ற உதவியைப் புரிந்தார். ஜெபத்தாலும் ஒருசந்தியாலும் தமது ஜீவிய அந்தஸ்தைத் தமக்கு அறிவிக்கும்படி சர்வேசுரனை மன்றாடி, பிரான்சீஸ்கு சபையில் சேர்ந்து உத்தமராய் வாழ்ந்தார்.

இவர் தமது உருக்கமான பிரசங்கத்தால் கணக்கில்லாத பாவிகளை மனந்திருப்பினார். ஆனால் துஷ்டர் இவரை நிந்தித்துத் தூஷித்தபோது மகா துக்கத்துடன், ஒரு நாள், பாடுபட்ட சுரூபத்திற்குமுன் முழந்தாளிலிருந்து, "சுவாமி! நான் இப்படித் துன்பப்படுவதற்கு என்ன பாவம் செய்தேன்” என்றார்.

அப்போது சுரூபம் வாய்திறந்து: “பெர்னார்டின்! சிலுவையில் அறைபட நான் என்ன பாவஞ் செய்தேன்” என்றதைக் கேட்ட அர்ச்சியசிஷ்டவர் துன்பதுரிதத்தால் மனஞ் சோர்வடையாமல் முன்னிலும் சர்வேசுரனுக்கு அதிகமாக உழைத்துத் தமது சம்பாஷனைகளிலும் பிரசங்கங்களிலும் சேசுவின் திருநாமத்தை மகா பக்தியுடன் உச்சரித்து, அர்ச்சியசிஷ்டவராய் காலஞ் சென்றார்.

யோசனை

நாமும் சேசு என்னும் உன்னத நாமத்தின்மீது பக்தி வைத்து அதை சங்கையுடன் அடிக்கடி உச்சரிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். எதெல்பெர்ட், இ.வே.
அர்ச். ஈவோ , மே.