அக்டோபர் 05

அர்ச். பிளாசிதுஸும் துணைவரும் - வேதசாட்சிகள் (கி.பி. 546)

புண்ணியத்தில் சிறந்து விளங்கிய பெனடிக்ட் என்பவரின் ஆதரவில் வளர்க்கப்படும்படி உரோமையிலுள்ள அநேக கனவான்கள் தங்கள் பிள்ளை களை அவரிடம் அனுப்பி வைத்தார்கள். 

அவர்களுக்குள் டெர்டல்லஸ் என்னும் கனவான் 7 வயதிற்குக் குறைவான ப்ளாசிதுஸ் என்னும் தன் மகனை பெனடிக்ட் மடத்திற்கு அனுப்பி வைத்தான். சிறுவனாகிய ப்ளாசிதுஸ் அவ்விடத்தில் இருக்கையில், அருகாமையிலிருந்த ஏரியில் தண்ணீர் கொண்டு வரும்படி போனபோது, அதில் கால் தவறி விழுந்து விட்டார். 

இந்த விபத்தை பெனடிக்ட் புதுமையாக அறிந்து, தண்ணீரிலிருந்து காப்பாற்றும்படி மாறஸ் என்னும் வேறொரு சிறுவனை அனுப்பினார். மடாதிபதிக்கு மாறஸ் கீழ்ப்படிந்து, தண்ணீரின் மேல் ஓட்டமாய் ஓடி ப்ளாசிதுஸின் தலை முடியைப் பிடித்து அவனைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தான். 

அந்த அற்புதத்தைக் கண்டவர்கள் அதிசயித்தார்கள். இதற்குப்பின் ப்ளாசிதுஸ் கல்வியிலும் புண்ணியத்திலும் சிறந்து விளங்கி, வேறு அநேக மடங்களை ஸ்தாபிக்கும்படி பெனடிக்ட்டால் அனுப்பப்பட்டார். 

ப்ளாசிதுஸ் மடங்களை ஸ்தாபித்து அர்ச்சிய சிஷ்டதனத்தில் சிறந்து, அம்மடங்களை மகா திறமையுடன் பரிபாலித்து வரும் காலத்தில், சத்திய வேதத்தை விரோதித்த சில கடற்கொள்ளையர்கள் அந்த மடத்தைக் கொள்ளையடித்து, அதிலிருந்த ப்ளாசிதுஸையும் மற்ற சன்னியாசிகளையும் வேதத்தினிமித்தம் கொலை செய்து, மடத்தை நெருப்பால் சுட்டு எரித்தார்கள். 

இவ்வாறு ப்ளாசிதுஸும் அவருடைய துணைவர்களும் வேதசாட்சி முடி பெற்றார்கள்.

யோசனை

உலகத்தைத் துறந்து, அதற்கு மரித்து உலக காரியங்களில் தலையிடாமல், தேவ ஊழியத்தில் தன் ஜீவிய காலத்தைப் பிரமாணிக்கமாய் செலவழித்து உயிர் விடும் துறவியே மெய்யான துறவி.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். கல்லா . வி.