மே 03

திருச்சிலுவை கண்டெடுக்கப்பட்ட திருநாள். (கி.பி.326)

உரோமை இராச்சியங்களை அஞ்ஞானிகளான இராயர்கள் சில நுாற்றாண்டுகளாக அரசாண்டு வந்தபோது அவர்களுக்குள் கான்ஸ்டான்டைன் என்னும் தைரியமுள்ள இராயர் திருச்சிலுவையால் அதிசயமான ஜெயங் கொண்டபின், அவர் சத்திய வேதத்தில் சேர்ந்து தமது பிரஜைகளும் அதே வேதத்தை அனுசரிக்கும்படி உத்தரவளித்து, திருச்சிலுவையின் பேரால் ஒரு அழகிய தேவாலயத்தைக் கட்டத் தீர்மானித்தார்.

அவருடைய தாயாரான அர்ச். ஹெலனம்மாள் ஜெருசலேம் நகருக்குச் சென்று திருச்சிலுவையைக் கண்டெடுக்க முயற்சித்தாள்.

அஞ்ஞானிகள் நமது கர்த்தர் அடக்கம் பண்ணப் பட்ட கல்லறையின்மேல் கற்களையும் மண்ணையும் போட்டு, பெரிய மேடாக்கி அதன்மேல் ஒரு பொய்த் தேவதையின் கோவிலையும் கட்டியிருந்தார்கள்.

அர்ச். ஹெலனம்மாள் மிகுதியான பணத்தைச் செலவு செய்து அக்கோயிலை இடித்து, மேட்டை வெட்டியெடுத்தபோது, மூன்று சிலுவைகளும், ஆணி, முள்முடி முதலியவைகளும் காணப்பட்டன.

அம்மூன்று சிலுவைகளில் நமது கர்த்தர் மரணமடைந்த சிலுவை இன்னதென்று அறியமுடியாததால், மக்காரியுஸ் மேற்றிராணியாருடைய ஆலோசனைப்படி, அவ்வூரில் சாகக்கிடந்த ஒரு ஸ்திரீ யின்மேல் அந்த மூன்று சிலுவைகளும் ஒன்றன்பின் ஒன்றாய் வைக்கப்பட்டன.

மூன்றாவது சிலுவை அவள் மேல் வைக்கப்படவே, அவள் பூரண சுகமடைந்ததால் அதுவே நமது கர்த்தர் அறையப்பட்ட சிலுவையென்று நிச்சயிக்கப் பட்டது.

பிறகு அந்தப் புண்ணிய அரசியால் அவ்விடத்தில் ஒரு சிறந்த அழகான தேவாலயம் கட்டப்பட்டு, அதில் பரிசுத்த சிலுவை மிகுந்த வணக்கத்துடனும் பயபக்தியுடனும் ஸ்தாபிக்கப்பட்டது. இன்றுவரையிலும் கிறிஸ்தவர்கள் அதை வணங்கி வருவதுமட்டுமன்றி அங்கு அநேக புதுமைகளும் நடந்து வருகின்றன.

யோசனை 

அவமானத்திற்குரிய சிலுவை மரத்தை நமது கர்த்தர் பொறுமையுடன் அங்கீகரித்ததினால், அது மகிமைப்படுத்தப்பட்டது போல, நமது சிலுவையாகிய துன்பதுரிதம், வியாதி முதலியவைகளை நாம் பொறுமையுடன் சகிப்போமாகில் அவை நமக்கு நித்திய மகிமைக்குக் காரணமாகும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். அலெக்சாண்டர், பா.வே.