வெட்டி வீழ்த்திய கால் ஒட்டுதல்

பதுவை நகரில் லியொனார்டு என்ற ஒரு வாலிபன் வாழ்ந்து வந்தான். மனம் போன போக்கெல்லாம் சென்றான். பெற்ற தாயை மிதிக்கும் அளவிற்கு அவன் பணிவற்றவனாக வாழ்ந்தான். ஒரு நாள் தன் தாயை எட்டி உதைத்தான். அவள் வலி தாங்காமல் தரையில் வீழ்ந்தாள்.

அந்தோனியாரின் மறை உரையைக் கேட்டு குற்றம் புரிந்த வாலிபனின் நெஞ்சம் வருந்தியது, திருந்தியது. அந்தோனியாரிடம் பாவசங்கீர்த்தனம் செய்யச் சென்றான்.

அவர் “உன் கால்கள் இடறலாயிருந்தால் அதனை வெட்டி எறி ஏனெனில் நீ பரம் சென்றிட அது தடையாயிருக்கும்" என்ற வேத வசனத்தை நினைவூட்டினார்.

அவரது அறிவுரையை வேதவாக்காக எடுத்துக் கொண்ட அவன் உடனே வீடுசென்று தன் தாயை உதைத்த காலை வெட்டிவிட்டான்.

இச்சம்பவம் காட்டுத்தீ போல் எங்கும் பரவியது. இளைஞனின் தாய் அந்தோனியாரிடம் வந்து நடந்ததைக் கூறினாள். அவளை அமைதிப் படுத்தி அவளுடன் சென்று, அவ்விளைஞனின் காலை எடுத்து இணைத்து 'சிலுவை அடையாளமிட்டு செபித்தார். கால் முன்பு போல் ஒட்டிக் கொண்டது. புதுமையின் செய்தி எத்திக்கும் பரவியது.

இன்று பல பிள்ளைகள் பெற்றோருக்குப் பணிவது இல்லை. தெய்வ பக்தியும் அவர்களிடம் இல்லை. ஆடை அணிவதில் அடக்கமில்லை . நாவடக்கமோ ஒரு சிறிதும் கிடையாது. அறநெறிகள் அவர்களுக்கு எட்டிக்காய், மரம் சாயும் பக்கம்தானே விழும். அந்தோனியார் இவர்களுக்கு நல்லாசிரியராக அமைகின்றார். " பின் தரப்பட்ட வேத வசனங்களை இவர்கள் சிந்தித்து திருந்திட தூய ஆவி அருள் புரிவாராக:

1. தன் தந்தையையும் இகழ்ந்து, தன் தாயின் பிரசவவேதனை களையும் புறக்கணிக்கிறவனது கண்ணை நீரோட்டத்திலுள்ள காக்கைகள் பிடுங்கவும், கழுகின் குஞ்சுகள் அவனைத் தின்னவுங் கடவன்” (பழமொழி 30/17)

2. "தன் தாயை மதிக்கிறவன் - செல்வங்களைச் சேர்த்தவன்; தன் தந்தையை மதிக்கிறவன் - பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவான்; அவன் வேண்டுதலும் கேட்கப்படும், தன் தந்தையை மதிக்கிறவன் நெடுங்காலம் வாழ்வான்” (சீராக் 3:5-7) -

3. தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலை நாட்டும். தாயின் சாபமோ பிள்ளைகளுடைய குடும்பங்களின் அடித்தளத்தைப் பிடுங்கி விடும். (சீராக்: 3/i1) |

4. மகனே, உன் தந்தையின் முதுமையில் அவனை ஆதரி, அவன் வாழ்நாளில் அவனை மனம் நோகச் செய்யாதே, அவன் அறிவு குறைந்ததாயின் மன்னித்துக்கொள். உன் விவேகத்தை முன்னிட்டு அவனை நிந்தியாதே, ஏனென்றால் தந்தைக்கு காண்பிக்கப்படும் இரக்கம் ஒரு போதும் மறக்கப்படமாட்டாது. உன் தாயின் குற்றத்தை சகிப்பதனால் உனக்கு நன்மை ஏற்படும். ஏனென்றால் நீ நீதியில் நிலைநாட்டப்படுவாய். உன் துன்ப நாட்களில் ஆதரிக்கப்படுவாய். (சீராக் 3:14-17)