பேறுபெற்ற தாய்
'இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" என்று குரலெழுப்பிக் கூறினார்.' (லூக்கா 11:27) "இது முதல் எல்லாத் தலை முறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்" (லூக்கா 1:48) என்ற மரியாளின் இறைவாக்கு நிறைவேறுவதை இங்கு முதல்முறையாக காண்கிறோம். இதனை முன்னிறுத்தியே இயேசு அளிக்கும் பதிலும் அமைந்திருப்பதை நம்மால் உணர முடிகிறது: "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்." (லூக்கா 11:28) அந்த பெண் கூறியது தவறு என்று இயேசு கூறவில்லை. தம்மைப் பெற்று வளர்த்ததால் மட்டுமல்ல, இறைவார்த்தையைக் கடைபிடித்து வாழ்ந்ததாலும் 'மரியாள் மிகவும் பேறுபெற்றவர்' என இயேசு புகழ்ந்துரைக்கிறார்.
"காலம் நிறைவேறியபோது, கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்." (கலாத்தியர் 4:4-5) "கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார்." (எபிரேயர் 1:3) இவ்வாறு அனைத்தையும் தாங்கி நடத்தும் வார்த்தையான இறைவனையே தாழ்ச்சியால் தம் வயிற்றில் கருத்தாங்கும் பேறு பெற்றவர் மரியாள். "தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்த படியே, அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்" (லூக்கா 1:69-70) என செக்கரியா இறைவாக்காக உரைத்தது மரியாள் இயேசுவைக் கருத்தாங்கியது பற்றியே என்பது தெளிவு.
"மரியாள், தம் நம்பிக்கையின் அடையாளத்தை எந்த சந்தேகத்தாலும் கறைபடுத்திக் கொள்ளாமல், கடவுளின் திருவுளத்துக்கு தம் கன்னிமையை முழுமையான கொடையாக அர்ப்பணித்தார். மரியாளின் நம்பிக்கையே, அவரை 'மீட்பரின் தாய்' ஆக்கியது. கிறிஸ்துவின் உடலைக் கருத்தாங்கியதைக் காட்டிலும், கிறிஸ்துவில் முழுமையான நம்பிக்கை கொண்டதால் மரியாள் மிகவும் பேறுபெற்றவராக விளங்குகிறார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 506) இவ்வாறு தம் உடலிலும் உள்ளத்திலும் கன்னிமை பழுதுறாதவராக வாழ்ந்ததால் தான், மரியாளால் மானிடமகனாகத் தோன்றிய இறைமகன் இயேசுவை வளர்த்து ஆளாக்க முடிந்தது. ஆண்டவரையே தம் மகன் என்று அழைக்கும் பேறுபெற்றவர் மரியாளைத் தவிர யார்?
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠