பாத்திமா காட்சிகள் - ஜஸிந்தாவின் நோய் அதிகரித்தது

ஜஸிந்தாவின் நோய் அதிகரித்தே வந்தது. அவளை ஒரு பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்று ஆப்பரேஷன் செய்தாலொழிய அவள் குணமடைய மாட்டாள் என்று டாக்டர் கூறி விட்டார். எனவே மார்ட்டோ அவளைத் தம் பொதி மிருகத்தின் மீது ஏற்றி அவ்ரம் நகர் பெரிய மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்.  

அந்த ஆஸ்பத்திரி கட்டடம் நல்ல முறையில் அமைந்திருந்ததோடு ஜஸிந்தா இருந்த அறை நல்ல வெளிச்சமும், காற்றும் உள்ளதாக இருந்தது. தேவ அன்னை அவளுக்குக் கூறிய இருண்ட கட்டடம் அதுவாக இருக்க முடியாது என்பதே அவள் எண்ணம்.

ஒலிம்பியா அங்கு தன் மகளைக் காணச் சென்றாள். ஜஸிந்தா மகிழ்ச்சியாகவே காணப்பட்டாள். எவ்வித முறைப்பாடும் அவள் கூற வில்லை. ஒரு உறவினர் வைத்து விட்டுப்போன நல்ல தின்பண்டம் ஒன்று காணாமல் போனதைப் பற்றிக் கூட அவள் வருந்தவில்லை.

ஜஸிந்தாவின் நுரையீரலைச் சுற்றி நீர் தேங்கியிருந்ததால், நெஞ்சுப் பக்கத்தில் ஒரு துவாரமிட்டு குழாய் மூலம் நீரை வெளியே எடுத்தார்கள்.  அப்படியிருந்தும் இரண்டு மாதமாக அவள் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. வர வர ஜஸிந்தா எலும்பும் தோலுமாகி விட்டாள். தினமும் ஏறக்குறைய 10 ரூபாய் செலவு செய்து வைத்தியம் பார்த்தும் சற்றும் குணம் இல்லாததால் மார்ட்டோ தம் மகளை வீட்டிற்கே கொண்டு வந்து விட்டார்.

ஜஸிந்தாவின் உடல் கொஞ்சம் தேற ஆரம்பித்தது.  அவள் தன் படுக்கையை விட்டு எழுந்து சற்று உலாவத் தொடங்கினாள். பின் பாத்திமா பங்குக் கோவிலுக்கு ஞாயிறு பூசைக்குப் போகும் அளவு தேறினாள். 

ஓரிரு தடவை அவள் கோவா தா ஈரியாவுக்குச் சென்று வந்தாள்.  இதை அறிந்ததும் அவள் பெற்றோர் அங்கு அவள் செல்லக் கூடாதென்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். ஆனால் குளிர்கால ஆரம்பத்திலேயே ஜஸிந்தா மீண்டும் படுக்கையில் விழுந்தாள். முழங்காலிலிருந்து ஜெபமாலை சொல்லக்கூடிய பலம் இருக்கும் வரை அவள் தன் நோயைப் பற்றிக் கவலைப்படவில்லை.  

படுக்கையறையில் முழங்காலிட்டு ஜெபமாலை ஜெபிப்பாள். நெற்றி தரையில் பட பணிந்து, தூதர் கற்றுத் தந்த ஜெபங்களைச் சொல்வாள். இவ்வாறு தலைகுப்புறப் படுத்து ஜெபம் சொல்வது வரவர அவளால் கூடாததாகி வந்தது.

“லூஸியா, நான் தனியே இருக்கும்போது படுக்கையை விட்டு இறங்கி சம்மனசின் ஜெபத்தைச் சொல்வேன். ஆனால் என்னால் தரையில் தலையை வைக்க முடியவில்லை.  அப்படிச் செய்யும்போது விழுந்து விடுகிறேன். ஆதலால் முழங்காலில்தான் ஜெபிக்கிறேன்” என்று லூஸியாவிடம் அவள் கூறினாள்.

இந்த விவரத்தை லூஸியாவிடமிருந்து அறிந்த பங்குக்குரு  சங். பாவுஸ்தினோ பெரைரா, ஜஸிந்தா படுத்தபடியே தன் எல்லாச் செபங்களையும் சொல்ல வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறினார்.

“அது நமதாண்டவருக்குத் திருப்தியாயிருக்குமா?” என்று கேட்டாள் ஜஸிந்தா தன் தாயிடம்.

“ஆம்.  குரு சொல்வதை நீ கேட்க வேண்டும் என்று சேசு விரும்புகிறார்” என்றாள் ஒலிம்பியா.

“சரி அம்மா. இனிமேல் எழுந்திருக்க மாட்டேன்” என்றாள் ஜஸிந்தா.

தன் நோய்ப் படுக்கையிலும் ஜஸிந்தா பாவிகளுக்காகத் தவ முயற்சிகள் செய்து வந்தாள். தாகத்தை அடக்கினாள். தான் மிகவும் விரும்பிய திராட்சைப் பழங்களை யாராவது கொண்டு வந்தால், அது எவ்வளவோ கவர்ச்சியாயிருந்தாலும் தின்னாமல் ஒதுக்கினாள். 

படுக்கையில் எழுந்து இருந்து ஜெபிக்க எவ்வளவோ விரும்பினாள். ஆயினும் தாயின் கட்டளைக்காக படுத்தே இருந்தாள். அந்தக் கஷ்டத்தைத் தவமாக ஏற்றுக் கொண்டாள். எழும்புவதா இல்லையா என்ற மனப் போராட்டத்திலேயே இரவு கழிந்து விடும். ஆயினும் தாயின் சொல்லை அவள் மீறியதில்லை.  

இவற்றையயல்லாம் விட அவள் நெஞ்சில்  இருந்த கூர்மையான வலியை அவள் லூஸியாவிடம் மட்டுமே கூறியிருந்தாள். அந்த வலியை மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அன்புடன் கொடுத்து வந்தாள்.

துரும்பாய் உருமாறிப் போன இச்சிறுமி ஜஸிந்தா பல நுட்பமான உண்மைகளை லூஸியாவிடம் வெளியிட்டு வந்தாள்.  

ஒரு நாள் அவள் லூஸியாவைப் பார்த்து: “லூஸியா, கடவுள் மரியாயின் மாசற்ற இருதயத்தின் வழியாக எல்லோருக்கும் வரப்பிரசாதங்களைக் கொடுக்கிறார் என்று நீ எல்லாரிடமும் சொல்.  என் இருதயத்தில் நான் கொண்டிருக்கும் ஒளியை - நான் சேசுவின் திரு இருதயத்தையும், மரியாயின் மாசற்ற இருதயத்தையும் இவ்வளவு தூரம் நேசிக்கச் செய்து, என்னையும் எரிக்கும் இந்த ஒளியை - எல்லார் இதயங்களிலும் ஏற்றி வைக்க முடியுமானால், எவ்வளவு நன்றாக இருக்கும்!... 

நம் ஆண்டவர் எனக்குள் இருக்கிறார் என்பதை நான் உணருகிறேன். அது எப்படி என்றுதான் தெரியவில்லை.  அவர் கூறுவதை நான் கண்டுபிடிக்கிறேன். ஆனால் நான் அவரைப் பார்க்கவுமில்லை, கேட்கவுமில்லை.  ஆயினும் அவரோடு இருப்பது எவ்வளவு நன்றாக உள்ளது!... 

லூஸியா, நமதாண்டவர் ஏற்கெனவே அதிகம் நொந்து போயிருப்பதால், நாம் இதற்கு மேலும் அவரை நோகச் செய்யக் கூடாதென்று நம் அம்மா கூறினார்களல்லவா? ஆனால் ஒருவரும் இதைக் கவனிக்கிறார்களில்லையே!  நமதாண்டவர் கவலையாயிருக்கிறார்.  அவர்கள் அதே பாவங்களைச் செய்துகொண்டேதான் போகிறார்கள்” என்று கூறினாள்.

லூஸியா பூசைக்குப் போய்த் திரும்பி வந்ததும், “நீ சேசுவை உட்கொண்டாயா?” என்று கேட்பாள் ஜஸிந்தா. “ஆம்” என்பாள் லூஸியா.

“என் பக்கத்தில் வா. உன் இருதயத்தில் நீ மறைந்த சேசுவைக் கொண்டிருக்கிறாய்.  நற்கருணை வாங்க நான் மிகவும் விரும்புகிறேன்” என்பாள் ஜஸிந்தா.

1919-ம் ஆண்டில் ஜஸிந்தா, “தன் சிறிய மோட்ச அன்னையை” மூன்று தடவைகள் கண்டாள். அவளது கட்டிலருகே தேவ அன்னை வந்து நின்று அவளுக்குத் திடமளித்தார்கள். இத்தனிக் காட்சிகளில் மூன்றாம் காட்சி டிசம்பர் 1919-ல் நிகழ்ந்தது. லூஸியாவிடம் ஜஸிந்தா மகிழ்ச்சியோடு இதுபற்றிக் கூறினாள்: 

“நேற்று இரவு நம் அம்மா என்னைப் பார்க்க வந்தார்கள். நான் லிஸ்பனிலுள்ள வேறொரு மருத்துவமனைக்குப் போகப் போவதாகக் கூறினார்கள். நான் ஏராளம் துன்பம் அனுபவித்த பின் தன்னந்தனிமையாகத்தான் இறப்பேன் என்றும் சொன்னார்கள். நான் பயப்பட வேண்டாம் என்றும், ஏனெனில் அவர்களே வந்து என்னைத் தன்னுடன் மோட்சத்துக்குக் கொண்டு செல்வதாகவும் கூறினார்கள்” என்றாள்.

இதைச் சொல்லி சற்று நேரத்தில் ஜஸிந்தா மிகவும் அழுதாள்.  லூஸியாவின் கையைப் பிடித்துக்கொண்டு, “லூஸியா, உன்னை  நான் இனி பார்க்கவே மாட்டேன்” என்று சொல்லிக் கண்ணீர் விட்டாள்.

“ஜஸிந்தா, உன்னை நான் அந்த ஆஸ்பத்திரியில் வந்து பார்ப் பேன்” என்று ஆறுதல் கூறினாள் லூஸியா.

“இல்லை. நீ அங்கு வர மாட்டாய்.  லூஸியா, எனக்காக அதிகம் மன்றாடு. நான் தனியே இறப்பேன் லூஸியா!” 

என்ன சொல்வது!  இளந்தளிரான இச்சிறுமி, ஒன்பது வயதில் ஒருவரும் இல்லாத தனிமையில் இறக்க வேண்டியிருந்ததை முன் கூட்டியே அறிந்து அழும் இக்குழந்தையின் இருதயம் எப்படி நீராய் உருகிப் போயிருக்கும்! எத்தகைய பரித்தியாகம்!