பாத்திமா காட்சிகள் - லூஸியாவுக்கு ஆடு மேய்க்கும் அலுவல்

லூஸியாவின் தந்தை அந்தோனி சாந்தோஸ் வயது முதிர முதிர வேண்டாத குடிப்பழக்கத்தில் விழுந்தார். இதனால் லூஸியாவின் தாய் மரிய ரோஸா குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியதாயிற்று. பக்கத்து வீடுகளில் போய் வேலை செய்ய நேர்ந்தது. ஆதலால் வீட்டைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பும், வயல் வேலை செய்தலூஸியாவின் தமையன் மனுவேலுக்கு உதவி செய்யும் பொறுப்பும் குடும்பத்திலுள்ள மூத்த பெண்மக்கள் மீது விழுந்தன.

லூஸியாவுக்கு மூத்தவளான கரோலின் இதுவரையிலும் வீட்டிலுள் பத்துப் பன்னிரண்டு செம்மறி ஆடு களையும் ஒன்றிரண்டு வெள்ளாடுகளையும் மேய்த்து வந்தாள். லூஸியாவுக்கு வயது ஏழுதான். ஆயினும் வயதை விட அதிகமாய் வளர்ந்திருந்ததால் மரிய ரோசா அவளுக்கு வேலை கொடுக்கத் தீர்மானித்தாள். கரோலின் தையல், நெசவு போன்ற வருமானம் தரும் வேலைகளைச் செய்யவும், லூஸியா ஆடுகளை மேய்க்கவும் வேண்டியது என்று முடிவாயிற்று.

லூஸியாவுக்கு ஒரே மகிழ்ச்சி! ஆனால் பிரான்சிஸம், ஜஸிந்தாவும் அவள் தங்களை விட்டு பகல் முழுவதும் காட்டில் ஆடு மேய்க்கச் செல்வதை சற்றும் விரும்பவில்லை. விளையாடவும், கதைகள் சொல்லவும் இனி யார் இருக்கிறார்கள் என்று கவலைப் பட்டார்கள். அவர்கள் தங்கள் தாய் ஒலிம்பியாவிடம் சென்று லூஸியாவுடன் தாங்களும் தங்கள் ஆடுகளை மேய்த்து வர உத்தரவு கேட்டார்கள். பிரான்சிஸ் வயது 6. ஜஸிந்தா வயது 4. "இந்தச் சிறு வயதில் நீங்கள் எங்கும் போகக் கூடாது'' என்று கண்டிப்பாகக் கூறி விட்டாள் ஒலிம்பியா.

லூஸியா ஒரு நீளக் கோலைக் கையில் பிடித்துக் கொண்டு ஆடுகளுடன் புறப்பட்டாள். ஊரைத் தாண்டி மலைச்சரிவுகளிலும், பரந்த வெளிகளிலும் ஆடுகளை மேய்த்து வந்தாள். அங்கு அவளைப் போல் வேறு சிறுமிகளும் ஆடு மேய்க்க வந்ததால் லூஸியா தனிமையாக அலைய வேண்டியிருக்கவில்லை. ஆடுகள் கொஞ்ச நேரம் மேய்ந்து விட்டு மொத்தமாக மர நிழல்களில் படுத்து அசை போட ஆரம்பிக்கும். அப்போது இந்த இடைச் சிறுமிகள் கூடி விளையாட நல்ல நேரம் கிடைக்கும்.

லூஸியா தன் தந்தைக்குச் சொந்தமான புன்செய் நிலங்கள் உள்ள கோவா தா ஈரியா என்னும் இடத்திற்கு ஆடுகளை அடிக்கடி இட்டுச் செல்வாள். ஆடு மேய்க்கும் சிறுமிகள் இந்த இடத்தை ஏனோ அதிகம் விரும்பினர். கோவா தா ஈரியா ஒரு திறந்தவெளி நிலம். நிறைய ஒலிவ மரங்கள் அங்கு உண்டு. இவற்றினூடே ஆங்காங்கே கரும்பச்சை நிறமான ஹோம் ஓக் இனத்தைச் சேர்ந்த அடர்ந்த குட்டையான மரங்களும் உண்டு. இதில் அஸின் ஹெரா என்ற வகை மூன்று முதல் ஆறடி உயரம் வரை வளரும். அந்த இடம் முழுவதும் ஒரே செம்மண் களிநிலம். அதில் ஈரச்சத்து உண்டு.

சில நாட்களில் இந்த ஆயச் சிறுமிகள் கோவா தா ஈரியா வுக்குச் சற்றுத் தெற்கேயுள்ள வாலினோஸ் என்ற இடத்துக்கு தங்கள் ஆடுகளை ஓட்டிச் செல்வர். அங்கு வரப்புகள் ஒழுங்கில்லாமல் வளைந்தும், நிமிர்ந்தும் காணப்படும். கற்கள் நிறைந்த இடம். பாறைகளுக்கு இடையில் பசும்புல் இருக்கும்.

வாலினோஸுக்குத் தென்புறமாக பூமி மேடாய்க் காட்சி யளிக்கிறது. ஒரு சிறு குன்றுபோல் உயர்ந்து, கற்கள் மிகுந்து காணப் படும். அந்த இடத்திற்கு கபேசோ என்று பெயர். அதாவது மண்டை போன்ற உருவமுடையது என்பது பொருள். அதிலிருந்து பார்த்தால் வெகு தொலைவு வரையிலும் நிலப்பரப்பும், மலைகளும் தெரியும். இடம் சுத்தமாயிருக்கும். அமைதி நிலவும். தங்கி இருக்க இன்பமா யிருக்கும்.

இந்த இடங்களில் ஆடுகளை மேய்த்து, அமைதியில் உலவி சுதந்திரமாக நடனமாடினர் இவ்விடைச் சிறுமியர். அவர்களுக்கே உரிய மகிழ்ச்சியுடன் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவார்கள்.

சிலர் ஆடுவார்கள். பொழுது போவதே தெரியாது. பாடுவதிலும் ஆடுவதிலும் லூஸியாதான் முன்னிற்பாள் என்று அவளுடன் ஆடு மேய்த்த தெரசாள் தன் பிந்திய காலத்தில் ஒன்பது குழந்தைகளுக்குத் தாயாயிருக்கையில் கூறியுள்ளார். அவர்கள் பெரும்பாலும் என்ன மாதிரி பாடல்கள் பாடினார்கள் என்பதற்குக் கீழே வரும் பாடல் ஒரு உதாரணம்:

மரியெனும் நாமம்
அழகிய நாமம்!
என்னை மீட்பாய்
யான் உன் சொந்தம்!

கார்மேல் அன்னாய்
தா உன் அருளை!
உன்னை வாழ்த்திட
மூன்று வேளை!

வாழ்த்திப் போற்றி
நானும் ஜெபிப்பேன்
கார்மேல் அன்னாய்
தா உன் அருளை!

மோட்சத்திற்கு மூன்று வணக்கங்கள்,
சிலுவையின் பாரத்தை நினைத்தபடி!
மும்முறை வேண்டுங்கள்: சேசு காப்பாற்றும்!
சேசு காப்பாற்றும்!! சேசு காப்பாற்றும்!!!

கன்னியர்களுக்குள்ளே உத்தம அர்ச். கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.