நவம்பர் 28

உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் செய்யத்தகும் உச்சிதமான நேர்ச்சிக் காணிக்கையை காண்பிக்கிற விளக்கமாவது.

தியானம்.

உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணத்தக்கதாக மேற்சொன்ன வழிகள் யாவும் நல்ல வழிகளென்று சொல்லவேணுமல்லாமல் மற்றபடியல்ல. ஆனால் அந்த வழிகளெல்லாம் இப்போது காண்பிக்கப்போகிற நேர்ச்சிக் காணிக்கையில் அடங்கியிருக்கிறபடியினாலே, அந்த நேர்ச்சிக் காணிக்கையானது உச்சிதமும், உன்னதமும், மேன்மையுமுள்ளதென்று கூறக்கடவோம். அந்த நேர்ச்சிக் காணிக்கை ஏதென்றும், எப்படிச் செய்யலாமென்றும், அதனாலே வருகிற ஞான நன்மைகள் எவ்வளவென்றும் இப்போது பார்ப்போம்.

 முன் விவரித்தவண்ணமே, அந்தந்த புண்ணியத்துக்கும், அந்தந்த நற்கிரியைக்கும், பேறுபலன் , மன்றாட்டுப் பலன் , பரிகாரப் பலன் ஆகிய இம்மூன்று பலனுண்டு. மீண்டும் திவ்விய பூசையானது தேவ வணக்கத்துக்கும், நன்றியறிந்த தோத்திரத்துக்கும், வேண்டிய வரங்களைப்  பெறுதலுக்கும் உதவுகிறதுமல்லாமல் பாவப் பரிகாரத்துக்கும் உதவுவது நிச்சயம் தான் . அந்தப் புண்ணியங்களினாலும் , அந்தந்த நற்கிருத்திரியங்களினாலும் , திவ்விய பூசைகளினாலும் நமக்குச் சொந்தமாய் வருகிற அந்தப் பரிகார பலனை முழுமையும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு நேர்ச்சிக் கடனாக காணிக்கை வைக்கிறதே மேற்சொன்ன உசித காணிக்கையாகும் .

மீளவும் நாம் மரித்தபின் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கும் நம்முடைய ஆத்துமத்துக்காக என்னஜெபம் தானதர்மம் செய்வார்களோ, எத்தனை பூசை பண்ணுவிப்பார்களோ, அவைகளினால் நம்முடைய ஆத்துமத்துக்கு வரப்போகிற பரிகாரப்பலனையெல்லாம் முன்னமே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுக்கிறதேயாம். அந்த நேர்ச்சிக் காணிக்கை அதிகமதிகமாய் உதவும்படியாகவும், உத்தரிக்கிறஸ்தலத்துக்கு இராக்கினியான தேவமாதாவின் கையிலே எல்லாவற்றையும் ஒப்பித்து வைக்க வேணும்.

அப்படியே, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக நம்முடைய புண்ணியங்களினாலும் நற்கிரியைகளினாலும் நமக்கு வருகிற பரிகாரப் பலனையும், இனிமேல் நமக்காகச்செய்யப்படும் நற்கிருத்தியங்களாலும் திவ்விய பூசைகளாலும் நமக்கு வரப்போகிற பரிகாரப் பலனையும் சேர்த்து தேவமாதாவின் கையிலே நேர்ந்து ஒப்புக்கொடுக்கிறதே இந்த உச்சித நேர்ச்சிக் காணிக்கையாம்.

இந்த நேர்ச்சி காணிக்கை வாயினாலேயானாலும் மனதிலென்கிலும் செய்யத்தகும். அதை அடிக்கடி புதுப்பிக்கிறது நல்லதாயினும், அவசரமில்லை. அதனால் அற்பப்பாவத்துக்காவது சாவான பாவத்துக்காவது ஏதுவான ஒரு கடமையுமில்லை. அதை செய்தபிற்பாடு மனசில்லாதே போனால் விட்டுவிடலாம்; அப்படி விட்டுவிட்டால் அதனால் வருகிற ஞானப் பிரயோசனத்தை இழந்துபோகிற தல்லாது யாதொரு பாவம் இராது.

இந்த உச்சித நேர்ச்சிக் காணிக்கையை அர்ச். பாப்பானவர் அங்கீகரித்ததுமன்றியே, அதைப் பக்தியுள்ள எல்லோரையும் செய்ய ஏவிக்கொண்டும், செய்தவர்களுக்குத் திருச்சபையின் பொக்கிஷங்களைத் திறந்து ஏராளமான ஞான நன்மைப் பலன்களை அளித்துக் கொண்டும் வருகிறார். ஆனதினாலே திருச்சபையிலே எங்கும் எண்ணிக்கையில்லாத குருக்களும் சந்நியாசிகளும் கன்னியாஸ்திரிகளும் ஸ்திரி பூமான்களான கிறிஸ்துவர் களும் இந்தச் சுகிர்த நேர்ச்சிக் காணிக்கையைச் செய்கிறார்கள்.  இந்த சிந்து தேசத்திலே முதலாய் அநேகம் பேர்கள் அப்படி நேர்ந்துக் கொண்டார்களென்று அறிந்திருக்கிறோம்.

கிறிஸ்துவர்களே! நீங்களும் அப்படிச் செய்வீர்களேயானால் சர்வேசுரனுக்கு தோத்திரமும், தேவமாதாவுக்கு எவ்வளவு சந்தோஷமும், ஆத்துமாக்களுக்கு எவ்வளவு ஆறுதலும், உங்களுக்கு எவ்வளவு பிரயோசனமும் வருமென்பது சொல்லிலும் நினைவிலும் அடங்குந்தன்மை அல்ல. அதனாலே உங்களுக்கு யாதொரு குறை உண்டாகுமென்றும், நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கும்போது உங்களுடைய பரிகாரப் பலனெல்லாம் முன்னமே கையளித்துவிட்டதைப் பற்றி உதவி சகாயமின்றி அதிக வருத்தப்பட வேண்டியதாய் இருக்குமென்றும் நினைக்க வேண்டாம்.

இந்த உச்சித நேர்ச்சிக் காணிக்கையை மேலான தேவசிநேகத்தினாலும் மேலான பிறசிநேகத்தினாலும் செய்கிறீர்கள் என்கிறதினாலே, சர்வேசுரனுடைய சந்நிதியிலே உங்களுக்கு அதிக பேறுபலனும் அதிக பரிகாரப் பலனும் உண்டாகுமென்கிறதற்குச் சந்தேகமில்லை. அதனாலே நீங்கள் உத்தரிக்க வேண்டிய வேதனைகள் சீக்கிரத்தில் முடிவதுமல்லாமல், மோட்ச பேரின்பத்தில் உங்களுக்கு அதிக மகிமையும், அதிக வெகுமதியம் கிடைக்கும். அர்ச் அமிர்தநாதர் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு நாம் கொடுக்கிறதெல்லாம் நமக்கு இவ்வுலகத்தில் தேவ வரங்களைப் பெறுவிக்குமென்றும் நாம் இறந்த பிற்பாடு அது ஒன்றுக்கு நூறாகக் கொடுக்கப் படுமென்றும் சொல்லியிருக்கிறார்.

இந்த உச்சித நேர்ச்சிக் காணிக்கையைச் செய்யத்தகும் வகையாவது:

ஏக திரித்துவமான சர்வேசுரா ! உமக்கு அதிக தோத்திரத்தைச் செலுத்தவும், எங்கள் இரட்சகரான கேசுகிறீஸ்துநாதரை கண்டுபாவிக்கவும், தேவமாதாவுக்குப் பிரியப்படவும், நான் மனம் பொருந்தி உத்தரிக்கற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயமாக இப்போது எனக்குச் சொந்தமான பரிகாரப் பலன்யாவற்றையும், இனி எனக்கு வரத்தகும் பரிகாரப் பலன் எல்லாவற்றையும், என் மரணத்துக்குப்பின் எனக்காகச் செய்யப்படும் புண்ணிய தர்மங்களினாலும், திவ்விய பூசையினாலும் வரும் பரிகாரப்பலன் சகலத்தையும், தேவ மாதாவின் கையிலே வைத்துத் தேவரீருக்கு முழுமையும் கையளித்து ஒப்புக் கொடுக்கிறேன்.

ஆண்டவரான சர்வேசுரா!  இந்த என்னுடைய நேர்ச்சிக்காணிக்கையை என் ஆத்துமத்துக்குப் பிரயோசனமாகக் கிருபையாய் ஏற்றுக் கொள்ள வேணுமென்று பிரார்த்தித்துக்கொள்ளுகிறேன். விவரம்...

1-வது: நாம் சொன்னாற்போல இந்த நேர்ச்சிக் காணிக்கைக்கு யாதோர் கடனில்லை; அதைச் செலுத்தினால் புண்ணியமும் பலனும் சம்பாவனையுமாயிருக்கும். அதை செய்தபிற்பாடு நிறுத்தி விட்டாலும், அந்தப் புண்ணியப்பலன் இல்லாமற் போவதேயன்றிப் பாவமில்லை.

2-வது அப்படிப்பட்ட சுகிர்த நேர்ச்சிக் காணிக்கையைச் செய்திருந்தாலும், செய்யக்கடமைப்பட்டிருக்கிற கடன் முகாந்தரமாகவாவது நியாயத்துக்கென்கிலும் யாதொரு ஜெபங்களுக்கும் தர்மங்களுக்கும் விக்கினமாயிராது. அதாவது நம்முடையவர்களின்ஆத்துமங்களுக்கும், சிநேகிதர் உபகாரிகள் சபையார் முதலியவர்களுடைய ஆத்துமங்களுக்கும் நாம் விசேஷமாய் வேண்டிக்கொள்ள வேணுமென்று நமக்குக் கடனிருக்கிறபடியினாலே, நாம் முன்னே சொன்ன வண்ணமே நேர்ந்துவிட்ட நமது பரிகாரப் பலன் அவர்களுக்குத் தானே முதலில் உதவுமென்கிறது நிச்சயம்.

இப்பேர்ப்பட்ட உச்சித நேர்ச்சிக் காணிக்கையைச் செய்பவர்களுக்கு அர்ச் பாப்பானவர் அளித்த விசேஷபலன்:

முதலாவது: இந்த நேர்ச்சிக் காணிக்கையைச் செய்யுங் குருக்கள் அவர்கள் தினந்தினம் செய்யும் திவ்விய பூசையிலே பரிபூரண பலன் அடைவார்கள்.

இரண்டாவது : மற்ற விசுவாசிகள் திவ்விய நற்கருணை வாங்குகிறபோதெல்லாம் பரிபூரண பலனை அடைவதுமன்றியே, திங்கட்கிழமைதோறும் சாவான பாவமில்லாத ஆத்துமத்தோடு ஆத்துமாக்களைக் குறித்துத் திவ்விய பூசை காண்கிறபோதெல்லாம் பரிபூரணபலனை அடைவார்கள். இந்தப் பலன்களை அடைய, யாதொரு கோவிலைச் சந்தித்து, அர்ச். பாப்பானவருடைய சுகிர்த கருத்துகள் நிறைவேற வேண்டிக்கொள்ளவேண்டியதுமல்லாமல், அந்தப் பலன்களை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டியது.

மூன்றாவது:  தாங்கள் அடையக்கூடுமான மற்றச் சகலமான பலன்களையும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுக்கலாம்.

நான்காவது : வியாதியினாலேயாவது, கோவிலில்லாத இடங்களில் செய்யவேண்டிய வேலையினிமித்தமாவது, வேறே விக்கினத்தினாலேயாவது திங்கட்கிழமை பூசைக்கு வரக்கூடாதவர்கள், ஞாயிற்றுக்கிழமைப் பூசைக் கண்டு மேற்சொன்ன பலன்களை அடையலாமென்று அறியக் கடவீர்களாக.

இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம் 

அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே! எனக்காதரவாயிரும்.

செபம் 

எங்கள் அடைக்கலமும் ஆரோக்கியமுமாயிருக்கிற சேசுநாதரே!  தேவரீர் எங்களுக்காகப் பூங்காவனத்திலே தரையில் ஒடும்வரை சர்வாங்கமாய் இரத்தவேர்வை வேர்த்து மகா கோபதாபம் அநுபவித்தீரே. இந்த உம்முடைய விலைமதிப்பற்ற இரத்தத்தைப் பார்த்து, மரித்த கிறிஸ்துவர்களுடைய ஆத்துமங்களுக்குக் கிருபை செய்தருள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.

இருபத்தெட்டாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது:

மேற்சொன்ன நேர்ச்சிக் காணிக்கையை மனதிருந்தால் செய்கிறது; அல்லது ஆத்துமாக்களைக் குறித்து 10 பரமண்டல மந்திரமும் 10 பிரிய தத்த மந்திரமும் வேண்டிக்கொள்ளுகிறது.

புதுமை 

கர்த்துசியான் சபையில் உட்பட்டிருந்த தியோனிசியுஸ் என்கிறவர் எழுதின சுகிர்த சரித்திரமாவது அக்காலத்திலே புண்ணியம் நிறைந்த ஜெர்த்துருத் என்னப்பட்ட ஒரு கன்னியாஸ்திரி வாழ்ந்து வந்தாள். அவள் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் மிகவும் பக்தியாயிருந்தபடியினாலே அந்த ஆத்துமாக்களுக்கு உதவியாகத் தாம் செய்த ஜெபதப தான தர்மம் எல்லாவற்றையும் சேசு கிறிஸ்துநாதருடைய கையிலே அவர்களுக்கு ஒப்புக் கொடுப்பாள். அதனாலே சேசுகிறீஸ்துநாதர் சுவாமி இன்னின்ன ஆத்துமங்களுக்காக விசேஷமாய்ப் பிரயாசைப் படவேணுமென்று அவளுக்குப் புதுமையாய் அறிவித்துக் கொண்டு வருவார். அப்போது அந்தப் பக்தியுள்ள கன்னிகை அதிக ஜெபமும் அதிக தவமும் பண்ணுவாள்.

ஆத்துமாக்களோவென்றால் அவளுக்கு அநேகமுறை காணப்பட்டு தங்களுக்காகப் பட்ட பிரயாசைகளுக்கு நன்றியறிந்த மனதோடு தோத்திரம் பண்ணுவார்கள். அப்படி அவள் எந்நாளும் செய்து கொண்டு வந்தாள். கடைசியாய், வயது சென்று அவளே வியாதியாய் விழுந்து அவஸ்தையானாள். அச்சமயத்திலே துர்மனப்பசாசு அவளுக்குக் காண்பித்து, அவளைப்பார்த்து சிரித்து நகைத்து இப்போது உனக்கு உத்தரிக்கிற ஸ்தலத்திலே சரியான வேதனை வரப்போகுது. நீ செய்த புண்ணிய தர்மமெல்லாம் மற்ற ஆத்துமாக்களுக்கு கையளித்து விட்டுவிட்டதினால், நீ வெறுமனே சாகப்போகிறாய். நீ செய்த எல்லாக் குற்றங்களுக்கும் யாதோர் உதவியின்றி உபாதிக்கப்படுவாய் என்றது.

இந்தப் புண்ணியவதி அச்சோதனையால் களைத்து மயங்கி ஐயையோ எனக்கென்ன வருமோ? மற்றவர்களுக்கு என்னுடைய நற்கிரியைப் பலன்களெல்லாம் கையளித்த பிற்பாடு எனக்கு ஒன்றுமில்லையே. ஐயையோ எனக்கு வரப்போகிற உத்தரிப்பில் எந்த ஒரு ஆறுதலில்லாவிட்டால் எப்படி அதைப் பொறுத்துக்கொள்வேன்? என்னாண்டவரே! அப்படி ஆகுமோ? என்று அங்கலாய்த்துச் சொன்னாள். அகடினமே சேசு கிறிஸ்துநாதர் சுவாமி கிருபையுள்ள முகத்தோடு அவளுக்குத் தோன்றி துஷ்டப்பசாசைத் துரத்தி அவளுடைய களைப்பைத் தீர்த்து அவளுக்கு ச் சொன்னதாவது ஜெர்த்துருத்தென்பவளே! நீ துக்கப் படுகிறதற்கு காரணம் என்ன என்றார்.

அதற்கவள் ஆண்டவரே, உமக்கு தெரியாத காரியமோ? நான் செய்த புண்ணிய தருமமெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குக் கையளித்து விட்டேனே. இப்போது என் கையில் ஒன்றுமில்லாமல் சாகப்போகிறேனே என்றாள். அதற்கு ஆண்டவரான சுவாமி சிரித்த முகத்தோடு என் மகளான ஜெர்த்துருத் தென்பவளே, ஏன் துக்கப்படுகிறாய்? நீ ஆத்துமாக்களின் பேரில் வைத்த பக்தியானது எனக்கு வெகு பிரியமாய் இருக்கிறபடியினாலே உன் குற்றங்களுக்கு வரத்தகுமான வேதனையெல்லாவற்றையும் இக்கணமே மன்னித்துக் கொள்ளுகிறோம்.

நம்மைக் குறித்துத் தர்மம் செய்கிறவர்களுக்கு ஒன்றுக்கு நூறாக கொடுப்போமென்று நாம் வாக்களித்திருக்கிறோமென்கிறதினாலே, அம்மாத்திரத்துக்கு மோட்சத்தில் உன் வெகுமதி பெருகும். உன்னாலே உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்களெல்லாம் உன்னைப் பரமவிராச்சியத்துக்குக் கொண்டாட்டமாய்க் கூட்டிக்கொண்டுப்போக எதிரே வருவார்கள் என்று சொல்லி மறைந்துபோனார். ஜெர்த்துருத்தம்மாளோவென்றால் தாம் கண்டதும் கேட்டதும் கிட்ட நின்ற மற்ற கன்னியாஸ்திரிகளுக்கு வெளிப்படுத்தி ஆனந்த சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து பாக்கியமாய் மரித்தாள்.

கிறிஸ்துவர்களே! உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவியாக என்னத்தைச் செய்திருப்பீர்களோ அதற்கு நூறுபங்கு அதிகமாய் சுவாமி உங்களுக்கு தருவாரென்று அறிந்து, அச்சம் பயமின்றி உங்களுடைய புண்ணிய
தருமமெல்லாம் அந்த ஆத்துமாக்களுககு ஒப்புக்கொடுக்கக் கடவீர்களாக .

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.