இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 27-ம் தேதி.

இயேசுவின் திரு இருதயம் பரித்தியாகத்துக்கு மாதிரிகை.

பரித்தியாகம் என்கிற புண்ணியம் இயேசுவின் திரு இருதயத்துக்கு எவ்வளவு மனமொத்தது என்றால், அவருடைய வாழ்நாள் முழுதும் ஓர் தொடர்ந்த பரித்தியாக முயற்சியாயிருந்தது. நமது ஆசாபாசங்களுக்கு விரோதமாய்ப் போராடவும், நமது உடலை ஒறுக்கவும், நமது ஆண்டவருக்குப் பிரியமில்லாதது எதையும் நமது சுபாவத்துக்கு இல்லையென்று மறுதலிக்கவும், நமது ஆத்தும் நன்மைக்காக அவர் அனுப்பும் சிலுவைகள், சோதனைகள், பலிகள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு அவருக்கு ஒப்புக்கொடுக்கவும், இந்தப் புண்ணியம் நமக்குப் பலம் அளிக்கிறது. பரித்தியாக முயற்சி புனிதர்களுக்கு மட்டும் உரியதென்றும், தாங்கள் புனிதர்கள் அல்லாததால், சுயபலி, சுயஜெபம் தங்களுக்கல்லவென்றும் சில கிறீஸ்துவர்கள் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் நமது சுபாவத்தால் ஏவப்பட்ட ஓர் தவறை நமது ஆத்துமத்துக்கு மிக அபாயகரமானது. புனிதர்கள் புனிதர்களாய் பிறக்கவில்லை. தங்கள் ஆசாபாசங்களோடு எதிர்த்துப் போராடாத பட்சத்தில் பலர் பெரும்பாவிகளாயிருந்திருப்பார்கள். "யாதாமொருவன் நமது பின்னால் வர ஆசைப்பட்டால், அவன் தன்னைத்தானே மறுதலித்து, தன் சிலுவையைச் சுமந்து கொண்டு நம்மைப் பின்பற்றட்டும்." (மத் 16:29) என்று நமதாண்டவர் சகல மனிதர்களுக்கும் சொல்லுகிறார். ஆதலால் இயேசுக்கிறிஸ்துவின் சீடனாயிருக்க, விசேஷமாய் திரு இருதயத்துக்கு அன்பராயிருக்க பரித்தியாகம் இன்றியமையாதது.

நமது ஆசாபாசங்களோடு எதிர்த்துச் சண்டை செய்யாவிட்டால், அவைகள் நம்மை நித்திய கேட்டுக்குள்ளாக்கும். இது காரியத்தில் புனித சின்னப்பர், நீ சரீரத்துக்கு ஏற்றபடி வாழ்ந்தால் சாவாய் (உரோ 8:13) என்று சொல்லுகிறார். நமது உடல் ஆசிக்கிற இன்ப சுகங்களை அவைகளுக்குக் கொடுக்கிறவர்களும், மோசமான வாசகங்கள், அபாயமான படங்கள், துஷ்ட சகவாசம் முதலியவைகளில் காலம் போக்குகிறவர்களும், ஒறுத்தல், சுய பலி, சுயஜெயம் முதலிய புண்ணிய முயற்சிகளை கடைபிடிக்காமல் விடுகிறவர்களும், நாளுக்குநாள் ஞான பலவீனர்களாகி சாவான பாவத்தில் விழுந்து தங்களாத்துமத்தை இழந்து போவார்கள்.

நம்முடைய கெட்ட சுபாவத்துக்கு மிகவும் அருவருப்பான இந்தப் புண்ணியத்தை நாம் அநுசரிக்கும்படி செய்ய, இயேசு ஓயாத பரித்தியாக முயற்சி நிறைந்த வாழ்வை நமது ஆத்தும் நன்மையை முன்னிட்டு ஏற்றுக் கொண்டார். புனித சின்னப்பர் திவ்விய இரட்சகரைப் பற்றி: சேசுக் கிறிஸ்துநாதர் தமக்குத் தாமே பிரியப்படத் தேடினதில்லை (உரோ 15:3) என்று சொல்லுகிறார். அவர் தமது சொந்தப் பிரியத்தை கடைபிடித்திருந்தால் மோட்ச பாக்கியத்தில் சுகமே இருந்திருக்கலாம் அல்லது இவ்வுலகத்துக்கு அவர் வந்தபோது, செல்வம், பெருமை, மகிமையோடு வந்திருக்கலாம். ஆனால் ஒறுத்தலும் பலியும் நிறைந்த வாழ்வைத் தெரிந்துகொண்டு, தமது பிதா தமக்குக் கொடுத்தருளிய சகல நிந்தை அவமான வேலைகளையும் பூரண மனதோடும் சந்தோஷத்தோடும் ஏற்றுக்கொண்டு, முப்பத்து மூன்று வருஷகாலம் வேதசாட்சியின் வாழ்வு வாழ்ந்து கடைசியாக சிலுவையில் உயிர்துறந்தார்.

புனிதர்கள் நமது ஆண்டவருடைய திவ்விய மாதிரிகையைப் பின்பற்றினார்கள். இவ்வுலக சுகத்துக்காகவல்ல, பரலோக பாக்கியத்துக்காக தாங்கள் படைக்கப்பட்டதை நினைவுகூர்ந்து, தங்கள் உடல் கேட்கும் அடாத திருப்திகரங்களை, திருவருட் சாதனங்கள் உதவியால் மறுதலித்தார்கள்; தங்கள் கண்களையும், இருதயத்தையும் இயேசுகிறிஸ்துவின் சிலுவையின் பக்கமாய் திருப்பினார்கள், தங்களை மயக்கிக்கொடுக்கத் தேடும் படைக்கப்பட்ட பொருட்களைப் பார்த்து : "நாங்கள் உம்முடைய அடிமைகளல்ல; பரலோக பாக்கியமும் பரலோக காரியங்களுமே எங்களுடைய பொய்யான வீண் மகிமையையும், கடந்து போகும் வெட்கத்துக்குரிய இன்பத்தையும் கண்டு நாங்கள் ஏமாந்து போகமாட்டோம்; அநித்திய காரியங்களையெல்லாம் நிந்தித்து நித்தியத்துக்காக மட்டும் வாழ்வது எங்கள் கடமை; என்றும் அழியாத பாக்கியமே எங்கள் உன்னத பதவி" என்பார்கள்.

இவ்வித உன்னத எண்ணங்களையும் உத்தம் மாதிரிகைகளையும் நாம் பின்பற்றி அநுசரிக்கிறோமா? இவ்வுலகில் மிக அவசரமான ஆத்தும் மீட்பராகிய ஒரே முக்கிய அலுவலை எத்தனை கிறீஸ்துவர்கள் மறந்து போகிறார்கள்; உலக காரியங்களுக்குப் பின் தணிக்கக் கூடாத தாகத்தோடு ஒடுகிறார்கள். அழியாத பரலோக பாக்கியத்தின் மட்டிலோவென்றால் அச்சத்துக்குரிய சோம்பலாயிருக்கிறார்கள்! அபாயமும் பாவமான சந்தோஷங்களைத் தங்கள் உடல் அனுபவிக்க இடங்கொடுக்கிறார்கள். தங்கள் வீண் மகிமையைச் சற்றே பங்கப்படுத்துகிற ஒரு சொற்ப வார்த்தையால் கலங்கி ஆறாக் கோபத்துக்கு உள்ளாகிறார்கள். இயேசுவின் திரு இருதயப் பக்தர்களோவெனில், திவ்விய இயேசுவின் பற்றுதல்களையும், மாதிரிகைகளையும், அவருடைய பத்தினியாகிய புனித மார்கரீத் மரியாம்மாளுடைய புண்ணியப் பயிற்சிகளையும் தாராள குணத்தோடு பின்பற்றுவார்கள்.

புனித மார்கரீத் மரியம்மாள் தன் தலைவருக்கு இது காரியத்தில் எழுதினதாவது : "அன்புக்குரிய இயேசுவின் திரு இருதயமானது சகலவித சிலுவைகளையும் எனக்கு அனுப்புவதினால் எனக்குண்டாகும் பலவீனமும் களைப்பும் எம்மாத்திரமென்றால், பாவம் நிறைந்த இச்சடலத்தை வெகு பிரயாசையோடு நான் சுமக்கவேண்டியிருக்கிறது. நான் சில சமயங்களில் துன்ப வேதனைகளால் சோதிக்கப்பட்டு எவ்வளவு ஆறுதலற்றவளாயிருந் தேனென்றால், என் அன்புக்குரிய ஆண்டவர் எனக்கு உதவி செய்து என்னைத் தைரியப்படுத்தாவிடில் நான் இறந்திருப்பேன்; என் நிலைமை அவ்வளவு சகிக்கக்கூடாத நிலைமையாயிருந்தது. என் ஆத்துமத்திற்கும், சரீரத்திற்கும் நானே ஒரு சிலுவையாயிருக்கிறேன்.”

ஆனால் சிலுவைகளும், துன்பங்களும் அவளுடைய இருதயத்துக்கு வெகு மனரம்மியமாயிருந்தன. ஏனென்றால் இயேசுவோடு அவருடைய அன்புக்காக அவைகளை அனுபவித்தாள். திவ்விய இயேசு அனுப்பிய சிலுவைகள் போதாதென்றாற்போல விசேஷ ஒறுத்தல் முயற்சிகளையும், தன் சுபாவ சந்தோஷத்துக்கு எதிரிடையான இடைவிடாத பரித்தியாகப் பலிகளையும் அனுசரித்து வந்தாள்.

வரலாறு

புனித மார்கரீத் மரியம்மாள் தான் உலகத்திலுள்ள சகலரிலும் பெரும் பாவியென்றும், ஆதலால் மனிதர்களுடைய புகழ்ச்சிக்கும் மதிப்புக்குமல்ல, அவர்களுடைய இகழ்ச்சிக்கும் அவமதிப்புக்குமே தான் பாத்திரமென்றும் உண்மையில் எண்ணிக் கொள்வாள். இம்மையிலும் மறுமையிலும் மனிதர்களெல்லாரும் தன்னை நிந்தித்து மறந்து போகவேண்டுமென்பதே அவளுடைய பெரிய ஆசை. இதை முன்னிட்டே "எந்த சமயத்திலும் என்னைத் தாழ்த்தி ஒறுக்கச் செய்வதைவிட நீங்கள் உங்கள் அன்பின் அதிக பெரிய அத்தாட்சி எனக்குக் காட்ட முடியாது" என்று தன் சிரேஷ்டருக்கு எழுதுவாள். இந்த வார்த்தைகள் அவளுடைய இருதயப்பற்றுதல் இன்னதென்று உத்தமமாய் எடுத்துக் காட்டுகிறது. பிறர் தன்பேரில் குற்றம் சாட்டும்போது அல்லது தன்னைக் கண்டிக்கும் போது சாக்குப் போக்குச் சொன்னவளல்ல. தமது திருப்பாடுகளின் போது நிந்தை அவமானங்கள் நடுவில் மவுனமாயிருந்த திவ்விய இரட்சகரைப் பின்பற்ற சமயங் கிடைக்கிறதைப் பற்றி சந்தோஷப்படுவாள். தன்னைத் தாழ்த்திக் கண்டித்தவர்களைத் தன் நல்ல நண்பர்களாகவும் பேருபகாரிகளாகவும் எண்ணித் தன் ஜெபத்தில் அடிக்கடி அவர்களுக்காக இயேசுவின் திரு இருதயத்தை நோக்கி வேண்டிக்கொள்வாள்.

அவளிடத்தில் விளங்கிய தாழ்ச்சிதான், மடத்தின் மகிமை உத்தியோகங்களைத் தன்னாலியன்ற வரையில் தவிர்த்து விலக்கி நடக்கும் படி அவளைத் தூண்டினது. தான் எல்லாருக்கும் அடிமையென்றும், எவருடைய கவனிப்புக்கும் தான் தகாதவளென்றும் எண்ணி, எல்லோரிலும் கடைசியாய் நடத்தப்பட வேண்டுமென்கிற ஆவலால் மிக்க தாழ்ந்ததும் வருத்தமுமான அலுவல்களில் தன் சகோதரிகளுக்கு உதவிபுரிய எப்போதும் தயாராயிப்பார்கள். இவைகள்தான் புனித மார்கரீத் மரியம்மாளின் பரிசுத்தமும் உத்தமமுமான எண்ணங்களும் நன்மாதிரிகையுமாம். இந்த புனிதர்களின் வாழ்வை நாம் வாசிக்கும்போது, நமக்கும் இந்த சகோதரிக்கும் வெகுதூரம் இருக்கிறதென்று உணர்ந்தால், நிந்தை அவமானங்களுக்கு அஞ்சி ஓடுகிற நாம் உண்மையாகவே தாழ்ச்சியில் குறைவுள்ளவர் களென்றாகிலும் ஏற்றுக்கொள்ளக் கடவோம். நிந்தை அவமானங்களை ஆசித்துத் தேடும் அவ்வளவு மேலான உத்தமதனம் நம்மிடத்திலில்லா திருந்தாலும், நம்முடைய நடத்தைக்கு இயேசுவின் திருஇருதயம் அனுப்புகிற நிந்தை அவமானங்களையும், சிலுவைகளையும் பொறுமையோடாகிலும் ஏற்றுக் கொள்ளவேணும். இவ்வளவு புண்ணியமாகிலும் நம்மிடமிருக்க வேண்டுமென்று நமது ஆண்டவர் எதிர்பார்க்கிறார்.

நம்முடைய கேவலமான சுபாவத்துக்கு இவ்வளவு எதிரிடையாயிருக்கிற இந்தப் புண்ணியத்தை நாமே நமது சொந்த பலத்தால் அநுசரிக்க முடியாது, ஆனால் தேவ கொடையால் எல்லாம் கூடும். ஆதலால் ஜெபம், பக்திக்கிருத்தியங்கள், இயேசுவின் திரு இருதயத்தோடும், தூய மரியாவின் மாசற்ற இருதயத்தோடும் ஒன்றிப்பு, திருவருட்சாதனங்களை அடிக்கடி பெறுதல், பஞ்சேந்திரியங்களை ஒறுத்தல் முதலிய வழிகளை அநுசரித்தால், இஷ்டப்பிரசாதம் தானே நம்மிடம் ஓடிவரும். ஆனால் விசேஷமாய் இயேசுவின் திரு இருதயத்தை சகலத்துக்கு மேலாய், உண்மையாகவே, வஞ்சகமின்றி, முழுதும் சிநேகிப்போமாக. இந்த திவ்விய அன்புதான் நமது சிலுவைகளையெல்லாம் நாம் நல்ல மனதோடு ஏற்றுக்கொண்டு ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கவும், நமது பேரிலும் சிருஷ்டிகள் பேரிலும் நமக்குள்ள பற்றுதல்களையெல்லாம் களைந்தெறிந்து, இவ்வுலக மகிமை சுகங்களிலிருந்து நம்மைப் பிரித்து நமது அழியாத பாக்கியமாகிய திவ்விய இயேசுவைப் பின்பற்றச் செய்யும். இந்த கொடையை அடைய பரர். அரு. பிதா. சொல்லுவோமாக.

மனவல்லிய ஜெபம்

தேவநற்கருணையில் வீற்றிருக்கும் இயேசுவின் திரு இருதயமே! என்னிடத்தில் விசுவாசம், நம்பிக்கை, தேவ அன்பை அதிகரித்தருளும்.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.