ஜனவரி 20

அர்ச். செபஸ்தியார் - வேதசாட்சி (கி.பி. 288). 

செபஸ்தியார் பிரான்சு தேசத்தில் பிறந்து, இத்தாலியா தேசத்தில் வளர்ந்து சாஸ்திரங்களைப் படித்தார். இவர் காலத்தில் வேதத்தினிமித்தம் கணக்கற்றக் கிறீஸ்தவர்கள் உபாதித்துக் கொல்லப்படுகிறதைக் கண்ட இவர், அவர்களுக்குத் தன்னால் முடிந்த வரையில் உதவி செய்யும் பொருட்டு படையில் போர்ச்சேவகரானார். 

அவருடைய தளராத தைரியத்தைக் கண்ட சக்கரவர்த்தி அவருக்குப் படையில் உயர் பதவியைக் கொடுத்தான். ஒருநாள் வேதத்தினிமித்தம் சிறையில் அடைக்கப்பட்ட மார்க்குஸ், மார்செல்லினுஸ் என்னும் இரு சகோதரருக்கு அவர்களுடைய பெற்றோரும், உறவினர்களும் வேதத்தை மறுதலிக்கும்படி துர் ஆலோசனை கொடுப்பதைக் கண்ட செபஸ்தியார் அவர்களிருவரையும் தம்முடைய நற்புத்தியால் விசுவாசத்தில் உறுதிப்படுத்தவே, அநேகர் வேதசாட்சி முடி பெற்றார்கள். 

கணக்கற்ற அஞ்ஞானிகள் வேதத்தில் சேர்ந்தார்கள். மேலும் இவர் சிலுவை அடையாளத்தால் அநேக வியாதிக்காரரைக் குணப்படுத்தினார். கடைசியாய் இவர் வேதத்துக்காகப் பிடிபட்டு, சக்கரவர்த்தியின் கட்டளைப்படி அம்பால் எய்துக் கொல்லப்பட்டார். 

கிறிஸ்தவர்கள் இவர் சரீரத்தை எடுத்து அடக்கஞ் செய்ய முயற்சிக்கும்போது, இவருக்கு கொஞ்சம் உயிர் இருப்பதைக் கண்டு, இவரைக் கவனமாய் பராமரித்ததினால், இவர் விரைவில் பூரண சுகத்தை அடைந்தார். 

பிறகு இவர் இராயனுடைய அரண்மனைக்குச் சென்று, அவன் கிறிஸ்தவர்களை துன்புறுத்தக் கூடாது என்று தைரியத்துடன் புத்தி சொன்னதைக் கேட்ட அந்தக் கொடுங்கோலன் கோபத்தால் பொங்கியெழுந்து அவரைத் தடிகளால் அடித்துக் கொல்லக் கற்பித்தான். அவரும் மரித்து வேதசாட்சியானார்.

யோசனை

நாமும் சமயம் வரும்போது, கெட்டக் கிறீஸ்தவர்களுக்கும் இதர மதத்தினருக்கும் நற்புத்தி சொல்லக்கடவோம்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். பபியான், பா.வே. 
அர்ச். யுத்திமியுஸ், ம. 
அர்ச். பெக்கின், ம.