வியாகுல அன்னைக்குத் தோத்திரமாக சொல்லப்படும் ஜெபங்கள்.

வியாகுலச் சங்கீதம் (ஸ்தாபாத் மாத்தெர்).

வியாகுலம் நிறைந்த தேவதாயார் தம்முடைய திவ்விய குமாரன் சிலுவையில் அறையுண்டிருந்ததைப் பார்த்து நின்று அழுது கொண்டிருந்தார்கள்.

வாக்குக் கெட்டாத துயரத்தின் வியாகுல வாள் தமது திரு இருதயத்தில் ஊடுருவப்பட்டு ஆறுதல் அற்று நின்றார்கள்.

ஒன்றான திவ்விய குமாரனுக்குத் தாயான இந்த ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் சொல்வதற்கு அரிதான துக்க துயரத்தை அடைந்திருந்தார்கள்.

நிர்ப்பந்தப்பட்ட தம்முடைய திவ்விய குமாரனைக் காண்பதினால் பிரலாபித்து அழுது நொந்து பரிதவித்து நின்றார்கள்.

இத்தனை வியாகுலம் நிறைந்த தேவதாயாரைப் பார்க்கும்போது, மனிதருக்குள்ளே அழாதிருக்கிறவர்கள் உண்டோ?

தம்முடைய திவ்விய குமாரனைப் பார்த்து நின்று அழுத இந்தத் தாயாரைக் கண்டவர்கள் உடனே அழாதிருப்பார்களோ?

தன் சம்மனசுக்களுடைய குற்றங்களுக்காக நரம்புத் தாரை வழியாக இரத்தம் ததும்பி சிந்தி ஓடுகிறதைப் பார்த்தார்கள்.

நல்ல சிநேகத்தின் மாதாவே! உம்முடைய வியாகுலத்தினால் உம்மோடு என் ஆத்துமம் மிகவும் துக்கப்பட்டு அழச் செய்தருளும்.

என்னுடைய இருதயம் தேவனாகிய கிறீஸ்துநாதரைச் சிநேகித்து, அவர் பேரில் பிரியப்பட்டு உருகச் செய்தருளும்.

திவ்விய தாயாரே! உம்முடைய திருக்குமாரன் சிலுவையில் பாடுபட்ட காயங்களை என் இருதயத்தில் பதிப்பித்தருளும்.

உம்முடைய திருக்குமாரன் அனுபவித்த கஸ்திகளையும், பாடுகளையும் எனக்குப் பங்கிட்டருளும்.

என்னுடைய ஜீவன் முடியும் வரையும் சிலுவையில் அறையுண்ட என் அன்பரை நினைத்துத் துக்கித்திருக்கச் செய்தருளும்.

அப்படியே இந்தச் சிலுவை அடியில் உமக்குத் துணையாயிருந்து உம்மோடு நான் அழவும், வியாகுலப்படவும், கஸ்திப்படவும் ஆசையாயிருக்கிறேன்.

கன்னியாஸ்திரீகளுக்குள் மேன்மையான கன்னிகையே, என் மேல் இரக்கம் வைத்து உம்மோடுகூட நானும் அழுகிறதற்கு அநுக்கிரகம் செய்தருளும்.

சேசுநாதருடைய திரு மரணத்தை நினைத்து அவருடைய பாடுகளுக்குப் பங்காளியாகி அவருடைய காயங்களை நான் ஸ்துதிக்கச் செய்தருளும்.

உமது திருக்குமாரனுடைய திருக்காயங்களில் அன்பு கூர்ந்து, நொந்து அவருடைய சிலுவையைத் தழுவி அவரைச் சிநேகிக்கச் செய்யும்.

நடுத்தீர்வை நாளிலே உம்முடைய ஒத்தாசையினாலே நான் திடங்கொண்டு உம்மால் தப்பித்து விடப்படக் கடவேனாக.

நான் சிலுவையால் காப்பாற்றப்பட்டுக் கிறீஸ்து வினுடைய மரணத்தால் தேறி வரப்பிரசாதத்தில் ஓங்கப் பண்ணியருளும்.

என் சரீரம் மரிக்கும்போது என் ஆத்துமம் நித்திய மோட்சத்தில் சேரும்படிக்கு அநுக்கிரகம் செய்தருளும்.

ஆமென்.

வியாகுலம் நிறைந்த கன்னிகையே! கிறீஸ்துநாதருடைய பாடுகளினால் நாங்கள் ஈடேற்றம் பெறத் தக்கவர்களாகும்படிக்கு, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்.
எங்கள் ஆண்டவராயிருக்கிற சேசுக்கிறிஸ்துநாதரே, அன்று சிமியோன் அருளின மொழியின்படியே உம்முடைய பாடுகளினாலேயும், திருமரணத்தினாலேயும் உமது மாதாவாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட மரியம்மாள் என்கிற பரிசுத்த கன்னிகையுடைய அமிர்தமான திவ்விய இருதயத்தில் வாள் ஊடுருவப்பட்டதே. அப்படிப்பட்ட உமது தாயாருடைய வியாகுலத் துன்பத்தை நினைத்து வணங்குகிறவர்களாகிய நாங்கள் அனைவரும் உம்முடைய பாடுகளிலேயும் திரு மரணத்திலேயும் உண்டாகிய பாக்கியமான பலன்களை அடையவும், சதாகாலமும் உம்மைக் கண்டு களிகூர்ந்திருக்கவும் எங்களுக்குப் பிரசன்னராய்க்கிருபை செய்தருளும்.

ஆமென்.