திருச் சிலுவையைப் புனிதப்படுத்துதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. 

எல்: உம்மோடும் இருப்பாராக.

அருள்வாக்கு  பிலிப் 2:5-11

தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்.

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர்,கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

(சிறிது நேரம் மெளனம்)

குரு: மன்றாடுவோமாக:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, மனிதரை மீட்க மனுவுரு எடுத்த உம் திருமகனின் அடையாளமாய் அமைந்து உமது கனிந்த அன்பை நினைவூட்டும் இந்தச் சிலுவையை ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியருளும். இது உம் மக்களுக்கு விசுவாச வாழ்க்கையின் சின்னமாகவும், மனிதரின் மீட்பாகவும், துன்பங்களில் ஆறுதலாகவும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் கருவியாகவும் வாழ்க்கையின் நம்பிக்கையாகவும் இருப்பதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

(குரு சிலுவையின்மேல் தீர்த்தம் தெளிப்பார். தூபமும் காட்டலாம். அனைவரும் சிலுவைக்கு வணக்கம் செலுத்தி முத்தி செய்கின்றனர்.)

திரு இருதயப் படத்தைப் புனிதப்படுத்துதல்

குரு:  ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர்.அவரே. 

குரு:  ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

குரு:  மன்றாடுவோமாக:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம் ஒரே பேறான திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் திரு இருதயத்தை வணங்க நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இந்தப் படத்தை (சுரூபத்தை) அர்ச்சித்துப் புனிதப்படுத்த உம்மை இறைஞ்சுகின்றோம். இந்தப் படத்தின் (சுரூபத்தின்) முன் உம் திருமகனைப் பக்தியுடன் வழிபட்டு மகிமைப்படுத்தும் மக்கள் அனைவரும், இவ்வாழ்வில் அவரது அன்புப் பாதையில் நடந்து, மறுவாழ்வில் முடிவில்லா மகிமையடையச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய.........

எல்: ஆமென்.

(குரு படத்தின்மேல் தீர்த்தம் தெளிக்கிறார்.)

சுரூபத்தை / படத்தைப் / கெபியைப் புனிதப்படுத்துதல்

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே. 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

குரு: மன்றாடுவோமாக:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம் புனிதர்களின் உருவத்தைப் படத்திலோ சுரூபத்திலோ வடித்து, அவற்றை ஊனக் கண்களினால் நோக்குந்தோறும், எங்கள் ஞானக் கண்களினால் அவர்களுடைய செயல்களையும் புனிதத்தையும் தியானிக்க அருளினீரே; புனிதரான ............................இன் சுரூபத்தைப் / படத்தை / கெபியை அர்ச்சித்துப் புனிதப்படுத்த உம்மை இறைஞ்சுகிறோம். இச்சுரூபத்தைப் / படத்தை / கெபியை பக்தியுடன் பயன்படுத்தி உம்மை மகிமைப்படுத்தும் அனைவரும், இவ்வாழ்வில் உம் அருளைப் பெற்று, மறுவாழ்வில் முடிலில்லா மகிமை அடையச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

(குரு சுரூபத்தின் / படத்தின் / கெபியின் மேல் தீர்த்தம் தெளிப்பார்.)

உத்திரியங்களைப் புனிதப்படுத்துதல்

குரு: ஆண்டவரே, உமது இரக்கத்தை எங்களுக்குக் காண்பித்தருளும். 

எல்: உமது மீட்பை எங்களுக்குத் தந்தருளும். 

குரு: ஆண்டவரே, எம் மன்றாட்டைக் கேட்டருளும்.

எல்: எம் கூக்குரல் உம்மிடம் வருவதாக. 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

குரு: மன்றாடுவோமாக:

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, மனுக்குலத்தின் மீட்பரே, உம்மீதும் கார்மேல் அன்னை கன்னிமரியாமீதும் கொண்ட அன்பினால் உம் ஊழியர் அணியப்போகும் இந்த உத்திரியங்களை உமது வல்லமையால் ஆசீர்வதித்தருளும். உம் அன்னையின் பரிந்துரையால் பகைவரிடமிருந்து பாதுகாக்கப்பட்டு இவர்கள் உமது அருளில் இறுதிவரை நிலைத்திருப்பார்களாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்: ஆமென்.

(உத்திரியங்கள்மீது தீர்த்தம் தெளித்த பின்னர் ஒவ்வொருவருக்கும் உத்திரியத்தை அணிலித்துக் கூறுவதாவது:)

குரு: உம் பகைவரிடமிருந்து உம்மைக் காப்பாற்றி முடிவில்லா வாழ்வுக்கு உம்மைக் கொண்டு சேர்த்திடத் தூய கன்னி மரியாவின் துணையை நம்பி இந்த உத்திரியத்தை அணிந்துகொள்ளும்.

செபமாலையைப் புனிதப்படுத்துதல்

(பல செபமாலைகள் மந்திரிக்கப்பட்டால் அவை மந்திரிக்கப்பட்டவுடன் அனைவரும் சேர்ந்து ஒரு செபமாலையோ, ஒரு தேவ இரகசியத்தையோ சேர்ந்து செபிப்பது நல்லது.)

குரு: அன்னையின் அன்பு மக்களே! செபமலர்களால் தொகுக்கப்பட்டது செபமாலை. இறைவனின் அன்னையை நோக்கிச் சொல்லப்படும் செபங்களுள் செபமாலை சிறப்பான இடத்தைப் பெறுகிறது. செபமாலையின் செபங்களைச் சொல்லும்போது மீட்பின் வரலாற்றைத் தியானிக்கின்றோம். அன்னையின் புகழை எத்திக்கும் பறைசாற்றுகின்றோம். இதற்குப் பயன்படும் செபமாலை(களை)யை இறைவன் ஆசீர்வதித்தருளுமாறு மன்றாடுவோம்.

புகழ்ப் பா

ஓ! அருள் நிறைந்த மரியே வாழ்க.

1. இறைவாக்கை உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து வந்த தூய கன்னிமரியா பேறு பெற்றவர் (லூக் 2:19).

2. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் (1:45).

3. அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர் (1:42).

புனிதம் செய்தல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. 

எல்: உம்மோடும் இருப்பாராக.

குரு: மன்றாடுவோமாக:

அன்புத் தந்தாய், கன்னிமரியாவை அருள் நிறைந்தவராய், பெண்களுள் பேறுடையவராய், புகழ் அனைத்திற்கும் தகுதி பெற்றவராய், படைப்பிற்கே சிகரமாய்ப் படைத்தீர். அத்தகைய அன்னையோடு ஒன்றுபட்டு உம் திருமகனின் மீட்பின் வரலாற்றைத் தியானிக்கப் பயன்படுத்தும் இச்செபமாலை (களை)யைக் கனிவுடன் ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியருளும். இதனைப் (இவற்றைப்) பயன்படுத்தும் யாவரும் மீட்பின் கொடைகளை நிறைவாகப் பெற்று மகிழ்வதோடு கன்னி மரியாவைக் காலமெல்லாம் புகழ்ந்தேத்துவார்களாக; இந்த அன்னையின் அன்புக்கும் அரவணைப்புக்கும் உரியவர்களாகத் திகழ்வார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். 

எல்: ஆமென்.

(குரு செபமாலைகள்மீது தீர்த்தம் தெளிக்கிறார்.)

அருள்பொருள்களைப் புனிதப்படுத்துதல்

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

நற்செய்தி (விருப்பமானால்) மத் 6:5-6

அந்நாள்களில் இயேசு கூறியதாவது: "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக் கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்று கொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

(சிறிது நேரம் மெளனம்)

குரு: மன்றாடுவோமாக:

விண்ணகத் தந்தையே! நாங்கள் உம்மை நோக்கிச் செபிக்க உமது ஆவியை எங்கள் இதயங்களில் பொழிந்ததற்காக உம்மைப் போற்றுகிறோம். இப்பொழுது இப்பொருளை ஆசீர்வதித்து, இதனை எம் செப வாழ்க்கைக்கு உதவும் சாதனமாக அமையச் செய்து, நன்முறையில் செபிக்க எங்களுக்குக் கற்றுத்தாரும். செப வாழ்வில் நாங்கள் அனைவரும் வளர்ந்து, வளம் மிக்க எமது வாழ்வால் உமக்கு ஏற்றவர்களாவோமாக. தூய ஆவியின் ஒன்றிப்பில் உம் திருமகனும் எங்கள் மீட்பருமான இயேசுவின் வழியாக, எல்லாப் புகழும் மகிமையும் என்றென்றும் உமக்கே உண்டாவதாக.

எல்: ஆமென்.

(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)

முன்னுரை - ஆசியுரைகளும் மந்திரிப்புகளும்

தமிழகத் திருவழிபாட்டுப்  பணிக்குழுவினரால் தயாரிக்கப்பட்டு  தமிழக ஆயர்களின்  அங்கீகாரம் பெற்றது

பதிப்புரிமை: தமிழக விவிலிய, மறைக்கல்வி, திருவழிபாட்டு நடுநிலையம், திண்டிவனம் 2021


ஆசியுரைகளும், அர்ச்சிப்புகளும் நம் இறைவழிபாட்டின் சிறப்பான சொத்தாக இருந்து வருகின்றன. இவை வழியாக நாம் இறைவனைப் போற்றிப் புகழ்கின்றோம்; அதேவேளையில் நம்மையும், அவருடைய சேவைக்காகவும் மகிமைக்காகவும் பயன்படுத்தப்படும் இடம், பொருள் அனைத்தையும் ஆசீர்வதிக்க மன்றாடுகிறோம். மனித வாழ்வில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது. காலம் மாறிவரும்போது புதுப்புதுத் தொழில் முறைகள், புதிய தேவைகள் என்று புதிய சூழ்நிலை உருவாகின்றது. இந்தக் காலச் சூழ்நிலைக்கேற்ப புதிய அர்ச்சிப்பு ஆசியுரைகளும், மந்திரிப்புகளும் தேவைப்படுகின்றன.

1984-ஆம் ஆண்டு தமிழக ஆயர்களால் திருச்சடங்கு நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதிலுள்ள ஆசியுரைகளோடும், மந்திரிப்புகளோடும் புதிய தேவைகளுக்கேற்பப் புதிய ஆசியுரைகளை இணைத்து இந்தப் புதிய பதிப்பு வருகிறது. இந்நூல் தமிழக ஆயர்களின் அங்கீகாரம் பெற்றது.

நம் தமிழக ஆயரவையின் இறைவழிபாட்டுக் குழு, அனைவருடைய ஒத்துழைப்போடு இந்நூலை வெளியிடுகிறது. தமிழக ஆயரவையின் இறைவழிபாட்டுக் குழுவினர் அனைவரின் கடும் உழைப்பையும் முயற்சியையும் பாராட்டி நன்றி கூறுகிறேன்.

மிலான் ஆயர் புனித அம்புரோஸ் பின்வருமாறு கூறியுள்ளதை நாம் நினைவுகூர்வோம்:

"நீங்கள் செல்வந்தராயில்லாமல் இருக்கலாம்; உங்களுடைய மக்களுக்குப் பெருஞ்சொத்தைப் பகிர்ந்து கொடுக்க முடியாத நிலையில் இருக்கலாம். ஆனால் ஒன்றை மட்டும் உங்களால் அவர்களுக்குத் தர இயலும் - அதுதான். ஆசீரளிக்கும் உங்களுடைய சொத்துரிமை. பணக்காரராய் இருப்பதைவிட ஆசீர்வதிக்கப்பட்டவராக இருப்பது எவ்வளவோ மேன்மை."

எனவே, நாம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவனுடைய அருளை மன்றாடிப் பெறுவோம். அவருடைய அருளே நமது செல்வம்; நமது பாக்கியம். இத்தகைய செல்வத்தை நம் கத்தோலிக்கர்கள் பெற்று வாழவைப்பது திருச்சபை நமக்களிக்கும் மாபெரும் கொடை.

தமிழகக் கத்தோலிக்க மக்கள் இந்நூல் வழியாக இறைவனின் அருளைப் பெற்று மகிழ்ந்து வாழ்வார்களாக.


ச. மிக்கேல் அகுஸ்தீன்

தமிழக ஆயரவை இறைவழிபாட்டுக்குழு தலைவர்.