வீடுகளை மந்திரித்தல்- பொது - III

(குரு, கன்னியர், பொதுநிலையினர் - இவர்களின் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.)

(எல்லோரும் வீட்டிற்கு வெளியே குழுமியிருத்தல்.)

முன்னுரை

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே 

எல்: ஆமென்.

குரு: இறை இயேசுவில் இங்குக் கூடியுள்ளோர் அனைவருக்கும், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவால் அர்ச்சிக்கப்பட்டுப் புனிதர்களாக வாழ அழைக்கப்பட்ட அனைவருக்கும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரை எவ்விடத்திலும் அழைக்கும் அனைவருக்கும், இக்குடும்பத்தாராகிய திருமதி. ………….. திரு. ……………… அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும், தந்தையாகிய கடவுளின் அன்பும், அருளும், அமைதியும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக, தூய ஆவியானவரின் நட்புறவோடு என்றும் கிடைப்பதாக.

தொடக்க வழிபாடு

குரு: அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே. இச்சடங்கிலே நாம் அனைவரும் தகுந்த விதமாகப் பங்கு  கொண்டு இறையருளைப் பெற நம் பாவங்களை நினைத்து மனம் வருந்துவோம்.

குரு: அனைத்தையும் படைத்த ஆண்டவரே, இரக்கமாயிரும். 

எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

குரு: பாவிகளைத் தேடி வந்த கிறிஸ்துவே, இரக்கமாயிரும். 

எல்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

குரு: ஆறுதல் தரும் ஆண்டவரே, இரக்கமாயிரும்.

எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

குரு: (கையை நீட்டி) எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து. நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

எல்: ஆமென்.

குரு: மன்றாடுவோமாக:

என்றென்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, இந்த இல்லத்திற்கு உமது பிரசன்னத்தின் அருளை வழங்கியருளும். இதனால், நீரே இந்த இல்லத்தில் வாழ்பவராகவும், இந்த இல்லத்தில் உறைவோரைக் கண்காணித்துக் காப்பாற்றுபவராகவும் அறியப்படுவீராக. உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழும் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

(வீட்டின் உள்ளே)

வாசகங்கள்

முதல் வாசகம் : 1அர. 2:2-4

பதிலுரைப்பாடல் : திபா. 91:1-6, 9-12

நற்செய்தி : லூக். 10:38-42

(குரு விருப்பமானால் மறையுரை ஆற்றலாம்.)

மன்றாட்டுகள்

குரு: இயேசுவில் அன்பார்ந்தவர்களே, உலகெங்கும், சிறப்பாக, இந்த இல்லத்தில் உண்மையான அன்பு என்றும் தொடர்ந்து வளரச் செபிப்போமாக.

(மன்றாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன.)

எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

(மற்றவை விருப்பத்திற்கேற்ப)

குரு: (கைகளை விரித்து) அனைத்துக் குடும்பங்களையும் காத்து ஆண்டுவரும் இறைவா, திருமதி, திரு …………………………………………………………….. குடும்பத்தினர் உம் திருமுன் கொண்டு வந்துள்ள இம்மன்றாட்டுகளைக் கேட்டு, இவர்களை எல்லா ஆன்மீக நலன்களாலும் நிரப்பி, உம் திருவுளத்திற்கேற்றவர்களாக மாற்றியருளும். எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

அர்ச்சிப்பு

(தண்ணீரை மந்திரித்தல்.)

குரு: இறைவா, இவ்வீட்டையும் இதில் வாழ்வோர் அனைவரையும் இங்குள்ள பொருட்களையும் மந்திரிக்க, உமது பாதுகாவலின் அடையாளமாகப் பயன்படுத்தப்படும் இத்தண்ணீரை ✠ ஆசீர்வதித்தருளும். இவர்களது திருமுழுக்கை நினைவுபடுத்தும் இத்தூய நீரினால் அனைத்துத் தீமைகளிலிருந்தும் இவர்களைக் காப்பாற்றும். உம் தூய ஆவியை இவர்கள் மீது பொழிந்து இவர்களுக்கு உமது அமைதியை அளித்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

குரு: மன்றாடுவோமாக:

அன்புத் தந்தையே, நாங்கள் அனைவரும் உம்மைப் புகழ்கின்றோம். இந்தப் புதிய வீட்டில் உமது பேருதவியையும் பராமரிப்பையும் கண்டுணர்ந்து உம்மை வாழ்த்துகிறோம். விண்ணக வீட்டின் முன் அடையாளமான இந்த எழில்மிகு வீட்டை ஆசீர்வதித்து உமது மாட்சிமை இந்த வீட்டை ஆட்கொள்ளப் பணிவுடன் வேண்டுகிறோம். இந்த வீட்டைக் கட்டி முடிக்கப் போதிய பொருளுதவியையும், கடின உழைப்பையும், பாதுகாப்பையும் அளித்தமையை எண்ணி நன்றி நவில்கின்றோம். எங்கள் அனைவரையும் ஆசீர்வதித்தருளும். உமது அமைதியும் அருளும் இந்த இல்லத்தில் என்றும் தங்குவனவாக. இங்கு வாழும் (குடும்பத்தினர்) அனைவரும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி கொண்டு வாழ ஒருவருக்கொருவர் துணையாயிருப்பார்களாக. இவர்கள் கிறிஸ்துவையே தங்கள் தலைவராகக் கொண்டு, தூயவர்களாக எல்லா ஆன்ம நலன்களும் பெற்று வாழத் துணையாயிருப்பீராக. இந்த இல்லத்தையும் இங்கு வாழ்வோரையும் உமது பாதுகாவலிலும், உமது திருமகன் இயேசுவின் தலைமையிலும், எங்கள் சகாய அன்னை கன்னிமரியாவின் அடைக்கலத்திலும், உம் புனிதரின் ஆதரவிலும், காவல் தூதர்களின் இடைவிடாக் காவலிலும் வைத்து இன்றும் என்றும் ஆசீர்வதித்து வழிநடத்தி முடிவில்லாப் பேரின்ப வீட்டில் பங்குபெற அருள்புரியும். எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்

எல்: ஈசோப் புல்லினால் ……. (பாடல்)

(அல்லது)

தேவாலய வலப்புறமிருந்து ……..

(திருமுழுக்கை நினைவுபடுத்தும் வகையில் கூடியிருப்போர் அனைவர் மீதும் தீர்த்தம் தெளிக்கப்படுகிறது. பின்னர், எல்லா இடங்களிலும் தெளிக்கப்படும்.)

(வீடு மந்திரித்தல்)

நுழைவாயில்

குரு: முன்மொழி : "இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும், உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போதும், எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப் பட்டமாக அவை இருக்கட்டும். உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழைவாயில்களிலும் அவற்றை எழுது. (இணைச்சட்டம் 6:4-9).

குரு: மன்றாடுவோமாக:

அனைத்திற்கும் அரசரான எங்கள் ஆண்டவரே, நீரே அகரமும் னகரமும், துவக்கமும் முடிவுமாக இருக்கிறீர். இந்த இடத்திலிருந்து உம் ஊழியரை (உம் பணிக்காக) ஆசீர்வதித்து, வெளியில் சென்றுவர அனுப்பியருளும். வழியில் அவர்களின் துணையாக இருப்பீராக. அவர்கள் திரும்பி வரும்போது அவர்களை நீரே வரவேற்பீராக. அவர்கள் வெளியே செல்லும்போதும் உள்ளே நுழையும்போதும் உம்முடைய பிரசன்னத்தால் அவர்கள் நிரப்பப் பெற்றுத் திடம் பெறுவார்களாக. எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக ...... 

எல்: ஆமென்.

சேமிப்பு அறை

முன்மொழி : "மேலும் எசேக்கியா மிகுந்துவரும் தானியம், புதிய திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து வைக்கக் கிடங்குகளையும், கால்நடைகளுக்குத் தொழுவங்களையும், ஆடுகளுக்குப் பட்டிகளையும் அமைத்திருந்தார்." (2 குறி 32:28)

குரு: ஆண்டவரே, இந்தச் சேமிப்பு அறைமீது உமது ஆசீரைப் பொழிந்தருளும்.

எல்: உம் கைவேலைகளின் மீதும் உமது ஆசீரைப் பொழிந்தருளும்.

குரு: ஆண்டவரே, என் செபத்தைக் கேட்டருளும்.

எல்: என் கூக்குரல் உம்மிடம் வருவதாக.

குரு: மன்றாடுவோமாக:

என்றென்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம் ஊழியரான மோசே வழியாக நீர் இவ்வாறு கூறினீர்: "உங்கள் ஆண்டவராகிய கடவுளின் குரலை நீங்கள் கேட்பீர்களாகில், ஆண்டவர் உங்கள் சேமிப்பு அறைகளை ஆசீர்வதிப்பார்". எனவே, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம். உமது பரிவிரக்கத்தால் அருகிலிருந்து, எந்தப் பொருளுக்கும் எந்தத் தீங்கும் வராமல் காத்தருளும். இங்குள்ள எல்லாப் பொருள்கள் மீதும் உம்முடைய ஆசீரை முழுமையாகப் பொழிந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக ...

பொது அறை

முன்மொழி : "கிறிஸ்துவின் அன்பு நம்மனைவரையும் ஒன்றாகச் சேர்த்து வைக்கிறது. நம் கடவுளாகிய கிறிஸ்துவுக்கே பயந்து அன்பு செய்வோம். எங்கு அன்பும் நட்பும் உண்டோ அங்கே இறைவன் உண்டு." 

"சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது!" (திபா. 133:1)

குரு: ஒற்றுமையாகச் சகோதரர் ஒன்று கூடி வாழ்வது

எல்: எவ்வளவோ நன்றாகவும் இனிமையாகவும் இருக்கிறது.

குரு: ஆண்டவரே, என் செபத்தைக் கேட்டருளும். 

எல்: என் கூக்குரல் உம்மை நோக்கி எழுவதாக.

குரு: மன்றாடுவோமாக:

என்றென்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா. உம்முடைய சிறப்பான அருள்கொடையால் இந்தக் குடும்பத்தினரையும் எங்களையும் ஒன்று சேர்த்திருக்கிறீர். உம் ஊழியராகிய நாங்கள், இந்தச் சிறப்பான ஆசீரின் வல்லமையால், சகோதர அன்பிலும் அமைதியிலும் ஒன்றித்து வாழ்ந்து உம்முடைய உதவியால் நிலையானதும் அமைதியானதுமான அந்த விண்ணக நாட்டில் வந்து சேர எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

அடுப்பறை

முன்மொழி: "பசும் புல் வெளிமீது என்னை அவர் இளைப்பாறச் செய்வார்." (திபா. 23:2)

குரு: இறைவா, ஏழைகளுக்குத் தேவையானவற்றை நீர் தயார் செய்துள்ளீர்.

எல்: ஒரே மனம் உள்ளவரை வீட்டில் வாழ வைத்துள்ளீர்.

குரு: ஆண்டவரே, என் செபத்தைக் கேட்டருளும்.

எல்: என்னுடைய கூக்குரல் உம்மிடம் வருவதாக.

குரு: மன்றாடுவோமாக:

என்றென்றும் வாழும் இறைவா, உமக்கு முன்பாக வானதூதர்கள் நிற்கின்றனர். உம்முடைய திருவுளத்தின்படியே அனைத்தும் அருளப்படுகின்றன. மனிதரின் தேவைக்கு ஏற்றவற்றை எல்லாம் நீர் அன்போடு அளித்துள்ளீர். இறைவாக்கினர் எலிசாவின் கரத்தினால் வனவாசிகளின் அப்பத்தை ஆசீர்வதித்தது போல இந்த அடுப்பறையை ஆசீர்வதித்தருளும். உம்முடைய மக்கள் என்றும் ஆசியால் நிரப்பப்பெற்று, உலகின் மீட்பராக எல்லா உயிர்களுக்கும் உணவளித்துப் பராமரித்து வரும் உமக்கு நன்றி கூறுவார்களாக. என்றென்றும் வாழ்ந்து …..

உணவறை

முன்மொழி : 

நம்பிக்கையின் கண்கள் எல்லாம் உம்மை நோக்கியுள்ளன. ஆண்டவரே, காலம் நோக்கி அவர்களுக்கும் உணவளிக்கின்றீர். உம் கைகளை விரித்து உயிர் வாழும் அனைத்தையும் உம் ஆசீரால் நிரப்பியருளும்.

"மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு. நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்”  (இணைச்சட்டம் 8:3)

குரு: ஏழைகள் உண்டு நிறைவு பெறுவார்கள். 

எல்: ஆண்டவரைத் தேடுவோர் அவரைப் புகழ்வார்கள். 

குரு: ஆண்டவரே, என் செபத்தைக் கேட்டருளும்.

எல்: என் கூக்குரல் உம்மிடம் வருவதாக.

குரு: மன்றாடுவோமாக

என்றென்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய கருணை மிக்க நம்பிக்கையினால் உம் ஊழியருக்கு உணவளித்து வருகிறீர். உடல் வாழ்வதற்கு வேண்டிய உணவை இந்த இடத்தில் அருந்த வாய்ப்பளிக்கின்றீர். இந்த உணவறையை ✠ ஆசீர்வதிக்குமாறு உம்முடைய அளவற்ற நன்மைத்தனத்தை நோக்கி மன்றாடுகிறோம். உம் ஊழியர் உம் ஆசீரோடு உண்டு மகிழவும், உமக்கு நன்றி கூறவும், இறுதியில் நிலையான இன்பத்தை விண்ணகத்தில் பெற்று மகிழவும் வரம்தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் ஆமென்.

படுக்கையறை

முன்மொழி : "ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காப்பாற்றியருளும். உறங்கும்போதும் எங்களைப் பராமரித்தருளும். இவ்வாறு கிறிஸ்துவோடு நாங்கள் விழித்திருந்து அமைதியில் இளைப்பாறுவோமாக."

குரு ஆண்டவரே, என் செபத்தைக் கேட்டருளும். 

எல்: என் கூக்குரல் உம்மிடம் வருவதாக.

குரு: மன்றாடுவோமாக:

இஸ்ரயேலைக் காப்பவரான ஆண்டவராகிய கடவுளே, நீர் படுப்பதுமில்லை, உறங்குவதுமில்லை. உம் ஊழியரின் இந்தப் படுக்கையறையை ஆசீர்வதிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம். பேயின் சோதனைகளிலிருந்தும் ஏமாற்றும் கற்பனைகளிலிருந்தும் பாதுகாத்தருளும். இவர்கள் விழித்திருக்கும்போது உம்முடைய கட்டளைகளைத் தியானிப்பதாலும், உறங்கும்போது உம்முடைய பாதுகாப்பாலும் உறுதி பெறச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக …….. ஆமென். 

படிப்பறை

முன்மொழி : எஸ்ரா ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கற்று அதன்படி நடப்பதிலும், சட்டத்தையும் முறைமையையும் இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார். (எஸ்ரா 7:10)

குரு: மன்றாடுவோமாக:

ஞானத்தின் ஊற்றாகிய இறைவா, இந்தப் படிப்பறையின்மீது உமது ஆவியைப் பொழிந்தருளும். இங்கு அமர்ந்து படிப்போர் அனைவரும் ஞானத்திலும் அறிவிலும் வளர்ந்து, உமது அன்பிலும் முதிர்ச்சி பெறுவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் ... ஆமென்.

பதிலுரைப்பாடல் திபா. 97

(ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்.)

செபக்கூடம்

முன்மொழி : (திபா. 1:1-3) "நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்; அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவ காலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்."

குரு: ஆண்டவரே, இரக்கமாயிரும். 

எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும். 

குரு: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

எல்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

குரு: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

குரு: பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே ...

குரு: ஆண்டவரே, உம் சபையை நினைவு கூர்ந்து காத்தருளும். தொடக்கத்திலிருந்து நீர் அதை உமக்குச் சொந்தமாகவே வைத்திருக்கிறீர்.

குரு: ஆண்டவரே என் செபத்தைக் கேட்டருளும்.

எல்: என் கூக்குரல் உம்மிடம் வருவதாக.

குரு: மன்றாடுவோமாக:

இறைவா, உமக்குரிய இடமெல்லாவற்றிலும் நீர் நிறைந்து நின்று செயலாற்றுகிறீர். எங்கள் செபங்களைக் கேட்டருளும். இந்த இல்லத்திற்கு இன்று நீர் வழங்கும் ஆசீர் என்றும் நிலைத்திருக்கவும், உம்மை நோக்கி மன்றாடுவோர் அனைவரும் உம் ஆசீரையெல்லாம் பெற்று மகிழவும் செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

என்றென்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா. எங்களுடைய செயல்களெல்லாம் உம் திருவுளத்திற்கேற்றவையாக இருக்கச் செய்தருளும். இவ்வாறு, உம் அன்பார்ந்த மகனின் பெயரால் நாங்கள் நற்செயல்களில் சிறந்து வாழ்வோமாக. எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

சிறப்பு ஆசிர்

குரு: பரம தந்தை உங்கள்மீது அன்பு கூர்ந்து உங்களுடன் வாழ்வாராக 

எல்: ஆமென்,

குரு: இறைமகன் இயேசு உங்களோடு தங்கி, உங்களுக்குத் தமது அமைதியை அருள்வாராக.

எல்: ஆமென்.

குரு: தூயஆவி உங்கள் மீது இறங்கி, உங்களுக்கு அனைத்தையும் கற்பிப்பாராக.

எல்: ஆமென்.

குரு: எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவி உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து உங்களை என்றும் காப்பாராக.

எல்: ஆமென்.