(வீடு நுழைகையில்)
குரு: இவ்வீட்டிற்கும் இங்கு வாழ்வோர் அனைவருக்கும் அமைதி உண்டாவதாக.
(குரு திருவுடைகளை அணிகிறார்.)
குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
பதிலுரைப்பாடல் திபா. 118:1-2, 3-4, 8, 14.
பல்லவி: ஆண்டவரைப் புகழுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்.
1. ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! – பல்லவி
2. என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு என்று ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! – பல்லவி
3. மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம். ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. – பல்லவி
(குரு தொடர்ந்து வீட்டின் எல்லா இடங்களையும் அறைகளையும் தீர்த்தம் கொண்டு மந்திரிக்க, மற்ற அனைவரும் கீழ்க்கண்ட பாடலைப் பாடலாம் அல்லது வாசிக்கலாம் அல்லது உயிர்த்த இயேசுவை நினைவுகூரும் வேறு பாடலையும் பாடலாம்.)
எசேக் 47:1-2,9
1. தேவாலய வலப்புறமிருந்து
தண்ணீர் புறப்படக் கண்டேன். அல்லேலூயா
அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ
அவர்கள் யாவருமே ஈடேற்றம் பெற்றுக் கூறுவர்: அல்லேலூயா, அல்லேலூயா.
(அல்லது)
2. தேர்ந்தெடுத்த இனம் நீரே
அரச குருத்துவ திருக்குலமும் நீரே
புனித குலமும் நீரே யாவீர்.
இருளில் நின்று தம் வியத்தகு ஒளிக்கு
உங்களை அழைத்த இறைவன் புகழைப்
பாடுவீரே: அல்லேலூயா.
(அல்லது)
3. கல்லறை திறந்தது; காரிருள் மறைந்தது
கிறிஸ்து உயிர்த்தார் அல்லேலூயா,
வல்லமை விளங்கிடும் வாழ்வை வழங்கிட
மரணத்தை வென்றார் அல்லேலூயா.
வாழ்வுக்குச் சாவில்லை, சாவிற்கு வாழ்வில்லை
மரணத்தை மீட்பர் வென்றுவிட்டார்.
வாழ்க்கை பிறந்தது; மரணம் மறைந்தது
வாழ்வோம் கிறிஸ்துவின் புது வாழ்வு.
(அல்லது)
தேவ மைந்தன் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா சாவினின்று உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா
உள்ளத்து மகிமை கொண்டார், அல்லேலூயா உண்மைக்காக உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா அல்லேலூயா (4)
வாழ்நாளில் வேண்டும் உன்றன் அமைதியானது
வேண்டும் நல்ல நெஞ்சினர்க்கு என்றுமானது,
நாம் கண்ட வேதாகமம் உதயமானது
நானிலத்தின் மீது எங்கும் மகிழ்வு ஆனது - 2
(வீட்டார் அனைவரும் முழந்தாளிடுவர்)
குரு: ஆண்டவரே, உமது இரக்கத்தை எங்களுக்குக் காண்பித்தருளும், அல்லேலூயா.
எல்: உமது மீட்பை எங்களுக்குத் தந்தருளும், அல்லேலூயா.
குரு: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: எம் கூக்குரல் உம்மிடம் வருவதாக.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
என்றென்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மீட்பராகிய கிறிஸ்து பலியானதன் முன்அடையாளமாகச் செம்மறி ஆட்டின் இரத்தம் தடவியிருந்த எபிரேயர் இல்லங்களைக் காப்பாற்றினீரே. அவ்வாறே இவ்வீட்டில் வாழும் அனைவரையும் பாதுகாத்து, இவர்களை வழிநடத்தும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
குரு: எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவி உங்களனைவரையும் ஆசீர்வதித்து (வலக் கையை நீட்டி) பாஸ்கா மகிழ்ச்சி என்றும் உங்களோடு இருக்க அருள்புரிவாராக.
எல்: ஆமென்.