(குரு திருவுடைகளை அணிகிறார்.)
குரு: இவ்வீட்டிற்கும் இங்கு வாழ்வோர் அனைவருக்கும் அமைதி உண்டாவதாக. தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: பரம தந்தையின் பரிவும், திருமகனின் அன்பும், தூய ஆவியின் அருளும் உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்: உம்மோடும் இருப்பதாக.
நற்செய்தி யோவா. 14: 21, 23
என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன். என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவரிடம் குடிகொள்வோம்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
குரு: மன்றாடுவோமாக:
எல்லாம் வல்ல பரம தந்தையே, இந்த வீடு, இதில் வாழ்வோர். இங்குள்ள பொருட்களுக்காக உம்மை மன்றாடுகிறோம். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் இல்லங்களை நீர் ஆசீர்வதிக்கத் திருவுளம் கொண்டதுபோல் இவ்வீட்டையும் இங்குள்ளோர் அனைவரையும், இங்குள்ள பொருட்களையும் ஆசீர்வதித்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு மக்கள் மேலும் வீட்டிலும் தீர்த்தம் தெளிப்பார்.)