(வீட்டில் நுழைகையில்)
குரு: இவ்வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக.
(குரு திருவுடைகளை அணிகிறார். குடும்பத்தினர் அனைவருடன் உறவினரும் நண்பரும் கூடி நிற்கின்றனர்.)
குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: அனைத்தையும் படைத்து ஆளும் இறைவா, நீர் என்றும் எல்லாராலும் போற்றப்படுவீராக. உமது கருணையால் இவ்வீட்டைத் திரு ……... திருமதி ……... அவர்களுக்கும் (அவர்கள் பிள்ளைகளுக்கும்) உரியதாக்கியிருக்கிறீர். உமது அமைதியும் அருளும் இக்குடும்பத்தில் என்றும் தங்குவனவாக. இவ்வீட்டார் அனைவரும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி கொண்டு வாழ ஒருவருக்கொருவர் துணையாயிருப்பார்களாக. இவர்கள் கிறிஸ்துவின் வாழ்க்கையில் பங்குகொண்டு, உடலிலும் உள்ளத்திலும் என்றும் நலம் பெற்று வாழத் துணையாய் இருப்பீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்: ஆமென்.
(மந்திரிக்கப்பட்ட நீர் இல்லையெனில் கீழ்க்கண்ட செபத்தைச் சொல்லிக் குரு தண்ணீரை மந்திரிக்கிறார்.)
குரு: இறைவா. இங்கிருக்கும் இவ்வீட்டையும் இதில் வாழ்வோரையும் பொருட்களையும் மந்திரிக்க, உமது பாதுகாவலின் அடையாளமாகப் பயன்படுத்தப்படும் இத் தண்ணீரை ✠ ஆசீர்வதித்தருளும். இவர்களது திருமுழுக்கை நினைவுபடுத்தும் இத்தூய நீரினால் அனைத்துத் தீமைகளிலிருந்தும் இவர்களைக் காப்பாற்றும். உம் தூய ஆவியை இவர்கள்மீது பொழிந்து இவர்களுக்கு உமது அமைதியை அளித்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(தங்களுடைய திருமுழுக்கை நினைவுபடுத்தும் வகையில் இங்குக் கூடியிருப்போர் அனைவர்மீதும் குரு மந்திரித்த தண்ணீரைத் தெளிக்கிறார். தொடர்ந்து தூய்மைக்கும், உரிமையாக்குதலுக்கும் அடையாளமாக எல்லா அறைகளிலும் அத்தூய நீரினைத் தெளிக்கிறார். அப்பொழுது ஈசோப் புல்லினால் என்ற பாடலையோ அல்லது கீழ்க்காணும் புகழ்ப் பாடலையோ பாடவும் அல்லது சொல்லவும்.)
ஈசோப் புல்லினால் என் மேல் தெளிப்பீர்
ஆண்டவரே. நான் தூய்மையாவேன்;
நீரே என்னைக் கழுவ நானும்
உறைபனி தனிலும் வெண்மையாவேன்.
பதிலுரைப்பாடல் திபா. 91: 1-2, 3-4, 5-6, 10-11.
பல்லவி : உன்னதரான ஆண்டவரே நம் வாழ்வு.
1. உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். ஆண்டவரை நோக்கி, நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன் என்று உரைப்பார். - பல்லவி
2. ஏனெனில், ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார். அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும். - பல்லவி
3. இரவின் திகிலுக்கும் பகலின் பாய்ந்துவரும் அம்புக்கும் நீர் அஞ்சமாட்டீர். இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர். - பல்லவி
4. தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். - பல்லவி
நற்செய்தி யோவா. 14:12-21, 23
அந்நாள்களில் இயேசு கூறியதாவது :"நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன் அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன். நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.
உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. எனெனில் அது அவரைக் காண்பதுமில்லை. அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன். இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள். நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன். என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவரிடம் குடிகொள்வோம்.
குரு: மன்றாடுவோமாக:
அன்புத் தந்தையே, நாங்கள் அனைவரும் உம்மைப் புகழ்கின்றோம். இந்தப் புதிய வீட்டில் உமது பேருதவியையும் பராமரிப்பையும் கண்டுணர்ந்து உம்மை வாழ்த்துகின்றோம். விண்ணக வீட்டின் முன் அடையாளமான இந்த எழில்மிகு வீட்டை ஆசீர்வதித்து, உமது மாட்சிமை இந்த வீட்டை ஆட்கொள்ளப் பணிவுடன் வேண்டுகிறோம். இந்த வீட்டைக் கட்டி முடிக்கப் போதிய செலவினங்களையும், கடின உழைப்பையும். பாதுகாப்பையும் அளித்தமையை எண்ணி நன்றி நவில்கின்றோம். எங்கள் அனைவரையும் ஆசீர்வதித்தருளும். இந்த வீட்டை உமது பாதுகாவலிலும், உம் திருமகன் இயேசுவின் தலைமையிலும், உம் புனிதரின் ஆதரவிலும், காவல் தூதர்களின் இடைவிடாக் காவலிலும் வைத்து எங்களை இன்றும் என்றும் ஆசீர்வதித்து வழிநடத்தி, முடிவில்லாப் பேரின்ப வீட்டில் பங்குபெற அருள்புரியும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
இது கிறிஸ்து வழங்கும் அருள்வாக்கு.
ஆசியுரை
குரு: நம் மீட்பர் இயேசு நமக்குக் கற்பித்தபடியே, நாம் பரம தந்தையை நோக்கி உருக்கமுடன் செபிப்போம்.
எல்: பரலோகத்தில் இருக்கிற ………..
குரு: (தம் இரு கைகளையும் அல்லது ஒரு கையை அவர்கள் மேல் நீட்டி) பரம தந்தை உங்கள்மீது அன்புகூர்ந்து, உங்களுடன் வாழ்வாராக.
எல்: ஆமென்.
குரு: இறைமகன் இயேசு உங்களோடு தங்கி, உங்களுக்குத் தமது அமைதியை அருள்வாராக.
எல்: ஆமென்.
குரு: தூய ஆவி உங்கள்மீது இறங்கி, உங்களுக்கு அனைத்தையும் கற்பிப்பாராக:
எல்: ஆமென்.
குரு: எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவி உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து உங்களை என்றும் காப்பாராக.
எல்: ஆமென்.
(இறைவாழ்த்துப் பாடல் பாடலாம் )