(இதனை மரித்தோர் நினைவு நாளாகிய நவம்பர் 2-ஆம் தேதி பயன்படுத்தலாம்.)
குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
அருள்வாக்கு 2 மக்.12:43-45
தம் மக்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் யூதா பணம் திரட்டி ஆறு கிலோ வெள்ளி சேகரித்து பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுக்கும்படி எருசலேமுக்கு அனுப்பிவைத்தார். இச்செயல்மூலம் உயிர்த்தெழுதலை மனத்தில் கொண்டு, நன்முறையில், மேன்மையாக நடந்து கொண்டார். ஏனெனில் வீழ்ந்தோர் மீண்டும் எழுவர் என்பதை எதிர் பார்த்திருக்கவில்லை என்றால், அவர் இறந்தோருக்காக மன்றாடியது தேவையற்றதும் மடமையும் ஆகும். ஆனால் இறைப்பற்றுடன் இறந்தோர் சிறந்த கைம்மாறு பெறுவர் என்று அவர் எதிர்ப்பார்த்திருப்பாரெனில், அது இறைப்பற்றை உணர்த்தும் தூய எண்ணமாகும். ஆகவே இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி அவர் அவர்களுக்காகப் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா130: 1-2; 3-4; 5; 6-7; 8.
பல்லவி: பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது.
1. ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவி சாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். - பல்லவி
2. ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். - பல்லவி
3. ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். - பல்லவி
4. விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. - பல்லவி
5. எல்லாத் தீமைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! - பல்லவி
மன்றாட்டுகள்
குரு: அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, இக்கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அனைவரும் முடிவில்லா வாழ்வு அடையுமாறு மன்றாடுவோமாக.
1. இறைவா, இறந்த எங்கள் பெற்றோர், சகோதரர் சகோதரிகள், மக்களுடைய ஆன்மாக்கள், உமது இரக்கத்தால் தங்கள் குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து விடுதலையடைந்து, விரைவில் உமது ஆறுதலைப் பெறுவார்களாக.
எல்: முடிவில்லா வாழ்வை அளித்தருளும், ஆண்டவரே.
2. இறைவா, இறந்துபோன எங்கள் உற்றார், உறவினர், நண்பர்களுடைய ஆன்மாக்களுக்கும் இரக்கம் காண்பித்து அவர்கள் உமது அரவணைப்பில் வந்து சேருவார்களாக.
3. இறைவா, இக்கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ள விசுவாசிகளின்மீது, குறிப்பாக, யாரும் நினையாத ஆன்மாக்கள் மீது கருணைக் கண் காட்டியருளும், இதனால் அவர்கள் உமது அன்பு முகத்தைக் காணும் பேறு பெறுவார்களாக.
4. இறைவா, மரணமடைந்த குருக்கள், கன்னியர், விசுவாசிகள் அனைவரும் உமது இரக்கப் பெருக்கத்தை முன்னிட்டு உமது ஆறுதலையும் அமைதியையும் பெறுவார்களாக.
குரு: நம் ஆண்டவர் இயேசு கற்றுக்கொடுத்த செபத்தைச் சொல்வோம் ...
எல்லாம் வல்ல இறைவா, இக்கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ள விசுவாசிகள் அனைவருக்கும் மன்னிப்பு அளித்து, உமது திருமுகத்தைக் காணும் பேற்றை அருளுமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு தீர்த்தம் தெளிக்கிறார்; தூபம் காட்டுகிறார்; அப்பொழுது மக்கள் பாடுகின்றனர்.)