(ஆயர் ஆலயக் கதவின் முன் வந்தவுடன் பங்குத் தந்தை சர்ப்ளிஸ், வெள்ளை ஸ்தோலா, காப்பா ஆகியவற்றை அணிந்துகொண்டு, பாடுபட்ட சுரூபத்தை ஆயருக்கு முத்தி செய்ய அளிக்கிறார். அதன்பின் ஆயர் மக்கள்மீது தீர்த்தம் தெளிக்கிறார். பிறகு பங்குத் தந்தை ஆயருக்குத் தூபம் காட்டுகிறார். பீடத்தை நோக்கிப் பவனி புறப்படுகின்றது, ஆயர் பீடத்தின் முன் முழந்தாளிட்டு செபிக்கிறார். பங்குத் தந்தை மக்களைப் பார்த்து ஆயருக்காக இறைஞ்சுமாறு கூறிக் கீழ்க்கண்டவாறு மன்றாடுகிறார்.)
தயாராக இருக்க வேண்டியவை:
கோயில் வாயிலில் : பாடுபட்ட சிலுவை, தீர்த்தம், தூபம்,சாம்பிராணி.
கோயில் பீடத்தில் : அந்தக் கோயில் பாதுகாவலரின் சபை மன்றாட்டு உள்ள திருப்பலிப் புத்தகம், திவ்விய நற்கருணை ஆசீருக்குத் தேவையான அனைத்தும்.
இறந்தோர்க்காக மன்றாட்டு (இறுதி நாள்)
குரு: எங்கள் அடைக்கலமாகிய இறைவா, கடைக்கண் பாரும், உம் ஒரே மகன் கிறிஸ்துவின் திருமுகத்தை நோக்கியருளும். உம் அடியார் இவரைக் காத்தருளும்.
எல்: எம் இறைவா, உம்மையே இவர் நம்பி இருக்கிறார்.
குரு: இவருக்கு உமது விண்ணக உதவியை அனுப்புவீராக.
எல்: உமது திரு நிழலில் இவரை வைத்துக் காத்தருள்வீராக.
குரு: பகைவர் இவரை மேற்கொள்ளாதிருக்கட்டும்.
எல்: தீயோர் இவருக்குத் தீங்கிழைக்காதிருக்கட்டும்.
குரு: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: எங்கள் கூக்குரல் உம்மிடம் வருவதாக.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
ஆன்மாக்களின் தெய்வீக ஆயரே, எங்கள் ஆயர் தம்முடைய தூய அலுவலைச் சிறப்பாக ஆற்ற அவருக்கு வேண்டிய திடனைத் தந்தருளும். உடலிலும் உள்ளத்திலும் என்றும் குன்றாத நலனை அவர் பெற்று. உமக்கு மிகுந்த பயனுள்ள ஊழியம் புரிவாராக. தந்தையோடு என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்: ஆமென்.
ஆயரின் ஆசி
(ஆயர் பீடத்தை முத்தி செய்த பிறகு)
ஆயர்: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள்: உம்மோடும் இருப்பாராக.
ஆயர்: மன்றாடுவோமாக: (அந்தப் பங்குப் பாதுகாவலரின் திருப்பலியின் சபை மன்றாட்டைச் சொல்லுகிறார்.)
எல்: ஆமென்.
ஆயர்: ஆண்டவருடைய திருப்பெயர் போற்றப்படுவதாக.
மக்கள்: இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றுமே.
ஆயர்: ஆண்டவர் பெயராலே நமக்கு உதவி உண்டு.
மக்கள்: அவரே விண்ணையும் மண்ணையும் படைத்தவர்.
ஆயர் : எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவி
உங்களை ஆசீர்வதிப்பாராக.
மக்கள்: ஆமென்.
(இறந்தோர்க்காகத் திருப்பலி நிறைவேற்றினால், கீழே தரப்பட்டிருக்கும் செபங்களிலுள்ள விசுவாசிகள் மன்றாட்டை மட்டும் திருப்பலியில் பயன்படுத்தவும்.
இறந்தோர்க்காகத் திருப்பலி இல்லையென்றால், கீழே கொடுக்கப் பட்டுள்ளவற்றை முழுமையாகச் சொல்லவும்.)
ஆயர் : அன்புள்ள இறை மக்களே, நமது குடும்பத்தைச் சேர்ந்தோர், நம் உறவினர், நண்பர்களை உயிரோடு இருக்கும்போது அன்பு செய்தோம். இப்பொழுது அவர்கள் நம்மோடு இல்லை. நமது மன்றாட்டுக்களில் அவர்களை நினைவு கூர்வது நம் கடமையாகும். ஏனெனில் "இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி அவர். அவர்களுக்காகப் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தார்.” (2 மக. 12:45)
திருப்பாடல் 130:1-8
ஆயர்: ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
மக்கள்: ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவி சாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.
ஆயர்: ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்?
மக்கள்: நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.
ஆயர்: ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
மக்கள்: விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கிறது.
ஆயர்: இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
மக்கள்: எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!
ஆயர்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.
மக்கள்: ஆதியில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
ஆயர்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
மக்கள்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
ஆயர்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
மக்கள்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
ஆயர்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
மக்கள்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
விசுவாசிகளின் மன்றாட்டு
ஆயர் : சகோதரரே சகோதரிகளே! உயிர்ப்பும், உயிரும் நானே என்று கூறிய நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை விசுவசித்து, அவரில் வாழ்ந்து உயிர்விட்ட நம் சகோதரர் சகோதரிகளின் முடிவில்லா வாழ்விற்காக மன்றாடுவோம்.
1. இந்தப் பங்கில் உமக்காக உழைத்து உயிர் துறந்த உம் அடியார்களாம் குருக்கள் முடிவில்லா வாழ்வு பெறும்படியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. உமக்காகத் தங்களையே அர்ப்பணித்து இப்பங்கு மக்களுக்காக வாழ்ந்து இறந்த துறவியர், கன்னியர் முடிவில்லாப் பேரின்பம் பெறும்படியாக உம்மை மன்றாடுகிறோம்.
3. இப் பங்கில் கிறிஸ்துவுக்கு உயிர்ச் சாட்சிகளாய்த் திகழ்ந்து இறந்த அனைவரும் இறைவனில் என்றென்றும் இன்பம் கண்டு மகிழ உம்மை மன்றாடுகிறோம்.
4. இந்தக் கோயிலுக்கும் மக்களுக்கும் உதவி புரிந்து, பங்கு முன்னேற்றத்திற்கு உறுதுணையாயிருந்து இறந்த உபகாரிகள் உம்முடன் முடிவில்லாத் தோழமை பெறும்படியாக உம்மை மன்றாடுகிறோம்.
5. இப்பங்கின் அருள் வாழ்வு, சமூக வாழ்வு வளர்ச்சிக்காகத் தியாக உள்ளத்துடன் இணையற்ற பணிபுரிந்து இறந்த பொது நிலையினர் முடிவில்லா வாழ்வு பெறும்படியாக உம்மை மன்றாடுகிறோம்.
6. இப் பங்கில் உமது திருவுளத்திற்கு அமைந்து வாழ்ந்து இறந்தோர் அனைவர் மீதும், குறிப்பாக, யாரும் நினையா மக்கள் மீதும் உமது அருள் ஒளி ஒளிர உம்மை மன்றாடுகிறோம்.
ஆயர்: மன்றாடுவோமாக: இறைவா! அனைவரையும் படைப்பவரும் மீட்பவரும் நீரே. இறந்த உம் அடியாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும். அவர்களை அமைதியும் ஒளியும் நிறைந்த விண்ணகத்தில் வரவேற்று, உம் புனிதர்களின் தோழமையில் சேர்த்தருளும். அவர்கள் என்றும் விரும்பிய இரக்கத்தை எங்கள் தாழ்மையான மன்றாட்டினால் அடைவார்களாக. எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள்: ஆமென்.
ஆயர்: ஆண்டவரே, நிலையான அமைதியை அவர்களுக்கு அளித்தருளும்,
எல்: முடிவில்லா ஒளி அவர்கள்மேல் ஒளிர்வதாக.
ஆயர்: சமாதானத்தில் அவர்கள் இளைப்பாறுவார்களாக.
எல்: ஆமென்.
மேய்ப்புப் பணி முடிவில்
ஆயர்: அன்புக்குரிய ஞான மக்களே! மேய்ப்புப் பணியின் சிறப்புப் பகுதியாகிய பங்கு விசாரணையை முடிக்கும் இந்நேரத்தில், இறைவன் நமக்கருளிய அனைத்து நலன்களுக்காகவும் நன்றி செலுத்தி, இப்பங்கு மேன்மேலும் வளர்ந்து சிறந்தோங்க, இயேசுவே நமக்குக் கற்றுக் கொடுத்த வார்த்தைகளாலேயே மன்றாடுவோம்.
மக்கள்: பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே …….
ஆயர்: மன்றாடுவோமாக: தெய்வீக ஆயரே, நீர் எவரையும் கைவிடாது எல்லோரையும் கரையேற்றும் கருணை உள்ளம் கொண்டவர். எம் மன்றாட்டுக்குச் செவி சாய்த்து, இப் பங்கு மக்கள் உமது உள்ளத்திற்குகந்த உயர் நெறியில் நின்று, என்றும் மகிழ்ந்து வாழ அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள்: ஆமென்.
ஆயர்: எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவி
உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்.