குரு: ஆண்டவர் பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
நற்செய்தி யோவா.4:5-14
இயேசு சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது. அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம், "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" என்று கேட்டார். அச் சமாரியப் பெண் அவரிடம், "நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?" என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை.
இயேசு அவரைப் பார்த்து. "கடவுளுடைய கொடை எது என்பதையும் 'குடிக்கத் தண்ணீர் கொடும்' எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்'' என்றார். அவர் இயேசுவிடம், "ஐயா. தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம் தந்தை யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்" என்றார். இயேசு அவரைப் பார்த்து, "இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
குரு: மன்றாடுவோமாக:
பேரிரக்கமுள்ள பரம தந்தையே, இக்கிணற்றின் (குளத்தின்) நீரை ✠ ஆசீர்வதித்து எங்கள் உபயோகத்திற்கு ஏற்றதாகச் செய்தருள உம்மைத் தாழ்ந்து பணிந்து வேண்டுகிறோம். இத் தண்ணீரைப் பயன்படுத்தும் அனைவரும் உடல் நலமும் உள்ள வலிமையும் பெறுவார்களாக (மேலும் தங்கள் நிலத்தில் நல்ல விளைச்சலைக் கண்டு மகிழ்வார்களாக) இவ்வாறு இவர்கள் உமது அளவற்ற பராமரிப்பை உணர்ந்து, நன்றியுணர்வோடு உம்மை என்றும் போற்றிப் புகழ்வார்களாக. எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)