குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்,
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
(விருப்பமானால் வாசகம்)
அருள்வாக்கு எசேக். 36:16, 22-27
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே. நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அன்று. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன். நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் தூய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லான இதயத்தை எடுத்துவிட்டு, சதையான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைக் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
குரு: மன்றாடுவோமாக:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உயிரின் ஊற்றும் தூய்மைக்குத் தொடக்கமுமான தண்ணீரின் வழியாக நாங்கள் புனிதமடைந்து, முடிவற்ற வாழ்வின் கொடையைப் பெறத் திருவுளமானீர். இத்தண்ணீரினால் நாங்கள் பாதுகாப்படைய விரும்புகிறோம். எனவே, ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம். இத் தண்ணீரை ✠ ஆசீர்வதித்தருளும் இத் தண்ணீர் தெளிக்கப்படும் இடமெல்லாம் எதிரியின் தாக்குதல் அனைத்தும் தோல்வியுறச் செய்வீராக. உம்முடைய தூய ஆவி எழுந்தருளி எங்களை இடையறாது பாதுகாக்க வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக தந்தாய், உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.