குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே.
எல்: ஆமென்.
குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
அருள்வாக்கு 2 சாமு 6:12-15
ஆண்டவரின் பேழையை முன்னிட்டு ஒபேது - ஏதோமின் வீட்டாருக்கும் அவனுக்குரிய அனைத்துக்கும் ஆண்டவர் ஆசி வழங்கினார் என்று அரசர் தாவீதுக்குச் சொல்லப்பட்டது. எனவே, தாவீது புறப்பட்டுச் சென்று கடவுளின் பேழையை ஓபேது - ஏதோமின் இல்லத்திலிருந்து தாவீதின் நகருக்கு அக்களிப்போடு கொண்டு வந்தார். ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்ததும் ஒரு காளையையும் ஒரு ஆட்டுக் கிடாயையும் பலியிட்டார். நார்ப்பட்டால் நெய்யப்பட்ட ஏபோத்தை அணிந்துகொண்டு, தாவீது தம் முழு வலிமையோடு ஆண்டவர் முன்பாக நடனமாடிக் கொண்டிருந்தார். தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
குரு: அனைவரும் சேர்ந்து ஆண்டவரைப் போற்றுவோமாக.
எல்: வீணையோடும் குழலோடும் போற்றுவோமாக.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
இறைவா, இசையைக் கேட்கும் எல்லா உயிர்களும் அமைதியோடும் மகிழ்ச்சியோடும் வாழத் திருவுளமானீர். உள்ளம் நைந்தவர்களுக்கு ஆறுதலும் வலிமையும் இசையின் மூலம் வழங்குகின்றீர். மோசே வழியாக இசைக் கருவிகளைப் பயன்படுத்தி உம்மை வழிபட அன்று கட்டளையிட்டீர். ஏழு பாடகர் குழுக்கள் இன்னிசை முழங்க உம் புகழைப் பறைசாற்றினார்கள். மகிழ்ச்சியின் மிகுதியால் மன்னர் தாவீது இசைக்கு ஏற்றவாறு நடனமாடினார். இன்று நாங்களும் இந்த இசைக் கருவியைப் (கருவிகளை) பயன்படுத்துவதால் திருவழிபாட்டில் முழுமையாக ஈடுபாடு கொள்ளவும், எங்கள் உள்ளங்களைத் தட்டி எழுப்பவும். உம்முடைய புகழை உலகமெங்கும் எடுத்துரைக்கவும் வரமருளும், இந்த இசைக் கருவியின் (கருவிகளின்) மீது உம் ஆற்றல் நிரம்பி இதன்மூலம் எழும் பண்ணிசையால் மாந்தரின் உள்ளம் ஒருநிலைப்பட்டு உம்மிடம் எழுவதாக.
ஆகவே, ஆண்டவரே இக்கருவியை (கருவிகளை) ✠ ஆசீர்வதித்தருளும். இதை மீட்டுவோரையும், கேட்போரையும் ஆசீர்வதித்தருளுமாறு எங்கள் ஆண்டவர் கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு இசைக் கருவிகளின்மீதும், அக்கருவிகளை வாசிப்போர் இருப்பின் அவர்கள்மீதும் தீர்த்தம் தெளிக்கிறார். மக்கள் அனைவரும் எழுந்து நின்று பாடுங்கள் ஆண்டவருக்கு' என்னும் பாடலைப் பாடவும்.)
பாடல் : திருப்பாடல் 150
பதிலுரை: பாடுங்கள் ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள். அல்லேலூயா (4)
1. ஆண்டவர் தம் திருத்தலத்தில்
அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
மாண்புயர் வான்மண்டலத்தில்
அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
2. எக்காளத் தொனி முழங்க
அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
வீணையுடன் யாழ் இசைத்து
அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.
3. நாதமிகு தாளத்துடன்
அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
கைத்தாள ஒலி முழங்க
அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.