குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு,
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
அருள்வாக்கு தொநூ.1:1, 11-12
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார். அப்பொழுது கடவுள் புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும் கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும் என்றார். அதுவும் அவ்வாறே ஆயிற்று. புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா. 104:1-2,14-15,24, 27-28.
பல்லவி: ஆண்டவரே உம் படைப்புகளால் பூவுலகம் நிறைந்துள்ளது.
1. என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்; பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர். - பல்லவி
2. கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்; மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றீர்; இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கின்றீர்; மனித உள்ளத்திற்கு மகிழ்ச்சியூட்டத் திராட்சை இரசமும், முகத்திற்குக் களையூட்ட எண்ணெயும், மனித உள்ளத்திற்குப் புத்துணர்வூட்ட அப்பமும் அளிக்கின்றீர். - பல்லவி
3. ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன. - பல்லவி
4. நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன; நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. - பல்லவி
குரு: மன்றாடுவோமாக:
அனைத்தையும் படைத்துப் பாதுகாக்கும் இறைவா, நீர் என்றும் போற்றப்படுவீராக. உம்மாலேயே அனைத்தும் உயிர் வாழ்கின்றன. உம் மக்கள் உண்ணவும், வாழம் பூமியிலிருந்து பயிர் முளைத்துப் பயன்தரச் செய்கின்றீர். நாங்கள் நிலத்தைப் பண்படுத்தி விதை விதைக்கிறோம். ஆனால் நீரே பயிரை வளரச் செய்கின்றீர். உமது ஆசியால் இப்பயிர் நன்கு வளர்ந்து பலன் தர மழையும் காற்றும் தந்து, இவர்களுக்கு நல்ல விளைச்சல் கிடைக்கச் செய்தருளும். இதனால் இவர்களும் மற்றவர்களும் தேவையான உணவுப் பொருளும் பெற்று உம்மை நன்றி உள்ளத்துடன் போற்றுவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்,
(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)