குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
அருள்வாக்கு தொநூ.1:9-12
கடவுள், "விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு 'நிலம்' என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் 'கடல்' என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், "புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
குரு: இப்பூவுலகையும் அதில் காணும் உயிரினங்கள், உயிரற்றவை அனைத்தையும் தம் வியத்தகு ஆற்றலால் படைத்த இறைவன் தாம் படைத்த யாவும் நல்லதெனக் கண்டார். ஆம், அவர் படைத்த அற்புதமான இயற்கையைக் காணும்போதெல்லாம் அவருடைய மாண்பினையும் அவருக்கே உரித்தான அளவுகடந்த ஆற்றலையும் நினைத்து வியந்து போற்றக் கடமைப்பட்டிருக்கிறோம்.
பதிலுரைப்பாடல் திபா 104: 1, 3, 14-15, 24, 31, 34.
பல்லவி: என் நெஞ்சே! ஆண்டவரைப் போற்றிடு.
1. என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மை மிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர். - பல்லவி
2. ஆண்டவரே, நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார்முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்! - பல்லவி
3. கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்; மானிடருக்கெனப் பயிர் வகைகளை வளரச் செய்கின்றீர்; இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கின்றீர்; மனித உள்ளத்திற்கு மகிழ்ச்சியூட்டத் திராட்சை இரசமும், முகத்திற்குக் களையூட்ட எண்ணெயும், மனித உள்ளத்திற்குப் புத்துணர்வூட்ட அப்பமும் அளிக்கின்றீர். - பல்லவி
4. ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. - பல்லவி
5. ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். - பல்லவி
மன்றாட்டுகள்
குரு: தொடக்கத்தில் கடவுள் இவ்வுலகை உருவாக்கும்போதே கண்கவரும் இயற்கையால் அதை அழகுபடுத்தினார். மனித இனத்திற்குத் தேவையான தாவர இனங்கள் அனைத்தையும் விளையச்செய்யும் நம் அன்புத் தேவனிடம் நம் தேவைகளுக்காக மன்றாடுவோம்.
1. அன்பு இறைவா, நீர் படைத்த இயற்கை உம் வியத்தகு ஆற்றலை இவ்வுலகில் பறைசாற்றுகிறது. எமது உபயோகத்திற்காக இந்நிலத்தில் நடப்பட்டிருக்கும் தென்னை பனை மரங்களை (கன்றுகளை) நீர் ஆசீர்வதித்து, செழிப்புடன் வளரச் செய்து, நல்ல பலன் அளிக்கச் செய்ய உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. இரக்கமுள்ள தந்தையே, இம்மரங்கள் செழித்து வளர்த் தங்கள் உடல் உழைப்பைத் தரும் ஊழியர்கள், அவர்களின் குடும்பங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களின் வாழ்வு வளம்பெற உம்மை மன்றாடுகிறோம்.
3. அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவா, நாடெங்கிலும் போதுமான பருவ மழை பொழியச் செய்து, பயிர் பச்சைகள் அனைத்தும் செழித்து வளரவும். அதனால் எளிய மக்கள் அனைவரும் வாழ்வு பெறவும் வழிவகுக்க உம்மை மன்றாடுகிறோம்.
4. அன்பின் ஊற்றாகிய இறைவா! இம் மரங்கள் உயர்ந்து காணப்படுவதோடு தாகத்தைத் தணிக்கும் அருமருந்தாகவும் விளங்குகின்றன. இவற்றை வளர்ப்பவர்கள் வாழ்வில் வளம் பெற்று பிறர்க்குப் பலன் தரும்படியாக உம்மை மன்றாடுகிறோம்.
குரு: மன்றாடுவோமாக:
இயற்கையின் தலைவா! இந்நிலத்தில் வளரும் (தென்னை, பனை) மரங்களை ✠ ஆசீர்வதித்தருளும். இவற்றின் ஒவ்வொரு பாகமும் பல்வேறு வகைகளில் மக்களின் தேவைகளுக்குப் பயன்படத் திருவுளமானீரே. இத்தோப்பில் நடப்பட்டிருக்கும் மரங்களைச் (தென்னை, பனை) செழிப்புறச் செய்து, மக்களின் மனம் மகிழ்ந்திடச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக, தந்தையே உம்மை இரந்து மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
குரு: உங்கள் நிலத்தில் வளரும் மரங்கள் செழிப்புற்று நிறைந்த பலனளிக்க எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவி ஆசீர்வதிப்பாராக.