குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: பரம தந்தையின் அன்பும் இயேசு கிறிஸ்துவின் பரிவும் தூய ஆவியின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல்: உம்மோடும் இருப்பதாக.
பதிலுரைப்பாடல் திபா. 101:2, 3, 4, 7.
பல்லவி : இரக்கத்தையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்.
1. மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்; எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்? தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன். – பல்லவி
2. இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன். நெறி தவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்; அது என்னைப் பற்றிக்கொள்ளாது. – பல்லவி
3. வஞ்சக நெஞ்சம் எனக்கு வெகு தொலையில் இருக்கும்; தீதான எதையும் நான் அறியேன். – பல்லவி
4. வஞ்சனை செய்வோருக்கு என் மாளிகையில் இடமில்லை. பொய் உரைப்போர் என் கண்முன் நிலைப்பதில்லை. –பல்லவி
நற்செய்தி மத். 25:14-30
அந்நாள்களில் இயேசு கூறியதாவது: "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார். நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, 'ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், 'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர், எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, 'ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார். அவருடைய தலைவர் அவரிடம், 'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே. சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர், எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன், உன் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் என்றார். ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரை அணுகி, 'ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது' என்றார். அதற்கு அவருடைய தலைவர், 'சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் துவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்' என்று கூறினார். எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்று அவர் கூறினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
குரு: மன்றாடுவோமாக (கடை)
எங்களைப் பராமரிக்கும் தந்தாய், நல்வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்யக் கடைகள் ஏற்பட்டுள்ளன. இதோ இக்கடையையும் இதனுள் இருக்கும் பொருட்களையும் விற்போரையும் வாங்குவோரையும் ஆசீர்வதித்தருளும். பொருட்களை விற்கும்பொழுதும், வாங்கும் பொழுதும் நீதி, நேர்மை, அன்பு போன்ற பண்புகளை மக்கள் கடைப்பிடிப்பார்களாக. வியாபாரம் செழித்தோங்கவும், வருவாய் பெருகவும் அருள்புரிவீராக. இலாபத்தை மட்டுமே மனதில் கொள்ளாமல், இவ்வுலகிற்கு இக்கடை முன்மாதிரியாக இருப்பதாக. இக்கடைக்கு எவ்வித ஆபத்தும் நேரிடாமல் காப்பீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
குரு: மன்றாடுவோமாக (உணவகம்)
எங்கள் புகலிடமும் பலமுமாகிய தந்தாய், கன்னி மரியா தம் கணவருடன் பெத்லகேம் சென்றபோது தங்கும் இடத்திற்காகத் தவித்தார்கள். எங்கள் மக்கள் தங்கி இளைப்பாறி உணவு உட்கொண்டு புத்துயிர் பெற அமைந்துள்ள இந்த உணவகத்தை ஆசீர்வதியும். இதன் உரிமையாளரையும் இதைக் கட்டியவர்களையும் இங்கு வருபவர்களையும் அருட்கொடைகளால் நிரப்பியருளும். இதனால் பயன்பெறுவோர் அனைவரும் விண்ணக விருந்தினை நினைந்து உம்மைப் போற்ற வரமருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
குரு: எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவி நம்மை ஆசீர்வதித்து, எல்லாத் தீங்குகளினின்றும் பாதுகாத்து, முடிவில்லா வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்வாராக.
எல்: ஆமென்.
குரு: ஆண்டவரை வாழ்த்துவோமாக.
எல்: இறைவனுக்கு நன்றி.