தொழிலகத்தை மந்திரித்தல்

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே. 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

அருள்வாக்கு 1கொரி. 13:4-7; 14:20.

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப் படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். அன்பர்களே, சிந்திப்பதில் நீங்கள் சிறுபிள்ளைகள்போல் இராதீர்கள். தீங்கு செய்வதில் குழந்தைகள் போலவும் சிந்திப்பதில் முதிர்ச்சி அடைந்தவர்கள் போலவும் இருங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

பதிலுரைப்பாடல் திபா. 1:1, 2, 3, 5-6

பல்லவி : நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்.

1. பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர் நற்பேறு பெற்றவர். – பல்லவி

2. ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் நற்பேறு பெற்றவர். – பல்லவி

3. நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவ காலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். – பல்லவி

4. பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்; பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார். நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். - பல்லவி

குரு: மன்றாடுவோமாக

அனைத்திற்கும் முதலும் முடிவுமான இறைவா, எம் ஆதிப் பெற்றோரின் தவறால், 'நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உண்பாய்' என்று நீர் கட்டளையிட்டீர். உம் திருமகனின் வருகையால் இதை மாற்றி, விண்ணுலகம் அடைய உதவும் இனிய இந்தத் சாதனமாக உழைப்பை மாண்புறச் செய்தீரே. தொழிலகத்தை ஆசீர்வதிக்க உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். இத்தொழிலகத்தை நிறுவியவரையும், இதன் உரிமையாளரையும், இங்குத் தொழில் செய்வோரையும், உமது ஆசியால் நிரப்பியருளும். இங்கு எப்பொழுதும் உண்மை, அன்பு, நீதி, நேர்மை, சேவை, உழைப்பு முதலிய நற்குணங்கள் வளர்ந்து, தொழிலும் முன்னேற்றமடைந்து, இவர்களும் இவர்களுடைய குடும்பத்தாரும் பிறரும் வாழ்க்கையில் வளம் பெறுவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். 

எல்: ஆமென்.

(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)