குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
முன்னுரை : அன்பார்ந்தவர்களே! படைப்புகள் அனைத்தும், மனிதர்களுக்காகவே படைக்கப்பட்டுள்ளன. இதோ. இத்தோப்பிலுள்ள மரங்கள் நம் நல்வாழ்விற்காகவே இருக்கின்றன. இறைவன் இத்தோப்பிலுள்ள மரங்களையும் (பழங்களையும்) இவற்றைப் பயன்படுத்தும் அனைவரையும் ஆசீர்வதித்தருளுமாறு உருக்கமுடன் மன்றாடுவோம்.
(சிறிது நேரம் மௌனம்)
அருள்வாக்கு தொநூ. 1:1, 11-12
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தார். அப்பொழுது கடவுள், "புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும் கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்" என்றார். அதுவும் அவ்வாறே ஆயிற்று. புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனி தரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா. 67:4,7;128:5
பல்லவி : கடவுள் ஆசியால் பூமி பலன் தந்தது.
1. கடவுளே! எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! - பல்லவி
2. ஆண்டவரே, பாலை நிலத்தில் வெள்ளத்தைத் திருப்பி விடுவதுபோல், எங்கள் நிலைமையை மாற்றிவிடும். கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்களாக. - பல்லவி
3. சிறுக விதைப்பவன் சிறுக அறுப்பான், பெருக விதைப்பவன். பெருக அறுப்பான். - பல்லவி
(பழங்கள் இருப்பின்)
குரு: மன்றாடுவோமாக:
வானகத் தந்தாய், நீர் எத்துணை வல்லவர்! எத்துணை நல்லவர்! உம்மைப் புகழ்கிறோம். நீர் இனிமையும் கனிவும் உளளவர். நீர் இனிமை மிக்க கனிகளை எங்களுக்கு இதோ அருளியிருக்கிறீர். உம்மை வாழ்த்துகின்றோம். இக்கனிகளையும் இவற்றைத் தாங்கியுள்ள மரங்களையும் ✠ ஆசீர்வதித்தருளும். (தோப்புக்கு நடுவில் நிற்பின், நாலாப் பக்கமும் ஆசீர் தரவும்) இக்கனிகளிலே இனிமையும் சுவையும் இருப்பது போல எங்கள் வாழ்வில் கிறிஸ்துவின் இனிமையும் சுவையும் காணப்படுவதாக. நற்கனிகளை வழங்கும் நல்ல மரங்களைப் போல நாங்கள் திருமறைக்கும் நாட்டுக்கும் நற்பலன்களை விளைவிப்போமாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
(பழங்கள் இல்லாவிடில்)
குரு: மன்றாடுவோமாக:
நன்மை நிறைந்த இறைவா, நாங்கள் வாழ்வதும் இயங்குவதும் உம்மிலேதான். இப்பழ மரங்கள் எங்களுக்கு நிறைவாகக் கனிதந்து எங்கள் வாழ்வு வளமும் நலமும் பெற உதவிட அருள்புரிந்து ஆசீர்வதியும். இதனால் எங்கள் வறுமை நீங்குவதாக. உமது புகழ் ஓங்குவதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(தீர்த்தம் தெளிக்கிறார்.)