தொழில் கருவிகளை மந்திரித்தல்

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

குரு: ஆண்டவருடைய பெயரால் இங்கு ஒன்று கூடியிருக்கும் தொழிலாளர்களாகிய நம் ஒவ்வொருவரையும், நம் உழைப்பிற்கு உதவும் கருவிகளையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.

எல்: ஆமென்.

குரு: நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உண்ணவேண்டும் என்னும் நியதியைத் தந்திருக்கும் இறைவன் இக்கருவிகளைப் பயன்படுத்துவோரைப் பாதுகாப்பாராக.

எல்: ஆமென்.

முன்னுரை

இன்று பாரத நாடெங்கும் மக்கள் (ஆயுத பூசை என்ற பெயரில் பெருவிழா எடுத்து) படிப்படியாகத் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் காணத் தேவைப்படும் படைக்கலன்கள், கருவிகள், கல்வி அறிவூட்டும் ஏடுகள் அனைத்தையும் இறைவன் முன் படைத்து அவற்றை ஆசீர்வதிக்கும்படி இறைஞ்சுகின்றனர். நாமும் நமது உழைப்பிற்கு உதவும் கருவிகள் அனைத்தையும் ஆண்டவருக்கு உகந்த காணிக்கையாக்குவோம். கடந்த ஆண்டு முழுவதும் நம் உழைப்பிற்குத் தேவையான உடல் உரமும், உள்ள பலமும் இறைவன் தந்தமைக்கு நன்றி கூறுவோம். குறிப்பாக, நம் ஒவ்வொருவரையும் தமது அன்பிலும் அமைதியிலும் வைத்துப் பாதுகாத்து, உழைப்பிற்குத் தகுந்த பலன் தந்தமைக்கு நம் இதயம் கனிந்த நன்றியைச் சமர்ப்பிப்போம்.

(சிறிது நேரம் மௌனம்)

நன்றி கூறல்

பதிலுரை : ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

1. இறைவா, கடந்த ஆண்டு முழுவதும் பருவ மழையைப் போதிய அளவு தந்து, வறண்டு கிடந்த நிலத்தை வளமுறச் செய்தமைக்கு ..

2. உழைப்பதற்குத் தேவையான கருவிகள், மற்றும் பொருட்கள், வீரிய விதைகள் அனைத்தையும் போதிய அளவு பெற்றுக் கொள்ள வழிவகுத்தமைக்கு ..

3. நாங்கள் வேலை செய்யும்போது எதிர்பாராமல் ஏற்படக்கூடிய எல்லா ஆபத்துகளினின்றும் எங்களைப் பாதுகாத்தமைக்கு ..

4. உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் தந்து எங்கள் வாழ்வு மேன்மேலும் உயர்வுபெற வழிகாட்டி வருகின்றமைக்கு ..

5. தொழிலாளர், பணியாட்கள் அனைவருடைய குடும்பங்களையும் ஆசீர்வதித்து அவர்கள் தேவைகளை நிறைவு செய்தமைக்கு ...

அருள்வாக்கு 2 தெச.3:6-13

அன்பர்களே! எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட முறைமையின்படி ஒழுகாமல் சோம்பித்திரியும் எல்லாச் சகோதரர் சகோதரிகளிடமிருந்தும் விலகி நில்லுங்கள் என, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்.

எங்களைப்போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல, மாறாக, நீங்களும் எங்களைப்போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம்.

'உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது' என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோது உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம். இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம். சகோதர சகோதரிகளே! நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளர வேண்டாம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

மன்றாட்டுகள்:

குரு: ஆதிப்பெற்றோர் காலத்திலிருந்தே நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டு உழைப்பது நியதியாயிற்று. துன்பமின்றி இன்பமில்லை. இவ்வுலக வாழ்வில் நிறைந்த சுகமும் இன்பமும் அனுபவிக்க விரும்பும் நாம் மறுமையிலும் ஈடில்லா இன்பம் பெறப் பாடுபட்டு உழைக்க வேண்டும். நம் ஒவ்வொருவரையும், நம் வேலையையும், வேலைகளுக்கு உதவும் எல்லாக் கருவிகளையும் பொருட்களையும் நம் தந்தையாகிய இறைவன் ஆசீர்வதிக்கும்படி மன்றாடுவோம். 

1. அன்புத் தந்தையே, தொழிலாளர்களின் பாதுகாவலராகிய புனித யோசேப்பின் வழியைப் பின்பற்றி, நாங்கள் அனைவரும் நீதி, நேர்மை, பொறுப்புணர்வோடு உழைக்க வரமருளும். 

எல்: ஆண்டவரே, எங்கள் உழைப்பையும் இக்கருவிகளையும் ஆசீர்வதியும்:

2. மனிதனின் திறமையாலும் உழைப்பாலும், படைப்பையும் உலகையும் மேன்மைப்படுத்தத் திருவுளம் கொண்டிருக்கும் இறைவா, கடின உழைப்பை மேற்கொள்ளும் தொழிலாளிகள் அனைவரையும், அவர்களின் குடும்பங்களையும் ஆசீர்வதித்து, அவர்கள் வாழ்வு உயர்வுபெற அருள்புரியும். 

3. தொழிற்சாலைகளில் விசைக் கருவிகளைப் பயன்படுத்திப் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் உடலில் பலமும் உள்ளத்தில் வலிமையும் ஈந்து, எதிர்பாராமல் நேரிடக்கூடிய எல்லா விபத்துக்களினின்றும் அவர்களைப் பாதுகாத்தருளும். 

4. நிலத்தில் பாடுபடும் விவசாயிகள் தங்கள் வாழ்வில் மன நிறைவுபெறப் போதுமான பருவ மழையைத் தந்து நல்ல விளைவை அளித்தருளும்.

5. முதலாளிகள் மனித மாண்பை மதித்து கனிந்த உள்ளம் கொண்டவர்களாய், உண்மை, நீதி, நேர்மை ஆகிய நற்பண்புடையவர்களாய் வாழ வரமருளும்.

6. வாழ்விற்கு உதவும் கருவிகளை எளியோரும் பெற்று, தம் தொழிலிலும் வாழ்விலும் வளம் பெற அருளும்.

7. வேலை வாய்ப்பின்றித் தவிப்போர் அவரவர் தகுதிக்கும் தேவைக்கும் ஏற்ப வேலை வாய்ப்புப் பெற்று வாழ்வில் உயர்வு பெற உதவி அளித்தருளும்.

குரு: மன்றாடுவோமாக:

எல்லாம் வல்ல அன்பு இறைவா, இங்குக் குழுமியுள்ள உமது மக்களின் விண்ணப்பங்களுக்குக் கனிவாய் செவிசாய்த்தருளும். இவர்கள் உம்மீது ஆழ்ந்த விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டு விரும்பி மன்றாடுவதை ஏற்றருளும். இவர்களின் உழைப்பை ஆசீர்வதித்து, மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் வளம் பெற அருள் தாரும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

சிறப்பு ஆசீர்

குரு: நன்மையே உருவான நம் ஆண்டவர், நம் அனைவருக்கும் உழைப்பதற்குத் தேவையான உடல் நலமும், உள்ள உறுதியும் தந்து, தீங்கனைத்திலிருந்தும் நம்மைப் பாதுகாப்பாராக.

எல்: ஆமென்.

குரு: நாடெங்கிலும் நீர் வளமும் நிலவளமும் பெருக, எளிய மக்கள் அனைவரும் பஞ்சம், பசி, பிணி நீங்கி நலமுடன் வாழ அருள்புரிவாராக.

எல்: ஆமென்.

குரு: உழைப்பிற்கு உதவும் இக்கருவிகள் அனைத்தும் தகுதியான முறையில் பயன்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படத் துணைபுரிவாராக.

எல்: ஆமென்.

குரு: எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவி உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, என்றும் தமது அன்பிலும் அமைதியிலும் வைத்துப் பாதுகாப்பாராக.

எல்: ஆமென்.