கணினியை (அச்சகத்தை) மந்திரித்தல்

(இதை அச்சகத்திற்கு ஏற்றவாறும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.)

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. 

எல்: உம்மோடும் இருப்பாராக.

அருள்வாக்கு 2கொரி 3:2-3

யாவரும் வாசித்து அறிந்து கொள்ளும் முறையில் எங்கள் இதயத்தில் எழுதப்பட்ட நற்சான்றுக் கடிதம் நீங்களே. எங்கள் பணியின் வாயிலாகக் கிறிஸ்து எழுதிய கடிதம் நீங்களே என்பது வெளிப்படை. அது மையினால் எழுதப்பட்டது அல்ல; மாறாக வாழும் கடவுளின் ஆவியால் எழுதப்பட்டது. கற்பலகையில் அல்ல, மாறாக மனித இதயமாகிய பலகையில் எழுதப்பட்டது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா 8:1, 3-4,5-6 

பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது.

1. ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது. - பல்லவி 

2. உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? - பல்லவி

3. ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி

நற்செய்தி லூக்கா 8:16-19

அக்காலத்தில் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர். எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது: ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.'

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

விசுவாசிகளின் மன்றாட்டு

குரு: அன்புக்குரியவர்களே! நம் சகோதர சகோதரிகளுக்குச் சமூகத் தொடர்புச் சாதனங்கள் வழியாகக் கிறிஸ்துவைப் பறை சாற்றுகின்ற நாம் நம் உள்ளத்தை இறைவன்பால் எழுப்பி, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால், நம் மன்றாட்டுக்களை எல்லாம் வல்ல இறைவனிடம் சமர்ப்பிப்போம்.

1. திருமுழுக்குப் பெற்ற நாங்கள் அனைவரும், எமது அன்றாட வாழ்விலும் அதன் சூழலிலும், எமக்காக மரித்து உயிர்த்த இயேசுகிறிஸ்துவைப்பற்றி அனைவருக்கும் ஆர்வத்தோடு எடுத்துச் சொல்ல வேண்டுமென்று, ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. சமூகத் தொடர்புச் சாதனத்துறையில் பணியாற்றும் இறைமக்கள், இச்சாதனங்கள் வழியே நற்செய்தியை அறிவிக்கும் பணியில் அச்சமின்றியும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம். 

3. தகவல் தொடர்புச் சாதன உலகம் படைத்துத் தருகின்ற செய்திகளிலும் நிகழ்ச்சிகளிலும் உண்மையானவற்றையும் ஆக்கப்பூர்வமானவற்றையும் தங்கள் குழந்தைகள் தேர்ந்துகொள்ள உதவும் வகையில், குடும்பங்களில் உள்ளவர்கள், தூய ஆவியினால் ஒளியூட்டப் பெற்று வழிகாட்ட வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

4. சமூகத் தொடர்புச் சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கிறிஸ்துவுக்குச் சாட்சி சொல்லும் உன்னதப் பணியினைத் திருச்சபையும் பங்குக் குழுக்களும், உற்சாகத்துடன் செயல்படுத்த வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

5. தகவல் தொடர்புச் சாதனங்களின் உரிமையாளர்களையும், முதலீட்டாளர்களையும், சாதனங்களின் வழியாக நற்செய்தியை அறிவித்துப் பரப்புகின்ற இந்த நிறுவனங்களையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

குரு: செபிப்போமாக:

எங்களில் குடிகொண்டிருக்கும் எங்கள் விண்ணகத் தந்தையே! நாங்கள் உம்மைப் போற்றுகின்றோம். நீர் மனித வாழ்வை ஒவ்வொரு நிலையிலும் மேன்மையடையச் செய்கிறீர்; வளமடையச் செய்கிறீர். புதிய கருவிகளை உருவாக்கவும் அவற்றை நன்முறையில் பயன்படுத்தவும் மனிதனுக்கு ஆற்றல் அளிக்கின்றீர். அந்த ஆற்றலின் விளைவாக இங்கு இருக்கும் கணினியையும் (மற்ற சமூகத் தொடர்புச் சாதனங்கள்) இதைப் பயன்படுத்துபவர்களையும் ஆசீர்வதியும். இவை வெறும் படைப்புப் பொருள்கள் அல்ல; மாறாக, உமது மீட்புச் செய்தியை அறிவிக்கும் கருவிகள். உமது மகனும் எங்கள் மீட்பருமாகிய கிறிஸ்துவை எடுத்துச் சொல்லும் இதயங்களாக இவையும் நாங்களும் மாற அருள்புரிவீராக. எங்கள் ...

(குரு கணினியை மந்திரித்தல்)

(நன்றிப்பாடல் பாடுதல்)