குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பும் அருளும் உங்களோடு இருப்பதாக.
எல்: உம்மோடும் இருப்பதாக.
முன்னுரை
வையகத்தை வாழ்விக்க வந்த வள்ளலாகிய கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்தபோது சென்றவிடமெல்லாம் நன்மையே செய்தார். எண்ணற்ற பிணியாளர்களைக் குணமாக்கினார். 'குணமாக்கும் ஆண்டவர்' தாமே என்பதை மக்கள் உணரச் செய்தார். ஆழ்ந்த நம்பிக்கையோடு அவரை அண்டி வந்தோர் அனைவருக்கும் வாழ்வளித்தார். உடல் நோய் மட்டுமன்று, நம் உள்ள நோய்களையும் போக்கி நம் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகம் தர இயலா அன்பு, ஆறுதல், அகமகிழ்வு. அமைதி அனைத்தையும் அளிக்க வல்லவர் அவர் ஒருவரே. உடல் நோயுற்றோர்க்கு வாழ்வளிக்க இருக்கும் இப்புதிய மருத்துவமனை (மருந்தகம்) இன்றும் என்றும் அவரது அன்பிலும் பாதுகாப்பிலும் நிலைத்து நிற்கும் வரம் வேண்டி ஆண்டவரைப் போற்றிப் புகழ்வோம்.
பதிலுரைப்பாடல் திபா. 18:2,6,16, 20
பல்லவி : ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்.
1. ஆண்டவர் என் கற்பாறை: என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். - பல்லவி
2. என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது. – பல்லவி
3. உயரத்தினின்று அவர் என்னை எட்டிப் பிடித்துக் கொண்டார்; வெள்ளப் பெருக்கினின்று என்னைக் காப்பாற்றினார். என் மாசற்ற செயலுக்கு ஏற்ப கைம்மாறு செய்தார். - பல்லவி
குரு: நம் அனைவருக்கும் வாழ்வளிக்க வந்த இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது செய்த அருங்குறிகள் பல. குறிப்பாக இவ்வுலகில் யாவராலும் கைவிடப்பட்ட ஏழை எளியவர்களை அவர் அன்பு செய்து, அரவணைத்த விதம் நம் உள்ளத்தைத் தொடவல்லது. அவர் குணமளிக்கும் ஆண்டவர் என்பதைக் கேட்போம்.
நற்செய்தி மத். 8:14-17
இயேசு பேருதுவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார். பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு 'அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
(சிறிது நேரம் மௌனம்)
குரு: உடல் ஊனமுற்றோர், பிணியாளர்மீது ஆண்டவரின் பரிவன்பு எத்தகையது என்பதை இவ்வாசகத்தின் வழியாக உணர்ந்தோம். தங்கள் உடல் நோய் தீர்க்க இப்புதிய மருத்துவமனையை (மருந்தகத்தை) நாடிவரும் பிணியாளர்களுக்காகவும் இதைப் பொறுப்பேற்று நடத்தும் அனைவருக்காகவும் மன்றாடுவோம்.
1. மருத்துவர்க்கெல்லாம் சிறந்த மருத்துவரே! உம் மக்களின் உடல் நோய் தீர்க்கப் புதிதாகத் திறக்கப்படும் இம் மருத்துவ மனையை (மருந்தகத்தை) உமது அருட்கரம் விரித்து ஆசீர்வதித்தருள வேண்டுமென்று ….
எல்: ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பு இறைவா! இம் மருத்துவ மனையில் புதிதாகப் பணி ஏற்கும் மருத்துவர், செவிலியர், பிற பணியாளர்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து. அவர்களின் உடல் உள்ளத் தேவைகளை நிறைவு செய்து, தியாக உள்ளத்தோடு சேவையாற்றத் தாராள மனப்பான்மையை அவர்களுக்கு அருள வேண்டுமென்று ....
3. இரக்கமுள்ள இறைவா, உம்மில் ஆழ்ந்த விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டு இம்மருத்துவமனையைத் தேடி வருவோர் அனைவருக்கும் நீர் முழு உடல் நலமும், ஆன்ம வளமும் அளிக்க வேண்டுமென்று...
4. கருணை தெய்வமே, பணிகள் அனைத்திலும் மிகவும் இன்றியமையாததும் சிறப்பானதுமான மருத்துவப் பணிக்கு, நீர் ஒரு சிலரை மட்டுமே அழைக்கின்றீர். இதில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் தன்னலம் தேடாது தொண்டுள்ளத்துடன் பணிபுரிய வரம் அருள் வேண்டுமென்று ...
5. இறைமகனாம் இயேசுவே, இம் மருத்துவமனை இவ்விடத்தில் (அல்லது இப்பங்கில்) நிறுவப்படக் காரணமாயிருந்த அனைவரையும், குறிப்பாக (பெயர்கள்), பொருளுதவி நல்கிய உபகாரிகள், உடலுழைப்பைத் தந்த பெருமக்கள், பணியாள்கள், அவர்தம் குடும்பத்தினரையும் ஆசீர்வதித்துப் பாதுகாக்க வேண்டுமென்று ...
6. குணமளிக்கும் ஆண்டவரே, இம் மருத்துவமனையை நாடி வருவோர் அனைவரும் நன்றியுடையவர்களாய் உமது திருப்பெயரைப் போற்றிப் புகழவும், நீர்தான் குணமளிக்கிறீர் என்பதை உணரவும் வேண்டுமென்று ...
குரு: (கரங்களை விரித்து)
தேடிவரும் அனைவருக்கும் வாழ்வளிக்கும் இறைவா, உமது அருளால் கட்டி எழுப்பப்பட்ட இப்புதிய மருத்துவமனையை ✠ ஆசீர்வதித்தருளும். இதில் பணியாற்ற இருக்கும் ஒவ்வொருவரையும் உமது அன்பில் பாதுகாத்தருளும். எம் வேண்டுதல்களுக்குச் செவிசாய்த்து, நோயுற்றோர் மட்டில் நீர் கொண்டிருக்கும் தனிப்பட்ட பரிவன்பும் இரக்கமும் அக்கறையும் இந்த மருத்துவமனை அளிக்கும் பணியின் வாயிலாக மக்களிடையே விளங்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்
(குரு தீர்த்தம் தெளிக்கிறார். பொருத்தமான பாடல் பாடலாம்.)
குரு: நோயுற்றோரைப் பராமரிக்கும் இம்மருத்துவமனை இறைவனது அளவு கடந்த அன்பையும் ஆற்றலையும் பறைசாற்றும் இல்லமாய் அமைவதாக.
எல்: ஆமென்.
குரு: எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவி இங்கு கூடியிருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, அனைத்து நோயிலிருந்தும் காப்பாராக.
எல்: ஆமென்.