புதிய கிணறு, குளம் வெட்டும் இடத்தை மந்திரித்தல்

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே!

எல்: ஆமென்.

குரு: ஆண்டவர் பெயராலே நமக்கு உதவி உண்டு.

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.

அருள்வாக்கு விப 17:1-6

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் ஆண்டவர் குறித்த ஒழுங்கின்படி சீன் பாலை நிலத்திலிருந்து பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் இரபிதிம் வந்தபோது அங்குப் பாளையம் இறங்கினர். மக்கள் குடிக்க அங்குத் தண்ணீர் இல்லை. இதனால் மக்கள் மோசேயிடம் வாதாடி, 'குடிக்க எங்களுக்குத் தண்ணீர் கொடும்' என்று கேட்டனர். மோசே அவர்களை நோக்கி, "நீங்கள் என்னோடு வாதாடுவது ஏன்? ஆண்டவரை ஏன் சோதிக்கிறீர்கள்?" என்றார். அங்குத் தண்ணீரின்றித் தவித்ததால் மக்கள் மோசேயை எதிர்த்து முறுமுறுத்து, "நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?" என்று கேட்டனர். மோசே ஆண்டவரிடம், "இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறிவார்களே!" என்று கதறினார். ஆண்டவர் மோசேயிடம், "இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக்கொண்டு மக்கள் முன் செல்; நைல்நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக்கொண்டு போ. இதோ நான் அங்கே ஒரேபில் உள்ள பாறையில் உனக்குமுன் நிற்பேன். நீ பாறையை அடி; மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்" என்றார். இஸ்ரயேல் தலைவர்கள் காண மோசே அவ்வாறே செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

பதிலுரைப்பாடல் திபா. 63:1, 3-4, 5

பல்லவி: இறைவா, ஆர்வமுடன் உம்மை நாடுகிறேன்.

1. என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது. நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. - பல்லவி

2. உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். - பல்லவி 

3. அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். - பல்லவி

(விருப்பமானால் மன்றாட்டுகள் சொல்லலாம்.)

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

குரு: மன்றாடுவோமாக:

எல்லாம் வல்ல இறைவா, பாலைநிலத்தில் தண்ணீரின்றித் தவித்த மக்களுக்காகக் கற்பாறையிலிருந்து தண்ணீர் பெருகிவரச் செய்தீரே. உமது அன்பின் ஆதரவில் முழு நம்பிக்கை வைத்து நாங்கள் வெட்டும் இக்கிணற்றில் (இக்குளத்தில்) நல்ல தண்ணீர் ஊற்றெடுத்துப் பெருகி எங்களுக்கும், எங்கள் நிலபுலன்களுக்கும், கால்நடைகளுக்கும் நிறைவாகப் பயன்படச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். 

எல்: ஆமென்.

(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)