குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: நம் திருமறையின் மூலைக் கல்லாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பும் அருளும் உங்களோடு இருப்பதாக.
எல்: உம்மோடும் இருப்பதாக.
(குரு இத்திருச்சடங்கின் பொருள்பற்றி முன்னுரையாகச்
சில வார்த்தைகள் கூறுகிறார்.)
அருள்வாக்கு எசாயா 28:16-17
ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே: "இதோ! சீயோனில் நான் ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன்; அது பரிசோதிக்கப்பட்ட கல்; விலையுயர்ந்த மூலைக்கல்; உறுதியான அடித்தளமாய் அமையும் கல்; நம்பிக்கைக் கொண்டோன் பதற்றமடையான்." நீதியை அளவு நூலாகவும், நேர்மையைத் தூக்கு நூலாகவும் அமைப்பேன்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா. 118:1, 16-17, 22-23.
பல்லவி : இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு அடித்தளமில்லை.
1. ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. – பல்லவி
2. ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். – பல்லவி
3. கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று? ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! – பல்லவி
நற்செய்தி மத்தேயு 7:24-27
அக்காலத்தில் இயேசு கூறியதாவது: "நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
(சிறிது நேரம் மௌனம் அல்லது சிறு மறையுரை)
குரு: மன்றாடுவோமாக:
இறைவா! திருத்தூதர்களை அடித்தளமாகவும் இயேசு கிறிஸ்துவை மூலைக்கல்லாகவும் கொண்டு திருச்சபையை நிறுவினீர். இதோ, உம் திருமகனின் பெயரால் இந்த அடிக்கல்லை நாட்டுகிறோம். இதனை ✠ ஆசீர்வதியும். திருச்சபை நாளும் வளர்ந்து இன்று எழில் மிகு மாளிகையாக வளர்ந்திருப்பதுபோல இந்த அடிக்கல்மேல் கட்டப்படும் கட்டடம் உயர்ந்து, உமது மக்களுக்குப் பயன்படுவதாக. இக்கட்டடம் உருவாக உழைக்கவிருக்கும் அனைவர் மேலும் உமது ஆசியை நிறைவாகப் பொழிவீராக. இன்னல்கள், விபத்துக்கள், ஆபத்துக்கள் இவற்றிலிருந்து இவர்களைக் காத்தருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு தீர்த்தம் தெளித்துப் பொறியாளர் அல்லது தலைமைக் கொத்தனார் உதவியுடன் அடிக்கல்லை நாட்டுகிறார். ஆங்காங்குள்ள வழக்கப்படி, சுரூபத்தை அல்லது திருப்பண்டத்தை குடும்பத் தலைவர் அல்லது தலைவி அடித்தளத்தில் வைக்கலாம். தொடர்ந்து 'ஆண்டவர் தம் புகழ்ச்சிகளை என்ற பாடலையோ வேறொரு பொருத்தமான பாடலையோ பாடலாம்.)