குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: என் கூக்குரல் உம்மிடம் வருவதாக.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
புகழ்பாடல் : திபா. 24:1,2,6,8.
பதிலுரை: வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
1. மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். – பல்லவி
2. ஏனெனில், அவரே கடல்கள்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. – பல்லவி
3. அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. – பல்லவி
4. மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர். –பல்லவி
(அல்லது பொருத்தமான பாடல் பாடலாம்.)
குரு: மன்றாடுவோமாக:
அனைத்தையும் படைத்துப் பராமரித்துவரும் பரம தந்தையே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் உம்மைப் போற்றிப் புகழ்கின்றோம். உம் திருப்பெயரால் உம் அடியார்கள் ஆரம்பிக்கும் இப்பணியைத் தயவாய் ஆசீர்வதித்தருளும். உமது பராமரிக்கும் பிரசன்னத்தை நாங்கள் என்றும் கண்டுணர்ந்து வளமுடன் வாழ அருள்புரியும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
நற்செய்தி யோவா. 10:1-2, 9-11
அக்காலத்தில் இயேசு கூறியதாவது: "நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர்.
நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன். நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
(சிந்தனை)
(வாயில் நிலைகள் வரவேற்பு, பாதுகாப்பு போன்ற நினைவுகளை நமக்குத் தருகின்றன.
• திறந்த உள்ளம் பெறுவதற்கு -- தாழ்ச்சி
• தருவதற்கு -- தாராளம்
• நல்ல உள்ளம் -- உறவுக்கு உதவி)
மன்றாட்டுகள்
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. இறைவா, உமது திருப்பெயரால் எழுப்பப்பெறும் இக்கட்டடத்திற்கு நீர் என்றும் துணையாய் இருந்து. தீமையிலிருந்து பாதுகாத்தருள உம்மை மன்றாடுகிறோம். – பல்லவி
2. இறைவா, இன்று உமது அருளால் நாங்கள் ஆரம்பிக்கும் இப்பணி, தொடர்ந்து நடைபெற்று, முடிவு பெறவும், பணியாட்கள் பொறுப்புடனும் ஆபத்து இன்றியும் பணிபுரியவும் உம்மை மன்றாடுகிறோம். – பல்லவி
3. இறைவா, இவ்வுலகில் உருவாகும் இந்த எளிய கட்டடம், இதைக் கட்டுவோர், காண்போர். இதில் வாழ்வோர் அனைவரிடத்திலும் மறு உலக வீட்டு நினைவை உருவாக்க உம்மை மன்றாடுகிறோம். – பல்லவி
4. இறைவா. உமது பிள்ளைகள் எழுப்பும் இவ்வீட்டிற்கு உம் திருமகன் இயேசுவே அனைத்திலும் தலைவராய் இருந்து என்றும் வழிநடத்திட உம்மை மன்றாடுகிறோம். - பல்லவி
(தனிப்பட்ட கருத்துகள்)
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக: எங்களை அன்பு செய்யும் தந்தையே, எங்கள் முன் நிற்கும் இந்த வாயில் நிலைகளை ஆசீர்வதித்தருளும். இந்நிலைகளை என்றும் தீமையினின்று காத்திட உம் தூதர்களுக்குக் கட்டளையிட்டருளும். இந்த வாயில் வழியாக நுழைபவர், வெளிவருபவர் அனைவரும் உம் திருமகனின் அன்பு, அமைதி, நீதி போன்ற பண்புகளுக்குச் சான்று பகரத் தூண்டப் பெறுவார்களாக. இன்று இவர்கள் ஆரம்பிக்கும் நற்பணியைத் தொடர்ந்து நடத்த அருள்புரியும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
(தீர்த்தம் தெளித்தல்)
(அனைவரும் கர்த்தர் கற்பித்த செபம் சொல்லுதல்.)
குரு: எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவி உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்துப் பாதுகாப்பாராக!
எல்: ஆமென்.
(இனிப்பு வழங்குதல் - மரபுப்படி.)