(குறிப்பு: அடக்கம் முடிந்து, இறந்தவரின் வீட்டிற்கு எல்லோரும் வருமுன், வீட்டைச் சுத்தம் செய்து, இறந்த இடத்தில் விளக்கேற்றி வைக்கவும்)
பாடல் : சுமை சுமந்து ….. (அல்லது) யாரிடம் செல்வோம் …….
முதல்வர் : தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
முதல்வர் : அன்புள்ளவர்களே! நம் அன்புச் சகோதரர் (சகோதரி) ………………… (பெயர்) அவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு வீடு திரும்பியிருக்கும் நாம் ஆறுதலுக்கும், நம்பிக்கைக்கும் ஊற்றாகிய நம் ஆண்டவரை நோக்கி மன்றாடுவோம். அவரே நம்முடைய எல்லா வகை வேதனையிலும் நமக்கு ஆறுதலாய் இருக்கிறார்.
(வீடெங்கும் தீர்த்தம் தெளித்தல்)
பதிலுரைப்பாடல் திபா. 117:6-9, 14-17
பல்லவி : எனக்குத் துணைசெய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்.
1. ஆண்டவர் என் பக்கம் இருக்க, நான் ஏன் அஞ்சவேண்டும்? மனிதன் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்? எனக்குத் துணைசெய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார். - பல்லவி
2. மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! உயர்குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! – பல்லவி
3. ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது. ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. – பல்லவி
4. ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன், உயிர் வாழ்வேன். ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். – பல்லவி
முதல்வர் : அன்புத் தந்தையே இறைவா, இரக்கத்தின் ஊற்றே. உத்தரிக்கும் இடத்தில் வேதனைப்படும் ஆன்மாக்கள்மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். அவர்கள் இரக்கம் மிகுந்த உம் திருமகன் இயேசுவின் இதயத்தோடு ஒன்றுசேர்க்கப்பட்டுள்ளனர். உம் திருமகனின் வேதனை மிகுந்தவையும் மீட்பளிப்பவையுமான பாடுகளை நினைத்தும் அவரது ஆன்மாவை நிறைத்த துயரத்தைக் குறித்தும் உம்மை மன்றாடுகின்றோம். இன்று நல்லடக்கம் செய்யப்பட்ட சகோதரர் (சகோதரி) ……………. (பெயர்) ன் ஆன்மா உமது நீதித் தீர்ப்புக்கு வரும்போது உமது இரக்கத்தைக் காட்டியருளும். உமது நன்மைத்தனத்திற்கும் இரக்கக் குணத்திற்கும் எல்லையே இல்லை என நாங்கள் விசுவசிக்கிறோம். உம் அடியார் இவரை ஏற்றருளும். ஆபிரகாம் மடியில் இலாசர் இருந்ததைப்போல, உம் மடியில் இவரும் இன்பத்தை அனுபவிப்பாராக. இவருடைய பிரிவால் துயருறும் பெற்றோர், உடன்பிறந்தோர், உற்றார் உறவினர் நண்பர்களுக்கு, நீரே ஆறுதலின் ஆண்டவராக இருந்தருளும். உமது அருளால் இவ்விழப்பை ஈடுசெய்யும். இவர்களை என்றும் உமது அன்பின் அரவணைப்பில் வைத்துப் பாதுகாத்தருளும். எங்கள் ...
எல்: ஆமென்.
முதல்வர்:
கிருபை தயாபத்து செபம்.
கர்த்தர் கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம்.
தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
பாடல்
கலங்காதே என் நெஞ்சமே
கர்த்தர் இயேசு அன்பு செய்ய
காலமெல்லாம் காத்திருக்க
கலக்கம் ஏன் நெஞ்சமே (2) நெஞ்சமே
1. இருளும் புயலும் உன்னை என்ன செய்திடும்
அருளும் அன்பும் பொழியும் இயேசு
அருகில் இருக்கையில்
வாழ்வில் வீழ்ந்து வருந்தும்போது
தோள் கொடுக்கின்றார்
தாழ்ந்து வாடும்போது தயவு காட்டுவார்-2. இயேசு
2. உலகம் வெறுக்கும்போது
உன்னில் நிலைக்கிறார்
உயிர்ப்பும் உயிரும் ஈந்து நாளும்
உடனிருக்கிறார்
துன்பம் துயரும் தூரப்போகும்
துணிந்து நின்றிடு
தூய தேவன் அருளை என்றும் நம்பிடு - 2 அவரை