விளையாட்டுத் தலங்களை மந்திரித்தல்

(மக்கள் அனைவரும் கூடிநிற்க, அனைவரும் இணைந்து இறைவனைப் போற்றி ஒரு பாடல்... )

குரு: தந்தை, மகன், துாய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

குரு: எல்லா நலன்களின் ஊற்றாகிய இறைவன் உங்கள் அனைவரோடும் இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

(குரு சில வார்த்தைகளைச் சொல்லிக் குழுமி இருப்பவர்களை இந்த மந்திரிப்புக்குத் தயார்படுத்தலாம்.)

அருள்வாக்கு: 1கொரி 6:15a, 19-20.

உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 148:5-6,11-12, 13-14 

பல்லவி: விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன. (எசா.6: 3b)

1. அவை ஆண்டவரின் பெயரைப் போற்றட்டும்; ஏனெனில், அவரது கட்டளையின்படி எல்லாம் படைக்கப்பட்டன; அவரே அவற்றை என்றென்றும் நிலை பெறச் செய்தார்: மாறாத நியமத்தை அவற்றிற்கு ஏற்படுத்தினார். - பல்லவி

2. உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே, இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள். - பல்லவி

3. அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக; அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது; அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது. அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்; அவருடைய அனைத்து அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள். - பல்லவி

(குரு இறைவார்த்தைக்கு விளக்கமளித்து மன்றாட்டுகளைச் சொல்ல மக்களை அழைக்கலாம். அனைவரும் சிறிது நேரம் அமைதியாக செபித்தபின், இயேசு கற்றுக் கொடுத்த செபத்தைச் சேர்ந்து பாடலாம்.)

குரு: மன்றாடுவோமாக:

எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் இடைவிடாது உம்மைப் போற்றுகின்றோம். இவ்வுலகில் அனைத்தையும் நீரே ஒழுங்கு படுத்துகின்றீர். எங்கள் தேவைகளையும் உழைப்பின் சுமைகளையும் உணர்ந்தவராய் எங்களுக்கு நல்ல உடல் நலத்தைத் தந்து, அதன் மூலம் மனமகிழ்வையும் ஓய்வையும் தரத் திருவுளம் கொண்டிருக்கிறீர். இந்த விளையாட்டுத்திடல் (மைதானம்) எங்கள் உடல் வளர்ச்சிக்கும், மனவளர்ச்சிக்கும் துணைபுரிவதாக. இங்கு விளையாட வருகின்ற ஒவ்வொருவரும் தங்கள் அன்பையும் உம் அன்பையும் பரிமாறிக் கொள்ளும் தாராள உள்ளத்தையும், நட்புறவை வளர்த்துக் கொள்வதில் கிறிஸ்துவின் மனநிலையையும் பெற்றுத் திகழ்வார்களாக. இந்த விளையாட்டுத் திடலை உருவாக்கக் காரணமாய் இருந்தவர்களையும், இங்கு விளையாட வருகின்றவர்களையும் நிறைவாய் ✠ ஆசீர்வதிப்பீராக.

எங்கள்..

எல்: ஆமென்.

குரு எல்லாம் வல்ல இறைவன் ……

எல்: ஆமென்.

(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)