புனித அந்தோனியார் பொங்கலன்று ஆடு மாடுகளை மந்திரித்தல்

(அனைவரும் எரியும் மெழுகு திரிகளுடன் பங்கு கொள்வது நல்லது.)

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே. 

அருள்வாக்கு தொநூ.2:19,20.

ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான்' என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

புகழ் பாடல் தானி (இ) 1:34, 36, 38-40, 54, 56-59

பதிலுரை : என்றென்றும் ஆண்டவரைப் போற்றுங்கள்.

1. ஆண்டவரின் அனைத்துச் செயல்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்.

2. ஆண்டவரின் தூதர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். 

3. ஆண்டவரின் ஆற்றல்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்.

4. கதிரவனே, நிலவே ஆண்டவரை வாழ்த்துங்கள்.

5. விண்மீன்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்.

6. கடல்களே, ஆறுகளே ஆண்டவரை வாழ்த்துங்கள்.

7. திமிங்கிலங்களே, நீர்வாழ் உயிரினங்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்.

8. வானத்துப் பறவைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்.

9. காட்டு விலங்குகளே, கால்நடைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்.

10. மண்ணுலக மாந்தர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். 

மன்றாட்டுகள்

குரு: உலகெங்கும் வாழும் மக்கள் உண்மையைக் கடைப்பிடித்து, அமைதியாக வாழ வேண்டுமென்று,

எல்: புனித அந்தோனியார் வழியாக, ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

1. எங்கள் இந்திய நாட்டை ஆள்வோர் அனைவரும் நீதியைக் கடைப்பிடித்து, மக்களுக்கு நேர்மையான தொண்டாற்ற வேண்டுமென்று,

2. எங்கள் பங்கு மக்கள் அனைவரும் பிறரன்புடன் வாழ வரமருள வேண்டுமென்று,

3. எங்களுக்குப் போதுமான மழை பொழியச் செய்து, நல்ல விளைச்சல் அளித்தருள வேண்டுமென்று,

4. எங்கள் நல்வாழ்வுக்கு உதவ நீர் கொடுத்திருக்கும் இந்த ஆடு மாடுகள் (கோழிகள்) நோயற்று எங்களுக்கு நன்கு பயன்பட வேண்டுமென்று,

5. எங்கள் அனைவருக்கும் இம்மையில் உடல் நலமும், மறுமையில் பேரின்ப வாழ்வும் அளித்தருள வேண்டுமென்று,

ஆசியுரை

குரு: உயிரினங்கள் அனைத்தையும் படைத்த இறைவா, நீர் என்றும் போற்றப்படுவீராக. அனைத்து விலங்குகளும் உம்மாலேயே வாழ்கின்றன. அவை சிறந்த முறையில் உம் அன்பையும் புகழையும் பறைசாற்றுகின்றன. உமது பெருங்கொடையான இவற்றை மக்கள் அன்புடனும் பொறுமையுடனும் விவேகத்துடனும், உமது திருவுளத்திற்கேற்பப் பயன்படுத்துவதால், அனைத்தையும் படைத்துக் காப்பவரான உம்மை மேன்மேலும் அறியவும் புகழவும் அருள்வீராக. 

எல்: ஆமென்.

குரு: ஆண்டவரே, இன்று நாங்கள் கொண்டாடும் புனித வனத்து அந்தோனியாரின் மன்றாட்டால் இவர்கள் மேல் இரக்கம் வைத்து, இவர்களின் குடும்பங்களையும், நிலங்களையும் வேலைகளையும், ஆடு மாடுகளையும் ஆசீர்வதித்தருளும். உமது வல்லமையால் அனைத்து நோய்களிலிருந்தும் இவற்றைக் காப்பாற்றியருளும்.

எல் ஆமென்.

குரு: எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவி உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து என்றும் காப்பாராக. 

எல் ஆமென்.

(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)