பேறுகாலப் பெண்களுக்கு ஆசியுரை

(கணவனும் மனைவியும் எரியும் திரியுடன் குருவின் முன் நிற்கின்றனர்.)

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.

நற்செய்தி மாற்.  9:33-37

இயேசுவும் சீடர்களும் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்தபொழுது இயேசு, "வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, "இத்தகைய சிறு பிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

கன்னிமரியா பாடல் லூக். 1:46-55

குரு: நம் தாயாம் கன்னிமரியாவின் பாடலைச் சொல்லி இறைவனைப் புகழ்வோம்.

1. ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.

2. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.

3. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.

4. இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறு பெற்றவர் என்பர். 

5. ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். 

6. அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலை முறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். 

7. அவர்தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.

8. வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

9. பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

10. மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.

செபம்

திருமதி …………… க்காகவும், இவரின் குழந்தைக்காகவும் மன்றாடுவோமாக.

(சிறிது நேரம் மௌனம்)

குரு: எல்லாவற்றையும் படைத்துப் பாதுகாத்து வரும் விண்ணகத் தந்தையே! நம்பிக்கையுடன் உம்மை அணுகி வந்திருக்கும் திருமதி …………….. ளின் தியாகத்தையும் காணிக்கையையும் ஏற்று, இவரது இதய ஆவலை நிறைவேற்றியருளும். இவருக்கு நீர் அளித்திருக்கும் குழந்தையை எத்தீங்கும் நெருங்காதிருப்பதாக. அனைத்துத் தீமைகளிலிருந்தும் இவரைக் காப்பாற்றி, சுகமான பேறுகாலத்தைத் தந்தருளும். உள்ளத்திலும் உடலிலும் எக்குறையுமின்றிக் குழந்தை நலமுடன் பிறக்க அருள் தாரும். மேலும் இக்குழந்தை திருமுழுக்கு வழியாய் அருள் வாழ்வு பெற்று, முடிவில்லா வாழ்வு அடைவதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)

குரு: எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவி உங்கள் மீதும், குழந்தையின் மீதும் கருணை கூர்ந்து ஆசீர்வதித்து என்றும் காப்பாராக.

எல்: ஆமென்.