திருமண வெள்ளி (பொன்) விழாவில் தம்பதியருக்கு ஆசியுரை

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

குரு: திருமணத்தை ஒரு திருவருள்சாதனமாக உயர்த்திய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பும், அருளும், சமாதானமும் உங்களோடு இருப்பதாக.

முன்னுரை

திருமண வெள்ளி (பொன்) விழாவைக் கொண்டாடும் தம்பதியரே! நீங்கள் திருமணத்திலே இணைக்கப்பட்டு இருபத்தைந்து (ஐம்பது) ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. கடந்த ஆண்டுகளிலே இறைவன் உங்களுக்குச் செய்த எண்ணற்ற நன்மைகளுக்கு நன்றிகூற அவர்முன் நிற்கிறீர்கள். அன்புத் தந்தை உங்கள் இல்லற வாழ்க்கையை ஆசீர்வதித்து வளமாக்கியுள்ளார். நன்மக்களை உங்களுக்கு அருளியுள்ளார். நீங்களும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, மன ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்ததற்காகத் திருச்சபையின் பெயராலும் திருக்கூட்டத்தின் பெயராலும் உங்களை வாழ்த்துகிறேன். இறைவன் உங்கள்மேல் அன்புகூர்ந்து உங்களை இன்னும் நிறைவாய் ஆசீர்வதிக்கத் திருவுளம் கொண்டுள்ளார். இப்பெருநாளில் நல்ல இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டிய கடமையை உணர்வோம்.

அருள்வாக்கு எபே.5:19-20

உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

பதிலுரைப்பாடல் திபா. 116

பல்லவி: ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?

1. மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.  - பல்லவி

2. இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.     - பல்லவி 

3. ஆண்டவரே, நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர். நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்.   - பல்லவி

4. உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.  - பல்லவி

(குரு விரும்பினால் மறையுரை ஆற்றலாம்.)

குரு: மன்றாடுவோமாக:

எங்கள் பரம தந்தையே, முறிவுபடாத மண உறவினால் திரு ……….. திருமதி …....... ஆகிய இவர்களை இணைத்து, கடந்த இருபத்தைந்து (ஐம்பது) ஆண்டுகளாக இன்பத்திலும் துன்பத்திலும் மன ஒற்றுமையுடன் வாழ்ந்து வளரச் செய்தீர். உத்தம பிள்ளைகளைத் தந்துள்ளீர். தங்கள் திருமண வாழ்வின் இருபத்தைந்தாவது (ஐம்பதாவது) ஆண்டின் நிறைவு நாளாம் இந்நாளில் தங்கள் திருமண ஒப்பந்தத்தைப் புதுப்பித்து உறுதிப்படுத்த உம் திருமுன் வந்துள்ள இவர்களைத் தயவாய்க் கண்ணோக்கியருளும். இவர்களது அன்பை ஆசீர்வதித்து, அது இன்னும் சிறப்பாகச் செழித்து வளரவும், கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையே உள்ள உறவை இன்னும் அதிகமாக எடுத்துக்காட்டவும் அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

ஆசியுரை

குரு: நீங்கள் உள்ளத் தூய்மையும் உடல் நலமும் உங்கள் மக்களால் மகிழ்ச்சியும் உற்றார் உறவினரால் ஆதரவும் பெற்று, இல்லார்க்கு ஈகை காட்டி எல்லார்க்கும் நல்லவர்களாய், அமைதியும் இன்பமும், அன்பும் சமாதானமும் ததும்ப நீடூழி வாழுமாறு எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவி தம் ஆசியால் உங்களை நிரப்புவாராக.

எல்: ஆமென்.

(தீர்த்தம் தெளித்தல்.)