மருந்தை மந்திரித்தல்

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே. 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

அருள்வாக்கு 2 அர.20:1-7

அந்நாள்களில் எசேக்கியா நோயுற்றுச் சாகும் தருவாயில் இருந்தார். ஆமோசின் மகன் இறைவாக்கினர் எசாயா அவரிடம் வந்து, "ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "நீர் உமது வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும்; ஏனெனில் நீர் சாவினின்று பிழைக்க மாட்டீர்” என்றார். எசேக்கியா சுவர்ப் பக்கமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஆண்டவரை நோக்கி, “ஆண்டவரே! நான் எப்படி உம் திருமுன் முற்றிலும் நம்பிக்கைக்குரியவனாய் நடந்து கொண்டேன் என்பதையும், உமது பார்வையில் நேர்மையானதையே செய்தேன் என்பதையும் நினைத்தருளும்" என்று வேண்டுதல் செய்து கதறி அழுதார். எசாயா அரண்மனை முற்றத்தின் நடுப்பகுதியைக் கடப்பதற்குள், ஆண்டவரது வார்த்தை அவருக்கு வெளியாயிற்று: "நீ திரும்பிப்போய் என் மக்களின் தலைவனான எசேக்கியாவை நோக்கி, 'உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் மன்றாட்டைக் கேட்டேன். உன் கண்ணீரையும் கண்டேன். இதோ உன்னைக் குணப்படுத்துவேன். இன்றைக்கு மூன்றாம் நாள் நீ ஆண்டவராகிய எனது இல்லத்துக்குச் செல்வாய். உனது ஆயுளுக்கு இன்னும் பதினைந்து ஆண்டுகள் கூட்டுவேன். மேலும் உன்னையும் இந்நகரையும் அசீரிய மன்னனின் கையினின்று விடுவிப்பேன். என்பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் இந்நகரைப் பாதுகாப்பேன்' என்று சொல்.'' அப்பொழுது எசாயா, "ஓர் அத்திப் பழ அடை கொண்டு வாருங்கள்" என்றார். அவர்களும் அவ்வாறு கொண்டுவந்து அவர் குணமடையும்படி அதைக் கட்டியின்மேல் வைத்தனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

குரு: மன்றாடுவோமாக:

இறைவா, மனிதனைப் புதுமையாகப் படைத்து, இன்னும் மேலாக அவனைப் புதுப்பித்தீரே. நோயுற்றுத் துன்புறும் வேளையில் மக்கள் நோயினின்று விடுதலை பெறப் பல்வேறு மருந்துகளை அளிக்கத் திருவுளங்கொண்டீரே. எமது தாழ்மையான மன்றாட்டுக்குச் செவிசாய்த்து இந்த மருந்தை ✠ ஆசீர்வதித்தருளும். தேவைக்கேற்ப இதனை உட்கொள்வோர் உடல் நலமும் உள்ள பலமும் ஆன்மப் பாதுகாப்பும் பெறுவார்களாக. எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

(குரு தீர்த்தம்' தெளிக்கிறார்.)