பொருள்களை மந்திரித்தல் -2 (விரிவானது)

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே. 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருட்பாராக.

அருள்வாக்கு எபி 1:1-3

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா. 145:2-3, 4-5, 6-7, 8-9.

பல்லவி:  என் கடவுளே, உமது பெயரைப் போற்றுவேன்.

1. நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. - பல்லவி 

2. ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும். உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். - பல்லவி

3. அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப்பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன். அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைத்துக் கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். - பல்லவி

4. ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நம்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி

குரு: இந்த …………… ஐ (பொருளை) நம் நன்மைக்காகக் கொடுத்த நம் விண்ணகத் தந்தையை நோக்கி மன்றாடுவோமாக.

(சிறிது நேரம் மெளனம்)

குரு: அனைத்தையும் உமது மகிமைக்காகவே படைத்த அனைத்துலக அரசே! எம் இறைவா! நீர் என்றும் போற்றப்படுவீராக. நாங்கள் உமது புகழுக்காகவும் பிறர் நலனுக்காகவும் உமது ஊழியத்தில் பயன்படுத்த இந்த ………… ஐ ஆசீர்வதிக்க எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

(பொருள்களின்மேல் குரு தீர்த்தம் தெளிப்பார்.)