குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
அருள்வாக்கு. இச. 8:11-14,17-18
இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றினின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துபோகாதபடி கவனமாய் இருங்கள். நீங்கள் உண்டு நிறைவு கொள்ளும்போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவற்றில் குடியிருக்கும்போதும், உங்கள் ஆடுமாடுகள் பலுகும்போதும், வெள்ளியும் பொன்னும் உங்களுக்கு மிகுதியாகும்போதும், உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும் போதும், நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிடவேண்டாம்.
எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித்தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள். உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டுச் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 65:8-13
பல்லவி: கடவுளே உம்மைப் புகழ்ந்து பாடுவது ஏற்புடையது.
1. மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது; நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். - பல்லவி
2. அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். - பல்லவி
3. ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. பாலை நிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. - பல்லவி
4. புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை! - பல்லவி
நற்செய்தி மாற் 4:28-29
இயேசு, கூறியது: "இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது" என்று கூறினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
விசுவாசிகளின் மன்றாட்டு
(மன்றாட்டுக்களை தனிப்பட்ட விதத்தில் சொல்லலாம்; பின் அனைவரும் அமைதியாகச் செபிக்கின்றனர்.)
குரு: மன்றாடுவோமாக:
எல்லாம் வல்ல இறைவா, மனிதன் உழைக்க வேண்டும் என்று நீர் கட்டளையிட்டிருக்கின்றீர். உழைக்காதவன் உண்ணலாகாது என்று பவுல் அடியார் வழியாகவும் சொல்லியிருக்கின்றீர். நாங்கள் உழைக்கிறோம்; உழைப்பின் பயனை நாங்கள் உம்மிடமிருந்தே பெற்றுக் கொள்கிறோம். எங்கள் வீடு, நிலம், ஆடு மாடுகள், பொன், வெள்ளி அனைத்தும் உம் அருள் பெருக்கின் நிறைவிலிருந்து நாங்கள் பெற்றுக் கொண்டவையே! எங்கள் உழைப்புக்கு உதவியாய் இருக்கின்ற இந்தக் கருவிகளை (புது ஏர் / மாட்டு வண்டி .... ) ✠ ஆசீர்வதியும். எங்களுக்கு உடல் வலிமையையும், ஆற்றலையும் நிறைவாகத் தந்தருளுமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
குரு: எல்லாம் வல்ல இறைவன் …….
எல்: ஆமென்
(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)