மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் - 13 : மகா பரிசுத்த குருத்துவம்..
நம் புனிதர் சேர்ந்த குருத்துவ மடத்தின் உயரிய குறிக்கோள் :
“ திருச்சபையின் தேவைகளுள் முதன்மையானது, புனிதமும், ஆன்மாக்கள் மீட்படைய வேண்டும் என்ற ஆர்வமும் மிகுந்த குருக்கள் “ என்பதை உணர்ந்த குரு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒலியெர் (Olier).
“ கிறிஸ்துவே என் வாழ்வு “ “ வாழ்வது நானல்ல, என்னுள் கிறிஸ்துவே வாழ்கின்றார் ” என்ற புனித சின்னப்பர் கூறிய இரு வசனங்களை மேல்வரிச்சட்டமாகக் கொண்டு தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு பல ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்களே குருப்பட்டம் பெற தகுந்தவர்கள் என உய்த்துணர்ந்த இந்த குருவும், வேறு சிலரும் சேர்ந்து ஒரு குருமடத்தை நிறுவினர்.
இந்த மடத்தில் பயிற்சி அளிப்பவர்களும் சரி..பயிற்சி பெறுபவர்களும் சரி ‘ பழைய மனிதன் ‘ எனப்படும் பழைய பாவ நாட்டங்களை அடியோடு ஒழித்துவிட்டு புதிய மனிதன் எனப்படும் கிறிஸ்துவை அதாவது கிறிஸ்துவின் தெய்வீக மனப்பான்மையை தமதாக்கிக்கொள்ள முழுமூச்சுடன் செயல்பட வேண்டும் என்று ஓயாமல் வலியுறுத்தப்பட்டது (இது குருக்களுக்கு மட்டுமல்ல பொது நிலையினருக்கும் பொருந்தும் ). இதற்காக கிறிஸ்து தன் வாழ்க்கையில் இறைவனே சுட்டிக்காட்டிய அரிய சாசனத்தைக் கண்முன் வைத்தார்.. அதாவது இறைவனது திட்டப்படி நம் அருள் வாழ்விற்கு மிக முக்கியமானதொன்று மீட்பருடன் மிக நெருங்கியவிதமாக ஒத்துழைத்த அவரது “ அன்னையின் பரிந்து பேசுதல் “ என வலியுறுத்தினார்.
குருக்களின் மரண சாசனம் :
“ மரியாயிடம் குடிகொண்டுள்ள இயேசுவின் வாழ்வில் காணப்பட்ட பக்தி ஆர்வமும், இறைவனைச் சார்ந்த காரியங்களில் ஆர்வமிக்க ஈடுபாடும் கொண்டதொரு வாழ்க்கையாக ஒரு குருவின் வாழ்க்கை அமைய வேண்டும்”.
“ இயேசுவின் விருப்பமே அவர் தம் விருப்பமாகவும், மரியாயிடம் வாசம் செய்யும் இயேசுவின் தெய்வீக மனப்பான்மையே குருவின் மனப்பான்மையாகவும் இருத்தல் வேண்டும் “
இத்துணை உயர்ந்த குறிக்கோளுடன் நிறுவப்பட்டிருந்த குருமடத்தில்தான் நம் இளைஞன் லூயி சேர்க்கப்பட்டான்.
பின் குருவானவரான புனித லூயியின் ஒரே நோக்கம் :
“ ஆன்மாக்கள் மீட்படைய நான் என்ன பணி ஆற்ற வேண்டும்? “ என்பது ஒன்றே..
குரு புனித லூயி தன் ஆன்மீக குருவுக்கு எழுதிய கடித்தத்தின் ஒரு பகுதி..
“ தன்னந்தனியாக மறைந்த வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் என்றே என் இதயம் துடிக்கின்றது. அதே சமையத்தில் நம் ஆண்டவரையும், அவரது புனித அன்னையையும் மக்கள் நன்கு அறிந்து நேசிக்க அவர்களை நான் அழைக்க வேண்டும் என்ற ஆர்வமும் என்னை ஆட்கொண்டுள்ளது. எளிமையான வாழ்க்கை மேற்கொண்டு நாட்டுப்புற மக்களுக்கு ஞான உபதேசம் கற்பித்து பாவத்தில் உழல்பவர்களை கன்னி மரியாயை நேசிக்க செய்ய வேண்டும் என்றும் துடிக்கின்றேன்.
அன்மையில் இறந்து போன புனித குரு ஒருவர் இப்படித்தான் பணியாற்றினார். ஒவ்வொரு பங்குக்கும் சென்று ஏழை மக்களுக்கு இப்படித்தான் பணியாற்றினார். தன் சாதாரன தேவைகளைப் பற்றி கவலைப்படாமல் இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை வைத்து இங்கனம் வாழ்ந்தார்.
இத்தகைய பணிபுரிவதற்கு தகுதி எனக்கு நிறைய உண்டு என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இன்றைய திருச்சபையின் நிலையைப் பார்க்கும் போது கண்ணீருடன் நான் வேண்டுவது என்னவென்றால்,
“ இந்தப் பணிகளை ஆர்வத்தோடு செய்வதற்கு ஒரு சில குருக்களாவது கிடைக்க மாட்டார்களா என்பதே !
நன்றி : ஜெபமாலை ஜெப வெற்றி வீரர் “ புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் “ வாழ்க்கை வரலாறு. ஆசிரியர் முன்னாள் சென்னை மயிலை பேராயர் அருட்தந்தை இரா. அருளப்பா.
சிந்தனை : நம் மாதாப் புனிதர் லூயி மரிய மோன்போர்ட் ஆண்டவரிடம் பிராத்தனை செய்த ஆண்டு 17- ம் நூற்றாண்டு என்பதை மனதில் கொள்க… அப்போதே அவ்வளவு தேவையென்றால் இந்த 21- நூற்றாண்டில் பாவத்தில் உழலும் ஆன்மாக்களை மீட்கவும், நம் ஆண்டவரையும், நம் புனித அன்னையையும் நேசிக்க செய்யும் பணிகளுக்கு எத்தனை ஆயிரம் குருக்கள் தேவை… அதற்கு நம் ஜெபங்கள் எந்த அளவுக்கு அதிகம் தேவை…
ஜெபம் : ஆண்டவரே ! எங்கள் நல் ஆயனே !
அன்று கடலில் மீன்பிடித்துக் கொண்டவர்களைப் பார்த்து, “ உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக்குவேன் “ என்று கூறி சாதாரண மீனவர்களை உம் அப்போஸ்தலர்களாக்கவும், குருக்களாக்கவும் ஆக்க திருவுளமானீரே…
அதே போல் இப்போதும் ‘ ஆன்மாக்களை பிடிக்கும் “ நோக்கத்தோடு மட்டுமே வாழும் பல பரிசுத்த குருக்களை எங்களுக்குத் தாரும் ஆண்டவரே !... ஆமென்..
ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை….
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !