உத்தரியம் - பாகம் 05 - புனிதர்களின் உத்தரிய பக்தி

திருச்சபையின் பல புனிதர்கள் அன்னையின் மேல் அளவற்ற அன்பு கொண்டு, அவர்களது உத்தரியத்தினை பக்தியுடன் எப்பொழுதும் அணிந்திருந்தனர்.

புனித அல்போன்ஸ் லிகோரியார், “உத்தரியத்தின் மகத்துவத்தை உணராமல், நவீன சீர்திருத்தவாதிகள், பிரிவினைவாதிகள், தப்பறைகளில் உழல்வோர் அதனை அணிவதை கேலிக்கூத்தாக எண்ணுகின்றனர். இதனை மிகவும் அற்பமான முட்டாள்தனமான செயலாக குறை கூறுகின்றனர்.” என அன்னையின் பாதுகாப்பினை நாடும் அனைவருக்கும் அறிவுரை கூறுகின்றார். 

பாப்பரசர் புனித இரண்டாம் அருள் சின்னப்பர், துப்பாக்கியால் சுடப்பட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட பொழுது, மருத்துவர்களிடம், “நான் அணிந்திருக்கும் எதனை வேண்டுமானாலும் நீங்கள் அகற்றலாம். ஆனால் எனது உத்தரியத்தினை மட்டும் எக்காரணம் கொண்டும் அகற்றக்கூடாது” என்று கோரிக்கை வைத்தார்.

பலர் இந்த பக்தி முயற்சியினை குறை கூறினாலும், ஏளனமாக எண்ணினாலும், பல பாப்பரசர்கள் இந்த பக்தி முயற்சியினை அங்கீகரித்து, இதனை விடாமுயற்சியோடு பின்பற்ற வலியுறுத்துகின்றனர்.

பரிசுத்த பாப்பரசர் பத்தாம் கிரகோரியார் உத்தரியத்தினை அணித்திருந்தார். உத்தரிய அற்புதம் நிகழ்ந்த 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது உத்தரியத்துடன் அடக்கம் செய்யப்பட்டார். அவர் இறந்து 600 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது கல்லறை திறக்கப்பட்ட பொழுது, அனைவரும் அதிசயிக்கத்தக்க விதமாக அவரது உத்தரியம் அழியாமல் அப்படியே இருந்தது.

கத்தோலிக்க திருச்சபையின் இருபெரும் சபைகளை நிறுவிய புனிதர்களான புனித அல்போன்ஸ் லிகோரியார் (உலக இரட்சகர் சபை) மற்றும் புனித தொன் போஸ்கோ (சலேசியன் சபை) இருவரும் பரிசுத்த கார்மல் மலை அன்னையின் மேல் பக்தி கொண்டு அவர்களது பழுப்பு நிற இரக்கத்தின் ஆடையை எப்பொழுதும் அணிந்திருந்தனர். இருவரும் இறந்த பின்னர் குருக்களுக்கான ஆடைகளுடன் அவர்களது உத்தரியத்தினையும் வைத்து அடக்கம் செய்யப்பட்டனர். 

பல ஆண்டுகள் கடந்த பின்னர், அவர்களது கல்லறைகள் திறக்கப்பட்ட பொழுது அவர்களது உடலும், குருக்களுக்கான ஆடைகளும் அழிந்து போயிருந்தன. ஆனால், இருவரும் அணிந்திருந்த பழுப்பு நிற உத்தரியம் மட்டும் அழியாமல் அப்படியே இருந்தது. புனித அல்போன்ஸ் லிகோரியார் அணிந்திருந்த அவரது உத்தரியமானது இன்றும் ரோமில் உள்ள அவரது சபையின் தலைமை மடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.