உத்தரியம் - பாகம் 04 - உத்தரியத்திற்கான வத்திக்கானின் அங்கீகாரம்!

உத்தரியத்தினை நாம் அணியும் பொழுது நாம் கார்மல் மாதா சபையின் மூன்றாம் நிலையினராக இணைகிறோம். நாம் பக்தியுடன் உத்தரியத்தினை அணிந்திருப்பதன் வாயிலாக, நாம் தேவதாயாரிடம் நமது ஆன்ம ஈடேற்றத்திற்கான தடைகளை அகற்ற, சாத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து வெற்றி பெற உதவி வேண்டி ஒவ்வொரு நொடியும் மறைமுகமாக செபிக்கிறோம். கார்மல் மாதா சபையின் அனைத்து செபங்களிலும், புண்ணியங்களிலும் நாம் பங்கு பெறுகின்றோம்.

பாப்பரசர் பன்னிரண்டாம் பத்திநாதர் உத்தரியத்தின் மகிமைகளைக் குறித்து அடிக்கடி எடுத்துரைத்துள்ளார். நமதன்னை புனித சைமன் ஸ்டாக்கிற்கு உத்தரியத்தினை வழங்கிய 700 ஆம் ஆண்டு நிறைவு பெருநாளில், 

”உத்தரியம் அணிந்திருப்பது, நாம் நம்மையே அன்னை மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணிப்பதற்கான அடையாளம்” என்று குறிப்பிடுகிறார்.

மேலும் உத்தரியமானது நமதாண்டவரின் இனிமையான நுகத்தடிக்கு அடையாளமாக இருப்பதாகவும் அதனை தாங்குவதற்கு அன்னை மரியாள் நமக்கு உதவுவதாகவும் குறிப்பிடுகின்றார். கடைசியாக, உத்தரியமானது நம்மை அன்னை மரியாளின் தேர்ந்து கொள்ளப்பட்ட குழந்தைகளாக அடையாளம் காட்டுவதாகவும், நமக்கு இரக்கத்தின் ஆடையாக இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். கூடியிருந்த அனைவரிடமும் அன்னையின் மாசற்ற திரு இருதயத்திற்கு தங்களை அர்ப்பணிப்பதன் அடையாளமாக உத்தரியம் அணிந்து கொள்ள வலியுறுத்தினார். நமதன்னையும் பாத்திமாவில் அளித்த கடைசி காட்சியில் உத்தரிய அன்னையாக தோன்றினார்கள். 

 ஜெர்மானியர்கள் உத்தரியத்தினை “இரக்கத்தின் ஆடை (Garment of Grace)” என அழைக்கின்றனர். ஏனெனில், நமதன்னை எண்ணற்ற உத்தரிய அற்புதங்களின் வாயிலாக பல்லாயிரக்கணக்கான மக்களை நரக நெருப்பிலிருந்து மீட்டேடுத்துள்ளர்கள் என பல புனிதர்களின் குறிப்புகள் வாயிலாக நாம் அறிந்து கொள்கின்றோம். உத்தரியத்தினை அணிந்துள்ள ஒவ்வொரு ஆன்மாவிற்கும் மரண வேளையில் உதவியாகவும், பாவங்களுக்காக மனம் வருந்தி பாவ  மன்னிப்பு பெறவும் உதவுகிறார்கள்.

 புனித கிளாட் தே கொலம்பியர், “ நமதாண்டவரின் தாயாரை மகிமைப்படுத்து நாம் மேற்கொள்ளும் பல்வேறு கீழ்படிதலுள்ள பக்தி முயற்சிகளில் உத்தரியத்தினைப் போன்றது வேறு எதுவுமில்லை. வேறு எந்த பக்தி முயற்சிகளும் இதனைப் போன்று பல்வேறு அற்புதங்களால் உறுதி செய்யப்படவில்லை” என குறிப்பிடுகின்றார்.