அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 13

புனித சூசையப்பர் எகிப்து நாட்டிற்கு போனதை தியானிப்போம்

தியானம்

 சிமியோன் தீர்க்கதரிசி இயேசுவை குறித்து முன்னறிவித்ததற்கு பின் கொடுங்கோலனான ஏரோது அரசன் இயேசுவைக் கொல்ல திட்டமிட்டு மூன்று அரசர்களிடமும் பாலனை வணங்கியபின் தன்னை வந்து சந்திக்கும்படிக் கேட்டுக்கொண்டான் . அவர்களுக்கு கிடைத்த இறைவனின் அறிவுறுத்தலால் அவர்கள் ஜெருசலேமுக்குத் திரும்பிச் செல்லாமல் வேறு வழியில் தங்கள் ஊர்போய் சேர்ந்தார்கள். மூன்று அரசர்களும் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்பதை அறிந்த ஏரோது பெத்லேகம் மற்றும் அதைச் சுற்றி உள்ள ஊர்களில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட ஆண்குழந்தைகளை எல்லாம் வெட்டிக் கொல்ல ஆணையிட்டான். ஆணை அமுலுக்கு வருமுன்னே வானதுதர் தூய சூசையப்பரின் கனவில் தோன்றி "தாயையும் குழந்தையையும் எகிப்து நாட்டிற்கு அழைத்து செல்லும், மீண்டும் நான் அறிவிக்கும்வரை அங்கேயே தங்கியிருங்கள். ஏரோது குழந்தையைக் கொல்லத் தேடுகிறான்" என்றார். தூர நாட்டில் போய் எப்படி பிழைப்போம்? யார் ஆதரவு தருவார்? பயணம் எப்படியிருக்கும்? எத்தனை வருடம் அங்கு தங்க வேண்டி யிருக்கும்? இதை ஒன்றும் வானதுதர் தெரிவிக்கவில்லை. தூய சூசையப்பர் தனது வறுமை நிலையையோ, பச்சிளம் குழந்தையையோ பற்றிக் கேட்காமல் வானதுதருக்கு கீழ்ப்படிந்தார்.

இரவே எழுந்து மரியன்னையிடம் விவரம் கூறி எகிப்து நாட்டிற்கு மூவரும் பயணமானார்கள். கொடிய காட்டு வழியே சுமார் நாற்பத்தைந்து மைல் தூரம் எகிப்துக்குச் செல்ல வேண்டியதிருந்தது. கொடிய விலங்குகள், திருடர்கள் நிறைந்த பகுதி மட்டுமல்ல தங்குவதற்கு சத்திரங்களோ, தேவையானவற்றை வாங்குவதற்கு கடைகளோ, வேலைக்காரர்களோ இல்லை. ஆனால் பதினைந்து வயதான மரியன்னையையும் தோளில் பாலன் இயேசுவையும் தூக்கிக்கொண்டு மிக துயரத்தோடு பயணமாயினர். கொலைகாரனான ஏரோதிடமிருந்து குழந்தையைக் காப்பாற்ற நீரின்றி, உணவின்றி உடல் சோர்வுற கால்கள் நடுநடுங்க சூசையப்பரும் மாதாவும் நடந்தனர். ஆனால் உலகை மீட்பவர் நம்மோடு இருக்கிறார் என்கிற சந்தோஷத்தால் எகிப்து நாட்டில் உள்ள எலியோப்பொலிஸ் என்ற நகரினை அடைந்து ஏழு ஆண்டுகள் அங்கே தங்கி இருந்தனர்.

இறைவன் ஏன் இவர்களை இங்ங்ணம் துன்பப்படுத்தி ஏரோதிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கேள்வி நம்முள் எழுவது இயல்பே. இறைவனின் வழிகள் மனிதனின் வழிகளிலிருந்து மாறுபட்டவையே. ஏரோதிடமிருந்து குழந்தையை மறைக்கவோ அல்லது ஏரோதை அழிக்கவோ செய்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்ய வில்லை. இவ்வுலகில் நமக்கு நடக்கும் செயல்களெல்லாம் இறைவனால் நடைபெறுகிறது என்பதை நாம் உணர்ந்து இறைவனின் கட்டளை களுக்கு கீழ்ப்படிந்து, நம்பிக்கையோடு எது நடந்தாலும் அது நன்மைக்கே இருக்கும் என உணர வேண்டும்.

இயேசு மரி சூசை மகிழ்ச்சியோடும் பொறுமையோடும், கீழ்ப்படிதலோடும் தங்கள் வழிப்பயணத்தை தொடர்ந்து இயேசுவை ஏரோதிடமிருந்து காப்பாற்றினார்கள். நாம் உலகில் எந்த மூலைக்கு ஓடினாலும் நமது சிலுவை, துன்பங்கள் நம்மை தொடர்ந்து வரும். ஒரு துன்பத்திலிருந்து விடுபட்டால் இன்னொரு துன்பம் தொடர்ந்து வரும். எனவே, சிலுவை சுமந்த இயேசுவை நாம் மகிழ்ச்சியோடு பின்பற்றவேண்டும். அதுபோல் நம்மில் இருக்கிற இயேசுவை புனித சூசையப்பர் வாழ் நாளெல்லாம் போற்றி புகழ்ந்ததுபோல் நாமும் போற்றி புகழ்வோம்.

நம்மில் ஆன்மாவில் இறைவன் வாழ்கிறார். நாம் சாவான பாவத்தைக் கட்டிக்கொள்ளும்போது இறைவனை விரட்டிவிட்டு சாத்தானை வாழ்வாக்குகிறோம். அதனால் நாம் பாவத்தை விட்டு விலக வேண்டும். இயேசுநாதர் தன் சீடர்களை நோக்கி உன் கையோ, காலோ உனக்கு பாவத்தை செய்ய தூண்டுவதாக இருந்தால் அவற்றினை வெட்டி எறிந்துவிடு. அனைத்து உறுப்புகளுடன் நரகத்தில் வேதனைப்படுவதைவிட உடல் ஊனமுற்றவனாய் மோட்சத்தில் நுழைவது நல்லது என்றார். இரு கண்களோடு நரகத்தில் இருப்பதைவிட ஒரு கண் உடையவனாய் மோட்ச வீட்டில் இருப்பது நமக்கு நல்லது என்றார். அதனால் நாம் பாவச்செயல்களையும், பாவஞ்செய்யத்தூண்டும் மனிதர்களையும் விலக்கி மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

புதுமை

இஸ்பானிய நாட்டில் பார்செலோனா என்ற நகருக்கருகில் மொன்சேராத்துஸ் என்ற மலையின்மேல் தூய ஆசீர்வாதப்பர் சபையைச் சார்ந்த பிரபலமான துறவற இல்லமும், மரியன்னை ஆலயமும் இருந்தது. துறவற இல்லத்தில் இயேசு மரி சூசை என்ற திருக்குடும் பக்தர் ஒருவர் இருந்தார். புனித சூசையப்பர் எகிப்து நாட்டில் ஏரோதரசருக்கு பயந்து பலவிதமான துன்பமடைந்ததால், அவரை வழிப்போக்கர்களுக்கு வழிகாட்டியாகவும், அடைக்கலமாகவும் அத்துறவி வணங்கினார்.

ஒருநாள் அத்துறவி அலுவல் காரணமாக நீண்ட தொலைவு சென்று விரும்பியபோது வழி தவறி பாறை, செடி, கொடி, குன்று, கால்வாய் எனச சுற்றித் திரிந்தார். அதனால் அவருக்கு பெரும் பயம் உண்டாயிற்று. அந்த கொடிய காட்டில் மக்கள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. இவர் தூய சூசையப்பரை கெஞ்சி மன்றாடினார். தொலைவில் முதியவர் ஒருவர் ஒரு சின்ன வாகனத்தில் ஒரு பெண்ணும், சிறு குழந்தையை கையில் ஏந்தி எதிரே வந்துகொண்டிருந்தனர். துறவியானவர் அந்த வlயவரிடம் துறவற இல்லம் செல்லும் வழி தங்களுக்குத் தெரியுமா* கெட்டார். அப்பெரியவர் ஆம் தெரியும். இங்கு வழி சிரமமாக இருப்பதால் கவனமுடன் எங்களுடன் வாருங்கள் என்றார். இவரும் பயம் தெளிந்து அவர்களுடன் சென்றார். வழியெல்லாம் புண்ணிய நெறிகளைப் பற்றி பேசிக்கொண்டேச் சென்றனர். அவர்கள் பேசிவந்ததால் விரைவில் சென்று சேர்ந்தார். இல்லத்தை அடைந்ததும் நீங்கள் மூவரும் இரவு நேரத்தில் தங்கிச் செல்லுங்கள் என்றதும் மூவரும் மறைந்துபோயின்ர். துறவிக்கு அவர்கள் இயேசு மரி சூசை எனத்தெரிந்து நீண்ட நேரம் முழங்கால்படி இருந்து செபித்தார்.

நாமும் வான் வீட்டிற்கு செல்லும் வழிகாட்டியாகவும், அடைக்கலம் அளிப்பவராகவும் புனித சூசையப்பரை தெரிந்து கொள்வோம். (3 பர அரு பிதா)

செபம்

ஏரோது அரசரிடமிருந்து இயேசுவைக் காப்பாற்ற எகிப்து நாட்டிற்கு நடந்துசென்ற தந்தையாகிய புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். நீர் தேவனுடைய கட்டளைகளை மறுதலிக்காமல், முணுமுணுக்காமல் கீழ்ப்படிந்தீரே, நாங்கள் எல்லா செயல்களிலும் இறைச்சித்தத்திற்கு கீழ்ப்படிய செய்தருளும், நாங்கள் செய்த பாவத்தால் இயேசுவை இழந்து போகாதபடி செய்தருளும். ஆமென்.

அடிக்கடி சொல்ல வேண்டிய செபம்:

இறைவனின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்த புனித சூசையப்பரே நாங்களும் இறைச்சித்தத்திற்கு கீழ்ப்படிந்து நடக்கச் செய்தருளும்.  எல்லாவித துன்ப துயரங்களையும் அனுபவித்த தூய சூசையப்பரே! எங்களுக்கு வருகிற துன்ப துயரங்களை நாங்கள் பொறுமையோடு சகித்துக்கொள்ள உதவி செய்யும். ஏரோது மன்னனின் கொடுமையிலிருந்து இயேசுவைக் காப்பாற்ற பெரிதும் அல்லலுற்ற புனித சூசையப்பரே! நாங்கள் எங்கள் பாவங்களால் இயேசுவை இழந்து போகாதபடி உதவி செய்தருளும்.

செய்ய வேண்டிய நற்செயல்

சில பிற மதத்தவருக்கு அறிவுரை கூறுவது.