அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 12

புனித சூசையப்பர் அளவில்லாத துன்பங்கள் அனுபவித்ததை தியானிப்போம்.

தியானம்.

சிமியோன் என்ற புண்ணியவான் திருக்குழந்தையை கையிலெடுத்து, இவர் பலருக்கு பகையாளியாகவும் பலருக்கு மீட்பராகவும் இருப்பார்; இவர் துன்பப்படப்போவது அவமானம், மரணம் சம்பந்தப்பட்டதாக உமது இதயத்தினை அத்துன்ப வாள் ஊடுருவும் என்றார். அப்போது இவ்வார்த்தைகளைக் கேட்டு மனத்துயர் அடைந்ததோடு தம் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டார்.

மற்ற பெற்றோர் குழந்தைகளை அன்பு செய்வதைக் காட்டிலும் மிக அதிகமாக அன்பு செய்தார். அதனால் தன் சொந்த மக்களாகிய யூதர்களால் புறக்கணிக்கப்பட்டு, ஆதரவின்றியும், ஆறுதல் சொல்ல எவருமின்றி துன்பங்களை அனுபவிக்கப்போகிறார் என்ற செய்தியைக் கேட்டபோதும், நினைவு வந்த போதெல்லாம் அவர் இதயம் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்தது. அப்போது மனம் தளர்ந்து, ஏங்கி கண்ணிர் விட்டு அழுதார். இறைவா! உம்முடைய மகனுக்கு துன்ப சாவு வந்தாலும் அதனை மக்கள் புரிந்துகொண்டாலாவது பரவாயில்லை. ஆனால் இவர் துன்பப்பட்டு மரித்தாலும் மக்கள் நன்றியற்றவர்களாக கெட்டுப்போவது அவருக்கு மரணத்தைவிட அதிக துன்பம் அளிப்பதாக இருக்கும்.

அதை நினைத்து நினைத்து புனித சூசையப்பர் சாகும்வரை வருந்தினார். உமது சித்தத்தின்படி நடக்கட்டும் என்று செபித்துக் கொண்டார். தனக்கு அவமானம் என்றால் தாங்கிக்கொள்ளும் சக்தியுள்ள புனித சூசையப்பர் தன் மனைவியின் வேதனையை தாங்க முடியாமல் தத்தளித்தார். அவருடைய பக்தியும் பாசமும் உள்ள மனைவியின் இதயம் துன்பத்தால் நொறுக்கப்படும் என்பதை அவரால் தாங்க முடியவில்லை. தனக்குப் பிறகு மரியன்னை அனைத்து துன்பங்களையும் தனியே தாங்கிக்கொள்ள வேண்டும் என நினைத்து உள்ளம் உருகி வேதனைப்பட்டு அழுது புலம்பினார்.

தனது மகனால் மீட்பளித்த மக்களைப் பார்த்து புனித சூசையப்பர் வேதனை அடைந்தார். அவரால் மீட்கப்பட்ட மக்கள் நன்றியோடு வணங்காமல், அவரது அன்பு கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் பலர் அவரை நிந்தித்து, விரோதித்து , அலட்சியம் செய்தவர்களைப் பார்க்கும் போது அவர் மனம் சொல்லமுடியாத வேதனை அனுபவித்தது. அவர்கள் வான் வீட்டை இழந்து கொண்டிருக்கிறார்களே என்ற எண்ணம் மேலும் மேலும் வெகுவாக அவரை பாதித்தது.

நாம் புனித சூசையப்பர் அனுபவித்த வேதனையை கேட்கும் போது நாமும் வேதனைப்பட வேண்டும். மரியன்னையின் மனவேதனைக்கும் புனித சூசையப்பரின் மன வேதனைக்கும் பாவமே காரணம் என்பதை உணர்ந்து நாம் பாவத்தை முழுவதுமாக விட்டுவிட வேண்டும். நல்ல குழந்தையானது தன்னுடைய பெற்றோர் கவலை, துன்பப்படும்போது மனம் வருந்தி அவற்றிலிருந்து விடுபட முயற்சி செய்வார்கள். அதுபோல நமது தந்தையாக தூய சூசையப்பர் மனம் துயரப்படும்போது நாம் ஆறுதலளிக்க வேண்டுமாயின் அவரை வணங்கி, அன்பு செய்து, பரிகாரம் செய்ய பக்தி முயற்சிகளில் ஈடுபடுவோம்.

இயேசுகிறிஸ்து நம்மை பாவத்திலிருந்து மீட்கவே சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார். எனவே பாவத்திலிருந்து விடுபட்டு, பாவிகளை மனம் திருப்பி, நல்லவர்களை புண்ணிய வழியில் நிலை |றுத்தி நல்ல வாழ்வு வாழ புனித சூசையப்பரிடம் வேண்டுவோமாக!

புதுமை

இயேசு மரி சூசை வாழ்ந்த வீடு யூதேயா நாட்டில் உள்ள நாசரேத் என்னும் ஊரில் இருந்தது. பழையகால கிறிஸ்தவர்கள் அதை திருத்தலமாக கருதி வணங்கியதோடல்லாமல் பிறநாடுகளிலிருந்தும் மக்கள் திரளாக வணங்கி சென்றனர். 1250-இல் 5-ஆம் செலஸ்டின் என்னும் யாப்பரசரின் காலத்தில் நாசரேத்தில் இருந்த திருத்தல வீட்டினை இத்தாலியிலுள்ள லொரேத் என்னும் நகரத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு அவ்வில்லத்தை தரிசித்து வருவோர் மகத்தான நன்மைகளைப் பெற்று வருகின்றனர்.

சேசுசபை துறவியரில் பல்த்தசார் அல்வாரேஸ் என்ற குருவும் இருந்தார். அவர் இஸ்பானியா நாட்டிலிருந்து ரோம் நகருக்குச் சென்று அங்குள்ள திரு இல்லத்தினை தரிசிக்கச் சென்றார். அத்திரு இல்லத்தைக் கண்டு பேருவுவகை கொண்டார். தாங்கமுடியாத அளவு இன்பத்தில் திளைத்தபோது மரியன்னை அவருக்குத் தோன்றி அவருக்கு பல இரகசியங்களைத் தெரிவித்தார். அவர் மேலும் பக்தியில் வளர அவருக்கு ஆசிரியராகவும், நன்மாதிரிகையாகவும் தூய சூசையப்பரை தெரிந்து கொண்டு செபித்து வர வேண்டும். அவர் எப்போதும் ஆறுதலும் அடைக்கலமுமாய் இருப்பார் என்றார். அவர் தன் மரணம் வரை மரியன்னை கூறியதற்கு கட்டுப்பட்டு அவ்வாறே நடந்தார். அந்த இல்லத்தில் இருந்த பிற துறவிகளும் புனித சூசையப்பர் வழியைப் பின்பற்ற அரும்பாடுபட்டார். அவர் தூயவர்களுள் ஒருவராக உயர்த்தப்பட்டார் என புனித தெரேசம்மாள் உறுதி செய்தார். புனித சூசையப்பர் அவரை எல்லா வழிகளிலும் ஆசீர்வதித்தார்.

நமக்கு புனித சூசையப்பர் நல்லாசிரியராக விளங்குகிறார் என்பதைத் தெரிந்து கொண்டு நம்மால் முடிந்த அளவு கடைபிடிக்க முயலுவோம். (3 பர, அரு பிதா)

செபம்

பெருந்துன்பங்களை அனுபவித்த தந்தையாகிய புனித சூசையப்பரே உம்மை வணங்கி புகழ்கிறோம். தன்னுடைய மரணம் வரையில் இயேசுநாதரை பின்பற்றினிர், நாங்கள் அனுபவிக்கும் துன்பங்களை பொறுமையோடு ஏற்றுக் கொள்ள எங்களுக்கு நன்மாதிரிகையும் ஆறுதலுமானவரே. நாங்கள் இவ்வுலக செல்வங்கள், இன்பங்களில் அதிக ஈடுபாடு காட்டாமல் துன்பங்களில் ஆர்வமாய் இருக்கச் செய்ய உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.

இன்று சொல்ல வேண்டிய செபம்

வேதனை நிறைந்த புனித சூசையப்பரே! துன்பப்படுகிற எங்கள் மேல் இரக்கமாயிரும்! வேதனை நிறைந்த புனித சூசையப்பரே! எங்கள் துன்பங்களை நீக்கியருளும். வேதனை நிறைந்த புனித சூசையப்பரே! எம்மை உம்மோடு மோட்சத்தில் சேர்த்துக்கொள்ளும்.

செய்ய வேண்டிய நற்செயல்

நோயாளி ஒருவருக்கு ஆறுதல் கூறுவது.