நம்பிக்கையானது கணக்கற்ற வரப்பிரசாதங்களை பெற்றுத் தருகிறது

எனக்கு தங்களைக் கையளித்துள்ளவர்களுக்கு, என்னை பாவிகளும் உலகமும் அறியச் செய்யும்படி சில செய்திகளை அவர்களுக்கு சொல்கிறேன்.

இந்த தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்னை உண்மை - யாகவே அறிவார்களானால், என்னை மற்றவர்களும் அறியச் செய்யக் கூடியவர்களாவார்கள். ஆனால் அவர்களே என்னை அறியாதிருக்கையில் மற்றவர்களுக்கு எவ்விதம் என்னை அறிவிக்க முடியும்? அறியாத ஒருவர் மேல் அவர்களின் இருதயத்தில் எப்படி நேசம் இருக்க முடியும்? நன்கு அறியாதவருடன் மிக நெருக்கமாய் உரையாட முடியுமா? நம்பிக்கை எவ்விதம் ஏற்படக் கூடும்?

இத்தகைய ஆத்துமங்கள் உண்மையாகவே எவ்வளவு கொஞ்சமாக என்னை அறிகின்றனர்! என் தேவ இருதயத்தை எவ்வளவுக்கு குறைவாக அவர்கள் அறிந்திருக்கின்றனர்! அவர்களின் பலவீனங்களையும் தவறுதல்களையும் பார்த்து என் இருதயம் அவர்கள் பக்கமாய் கனிவுடன் போகின்றது. சிறப்பாக அவர்கள் தாழ்ச்சியுடன் தங்களின் இயலாமையையும், பலவீனங்களையும் ஏற்றுக் கொண்டு நம்பிக்கையுடன் என்னை நாடும் பொழுது அவர்கள் குற்றம் செய்யும் முன் எனக்கு ஏற்படுத்திய மகிமையைவிட அதிக மகிமையை உண்டாக்குகின்றனர்.

அவர்கள் தங்களுக்காகவோ அல்லது பிறருக்காகவோ செபிக்கையிலும் இவ்விதமே என்னை சந்தேகிப்பார்கள் என்றால் அவர்கள் என் இருதயத்தை மகிமைப்படுத்துவதில்லை .

நூற்றுவர் தலைவன் என்னிடம் வந்து அவனுடைய பணியாளனைக் குணப்படுத்த என்னை வேண்டிய பொழுது "நீர் என் வீட்டுக்கு வர நான் தகுதியானவனல்ல" என்று பெரும் தாழ்ச்சியுடன் கூறினான். அவனிடம் விசுவாசம் இருந்தது, நம்பிக்கையும் இருந்தது. "ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் பணியாளன் குணமடைவான்" என்று சொன்னான். என் இருதயத்தை அவன் சரியாகக் கண்டு பிடித்தான். என்மேல் முழு நம்பிக்கை கொண்டவருடைய மன்றாட்டுக்கு நான் செவி சாய்க்காமல் இருக்க முடியாதென அவன் அறிந்திருந்தான். இவ்விதம் அவன் என்னை மிகவும் மகிமைப்படுத்தினான். ஏனெனில் அவன் தாழ்ச்சியுடன் நம்பிக்கையும் கொண்டிருந் - தான். எனினும் இத்தனைக்கும் என்னால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு நான் என்னை அறிவித்துள்ளது - போல அவனுக்கு அறிவித்தது கிடையாது.

நம்பிக்கையானது எண்ணற்ற வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொடுக்கிறது. ஒருவன் தனக்காகவும் இவைகளைப் பெறலாம், மற்றவர்களுக்கும் பெற்றுக் கொடுக்கலாம். இதனை முற்றிலும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அப்படியானால் இன்னும் என்னை அறியாத பாக்கியமற்ற ஆத்துமங்களும் என் இருதயத்தை அறிய ஏதுவாகும்.

என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நன்கு உணர வேண்டுமென நான் விரும்புவது இதுவே. இதில் புதிது ஒன்றுமில்லை ; ஆனால் அவர்கள் தங்களின் விசுவாசம், நேசம், நம்பிக்கை இவை புத்துயிர் பெறச் செய்ய வேண்டும்.

உன்னுடைய ஒன்றுமில்லாமைக்கேற்ப என் வல்லமை உன்னைத் தாங்குகிறது.

நீ பாக்கியம் இல்லாதவனானால் நான் இனிமையும் இரக்கமும் நிறைந்தவன். என் இருதயம் உனக்கு அடைக்கல - மளிக்கும் இல்லம். அங்கு வந்து உனக்குத் தேவையான வற்றையும், நான் உன்னிடத்திலிருந்து எதிர்பார்ப்பவை - களையும் பெற்றுக் கொள்.

நீ உன்னுடைய ஒன்றுமில்லாமையை நோக்குவதற்குப் பதிலாக உன்னைத் தாங்கி நிற்கும் என் இருதய வல்லமையைப் பார். நீ கவலைப்பட அவசியமில்லை . நான் உன்னுடைய பலம், உன் காயங்களைக் குணப்படுத்துவேன். என்னிடம் நீ பயப்படக் காரணம் ஏதாவது உண்டா ? உன்மேல் நான் கொண்டுள்ள அன்பைப் பற்றி அல்லது என் இருதயத்தின் இரக்கத்தைப் பற்றி ஒருபோதும் சந்தேகம் கொள்ளாதே. உன்னுடைய பாக்கியமில்லாமை என்னை உன்பால் இழுக்கிறது. என்னுடைய உதவியில்லாமல் நீ என்ன? உன்னுடைய தாழ்மைக்கேற்ப நான் உனக்கு மிக அருகில் நெருங்கி இருக்கிறேன் என்பதை ஒருபோதும் மறவாதே.

உன் குற்றங்களைப் பற்றிக் கவலைப்படாதே. உன்னை புனிதனாக்க என்னால் முடியாதா? உன்னுடைய ஒன்றுமில்லாமையில் நான் உன்னைத் தேடி , என்னுடன் ஒன்றிக்கச் செய்வேன். நான் கேட்பதை மட்டும் நீ இல்லை என்று மறுக்கக் கூடாது.

உன் ஒன்றுமில்லாமையும் பாக்கியமில்லாமையும் என் அன்பை உன்பால் இழுக்கும் காந்தம் போல் இருக்கின்றன. தைரியத்தை இழந்துவிடாதே. ஏனெனில் உன் பலவீனத்தில் என் இரக்கம் மகிமைப்படுத்தப்படுகின்றது.

என் இருதயம் உன் பக்கமாய் இழுக்கப்படுகிறது, உன் தாழ்மையைப் பார்த்து நான் விலகுவதில்லை, உன் தாழ்மையை முன்னிட்டே நான் உன்னை நேசிக்கிறேன்.

உன் பாவங்களை முன்னிட்டு நான் உன்னை குறைவாக நேசிப்பேன் என ஒருபோதும் நினைக்காதே, என் இருதயம் உன்னை நேசிக்கிறது, உன்னை அது ஒருபோதும் கைவிடாது. நெருப்பானது எரித்து அழிக்கிறது என நீ அறிவாய், ஆனால் என் இருதயத்தின் குணங்கள் மன்னித்தல், தூய்மைப்படுத்துதல், நேசித்தல் இவைகளே. உன்னுடைய பலவீனமும், குற்றங்களும் எனக்குத் தெரியாதவைகளா? ஆனால் என் இருதயத் - தின் சுவாலைகள் அவைகளை தூய்மையாக்கி மன்னிக்கும்.

ஆத்துமங்கள் தங்கள் குறைகளையும் எனக்குக் கொடுக்க நான் விரும்புகிறேன் என நான் உன்னிடம் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன். இப்பொழுதும் நான் உனக்குச் சொல்கிறேன்; நீ என்னை அணுகத் துணியாவிட்டால் நானே உன்னிடம் வருவேன்.

ஆத்துமங்களிடம் பாக்கியமில்லாமையும், ஒன்றுமில்லாமையும், குற்றங்களும், பாவங்களும் மட்டுமே இருக்குமானால், இவற்றை ஒப்புக் கொடுக்கலாம். இவைகளை எனக்குக் கொடு, எல்லாம் எனக்குக் கொடு. ஆனால் ஆத்துமங்கள் என் இருதயத்தில் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். நான் உங்கள் அனைவரையும் மன்னிக்கிறேன், அனைவரையும் நேசிக்கிறேன், நானே அனைவரையும் புனிதப்படுத்துவேன்.