பலிப் பொருட்கள் தேவை

ஜோசபா, பூமியில் நான் மூட்ட வந்திருக்கும் நெருப்புக்கு நீ விறகு போல் இருக்க வேண்டும். ஏனெனில் பற்றி எரிய ஒன்று இல்லாமல் போனால் நெருப்பினால் என்ன பயன்? அதனால்தான் எப்பொழுதும் அதிகரிக்கும் அன்பினால் பற்றி எரியும் ஆத்துமங்கள் பலர் எனக்கு வேண்டும். என்மேல் நம்பிக்கை கொள்ளும் அன்பு, என்னையே நம்பி வாழும் அன்பே வேண்டும். என் இருதய சுவாலையில் அந்த இருதயங்கள் நெருப்பைப் பெற்று பூமியெங்கும் அந்த நெருப்பைப் பற்ற வைக்க வேண்டும்.

ஒரு ஆத்துமத்துக்கு நான் அளிக்கக்கூடிய சிறந்த பரிசு அதை நேசம், இரக்கம் இவற்றின் பலிப்பொருளாகத் தேர்ந்தெடுப்பதே. இவ்வாறு பாவிகளுக்காக பலியான என்னைப் போல் அந்த ஆத்துமத்தையும் விளங்கச் செய்கிறேன்.

எனக்கு ஆறுதல் தர சிறந்த வழியை நீ அறிவாயா? என்னை நேசி, பாவிகளுக்காக வேதனை அனுபவி , நான் கேட்கும் எதையும் இல்லை என்று சொல்லாதே. என் பாடுகளின் பணியை தொடர்ந்து நடத்தி, கடவுளின் கோபத்தை தணிக்கக்கூடிய ஆத்துமங்கள் எனக்குத் தேவை என்பதை மறந்து போகாதே. நானே உனக்கு இதில் உதவி செய்வேன்.

உன் பாவங்களுக்கு நான் பரிகாரம் செய்வேன்; நீ பாவிகளுக்காக பரிகாரம் செய். எனக்கு எதிராக பாவம் செய்கிறவர்கள் கணக்கற்றவர்கள். பலர் நித்தியத்துக்கும் வீணாகின்றனர். என்னால் அன்பாய் நேசிக்கப்பட்டு எனக்காக யாவற்றையும் தியாகம் செய்யத் தயாராய் இல்லாதவர்களே என் இருதயத்தில் மிகக் கொடிய காயத்தை ஏற்படுத்துகின்றனர். அப்படியிருந்தும் என் முழு இருதயத்தையும் நான் அவர்களுக்குக் கொடுக்காமலா இருக்கிறேன்?

என் இருதயத்தைக் கொண்டு பரிகாரம் செய். கடவுளுடைய நீதிக்கு பரிகாரம் செய்வாயாக. ஆத்துமங்களுக்காக அதை அன்பு பலியாக ஒப்புக் கொடு.

நான் உன்னுடன் இருப்பது போல நீ என்னுடன் இருப்பாயாக. நான் என்னை உன்னிடம் மறைத்திருப்பதுபோல நீ உன்னை என்னில் மறைப்பாயாக. நாம் ஒருவர் ஒருவரைத் தேற்றுவோம், ஏனெனில் நீ துன்பப்படுகையில் நான் துன்பமடைகிறேன். என் வேதனை உன்னுடைய வேதனையாகும்.

இன்று நான் என்னுடைய சிலுவையைப் பற்றி மட்டுமே உன்னிடம் பேசுவேன். சிலுவையால் நான் உலகத்தைக் காப்பாற்றினேன், சிலுவையாலேயே உலகத்தை விசுவாச சத்தியங்களுக்கும் அன்புப் பாதைக்கும் கொண்டு வருவேன்.

உனக்கு என் சித்தத்தை வெளிப்படுத்துவேன். சிலுவையிலிருந்து நான் உலகத்தைக் காப்பாற்றினேன்; என் பாடுகளால் உலகத்தைக் காப்பாற்றினேன்.

பாவமானது அளவற்ற மகத்துவம் நிறைந்த இறைவனுக்கு விரோதமான காரியம். ஆதலால் அளவற்ற பரிகாரம் தேவை. அதனாலதான் உன் வேதனைகளையும் உழைப்பையும் என் இருதயத்தின் அளவற்ற பேறுபலன்களுடன் ஒன்றித்து ஒப்புக் கொடுக்கும்படி உன்னிடம் கேட்கிறேன். என் இருதயம் உன்னுடையது என நீ நன்கு அறிவாய். அதை எடுத்து அதன் மூலமாய் பரிகாரம் செய்.

உன்னிடம் வருகிற ஆத்துமங்கள் என் இருதய இரக்கத்தை நேசித்து அதன்மீது நம்பிக்கை கொள்ளும்படிச் செய். என் அன்பில் அவைகளைத் தோய்த்திடு. என் இருதயத்தின் நன்மைத்தனத்திலும் இரக்கத்திலும் அவைகள் நம்பிக்கை கொள்ளும்படிச் செய். என்னைப் பற்றி நீ பேச முடிகின்ற - போதெல்லாம், பிறர் என்னை அறியச் செய்ய முடிந்த - போதெல்லாம், அவைகள் பயப்படக் கூடாதென்று சொல். ஏனெனில் நான் அன்பின் தேவன்.

மூன்று காரியங்களை நீ சிறப்பான விதத்தில் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

1. திருமணி ஆராதனை செய்யும் வழக்கம். ஏனெனில் தந்தையாம் இறைவனுக்கு அவருடைய திருக்குமாரனாகிய இயேசு கிறிஸ்துநாதர் வழியாக அளவற்ற பரிகாரம் செய்ய அது ஒரு சிறந்த வழி. 

2. என் ஐந்து காயங்களைக் குறித்து ஐந்து முறை கர்த்தர் கற்பித்த செபத்தை சொல்லும் வழக்கம். ஏனெனில் இந்தக் காயங்களின் வழியாகவே உலகம் மீட்புப் பெற்றது. 

3. என் தேவ இருதயத்துடன் எப்பொழுதும் ஒன்றித்திருக்கும் வழக்கம். ஏனெனில் இவ்விதம் ஒன்றித்தால் உன் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் நீ அளவற்ற பலன் பெறுவாய். 

என் வாழ்க்கை, இரத்தம், இருதயம் இவற்றை அடிக்கடி நாடு. இந்த இருதயத்தில் எவ்வித பயமுமின்றி உன் முழு நம்பிக்கையையும் வை. சிலரே இந்த இரகசியத்தை அறிவார்கள். நீ அதை அறிந்து அதனால் நலம் பெற நான் ஆசிக்கிறேன்.