குருக்களுக்காக ஜெபியுங்கள்!

இதற்காக முதலாவதாகக் குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்கள் ஆத்தும மேய்ப்பர்களே!

"மனிதர்கள் - பரிசுத்த வேதத்தை அழிக்க விரும்பும்போது, குருத்துவத்தையும், குருக்களையும் சேதப்படுத்துவதிலேயே தொடங்குகிறார்கள். ஏனெனில் குருக்கள் இல்லையேல், பலியுமில்லை, பரிசுத்த வேதமுமில்லை'' என்று அர்ச். மரிய வியான்னி கூறுகிறார்.

இன்று இந்த பயங்கரம் நிகழ்ந்தே விட்டது எனலாம். ஆன்மா, நித்தியம் மற்றும் நரகத்தைப் பற்றி 99 சதவீத குருக்கள் தங்கள் மந்தைக்குப் போதிப்பதை நிறுத்தி வெகு காலமாயிற்று!

ஆயர்களின் நிலையோ இன்னும் மோசம்! பெருவாரியான ஆயர்கள் இந்த நித்திய உண்மைகளைப் பகிரங்கமாக மறுத்துப் பேசும் போக்கினை சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது.

கட்டளை ஜெபங்கள், அனுதினப் பூசை, முன்மாதிரிகையான வாழ்வு ஆகியவை முற்கால மூடத்தனமாக குருக்களுக்குத் தோன்றுகின்றன!

பாவசங்கீர்த்தனத் தொட்டியாகிய நீதியாசனத்தில் கடவுளின் பிரதிநிதிகளாக இருக்க அவர்கள் மறுக்கிறார்கள்!

குருத்துவத்தின் முதன்மையான நோக்கமே கடவுளின் மகிமையும், தன்னுடையவும் பிறருடையவும் ஆன்ம அர்ச்சிப்பும்தான்.

இன்று உலக மனப் பான்மை மட்டுமே மிகப் பெரும்பாலானோரை ஆட்கொண்டிருக்கிறது! உலக செல்வங்களும், இன்பங்களும் அவர்களது ஆத்துமங்களின் கண்களை மறைக்கின்றன.

இவர்களில் பலர் (1) தங்கள் அழைத்தலைத் துறந்து, (2) சாவான பாவ அந்தஸ்தில் வாழ்ந்து, (3) திருச்சபையின் எதிரிகளாகி, தேவ துரோகிகளாக மரிக்கிறார்கள்.

இத்தாலியின் மோன்டிசியாரி, ஃபோன்டானெலில் காட்சி தந்த தேவ இரகசிய ரோஜா மாதா சிந்திய கண்ணீருக்குக் காரணமானவை இம்மூன்று பாவங்களே! இவையே மூன்று வாள்களாக மாதாவின் மாசற்ற இருதயத்தைத் துளைத்திருந்தன.

இவற்றிற்குப் பரிகாரமாக ஜெபம், தவம், பரித்தியாகம் செய்து ஒப்புக்கொடுக்கும்படி மாதா கேட்டுக்கொண்டார்கள்.

இத்தகைய குருக்களுக்காக ஜெபங்களும், பரித்தியாகங்களும் செய்து ஒப்புக்கொடுப்போம். நல்ல குருக்கள் ஏராளமாக வரும்படி ஜெபிப்போம்.

குருக்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மந்தைக்காகக் கடவுளுக்குக் கடுமையான கணக்கு ஒப்புவிக்க வேண்டியிருக்கும் என்பதை அடிக்கடி நினைத்துப்பார்க்கவேண்டும்.